சமூக “நீதி கட்சி” ஆரம்பித்தது எதற்காக?

Jan 08, 2021

சமூக “நீதி கட்சி” ஆரம்பித்தது எதற்காக?

இப்போது இருக்கும் வேகமான கால சூழலில் பக்கம் பக்கமாக வரலாறு சொன்னா அதை படிக்கும் மனநிலையில் யாருமில்லை என்பது நிதர்சனமான உண்மை , ஆனால் அதற்காக வரலாறு தெரியாமலும் இருக்க முடியாதல்லவா?

எதற்காக ஆரம்பிக்கப்பட்டது நீதிக்கட்சி?

என்ன நோக்கத்திற்காக தோற்றுவிக்கப்பட்டது நீதிக்கட்சி? என்பதை சில நிமிட வாசிப்பு கட்டுரையாக கொடுத்துள்ளேன்.

திராவிடம் பேசும் படிக்கும் எழுதும் அனைவருக்கும் தெரியும் நூறு ஆண்டுகால தமிழக (மெட்ராஸ் மாகாணம்) அரசியல் நகர்வுகளில் மிக முக்கிய பங்கு திராவிட கட்சிகளுக்கு உண்டு. திராவிடக் கட்சிகள், திராவிட இயக்கங்கள் அனைத்திற்கும் ஒரு கட்டமைக்கப்பட்ட ஆரம்பப் புள்ளியாக இருப்பது நீதி கட்சி தான். அரசியல் ரீதியாக நாம் பேசினால் நீதிக்கட்சியைப் பற்றி பேசாமல் நாம் திராவிடத்தை பேச முடியாது.

1912-ல் டாக்டர் சி.நடேசனாரின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்டது ‘மெட்ராஸ் யுனைடெட் லீக்’. அதுவே 1913 முதல் பிராமணர் அல்லாதாரைக் குறிக்க ‘திராவிடர் சங்கம்’ என்று புதுப் பெயர் பெற்றது.

1916-ல் டி.எம்.நாயர், தியாகராயர் உள்ளிட்டோர் முன்னின்று தொடங்கிய தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் பின்னர் நீதிக் கட்சியாக அழைக்கப்பெற்றது.

நீதிக் கட்சி திராவிடர் கழகம் ஆனது. திராவிடர் கழகத்திலிருந்து திமுகவும் அதிலிருந்து அதிமுகவும் உருவாயின. ஒட்டுமொத்தமாக இவற்றை ‘திராவிடர் இயக்கம்’ என்று ஒரு பொதுச் சொல்லால் குறிப்பதாகக் கொண்டால், இழிவுகள் பலவற்றிலிருந்து இந்தத் திராவிடர் இயக்கமே நம் மக்களை மீட்டெடுத்தது.

அது சரி எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஒரு கட்சியையோ ஒரு இயக்கத்தை தொடங்க மாட்டார்கள் அல்லவா?

அந்தக் காரணம் தெரிந்து கொண்டால் தானே நமக்கு இந்தக் கட்சி மட்டும் இந்த இயக்கங்கள் ஆரம்பிப்பதற்கான காரணம் புரியும்?

பிராமணர் அல்லாதார் இயக்கமான திராவிட இயக்கம் தோன்றியதற்கு முக்கியக் காரணம், காங்கிரஸில் ஆதிக்கம் செலுத்திய பிராமண வழக்கறிஞர்கள்தான், அதுமட்டுமில்லாமல் இன்ன பிற துறைகளிலும் அவர்கள் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. பிராமணர் அல்லாதோர் சில பேர் முன்னேறி இருந்தனர் ஆனால் அவர்கள் அனைவரும் பெரும் வசதி வாய்ப்பு பெற்றவர்களாக இருந்தனர்.

எடுத்துக்காட்டாக 1912-ல் சென்னை மாகாணத்தின் நிலை என்ன? துணை ஆட்சியர்களில் 55%, சார்பு நீதிபதி 82.5%, மாவட்ட முன்சீப்களில் 72.6% பிராமணர்கள். இந்தப் பதவிகளில் இந்து பிராமணர் அல்லாதார் முறையே 21.5%, 16.7%, 19.5%

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பதிவுசெய்யப்பட்ட 650 பட்டதாரிகளில் பிராமணர்கள் 452 பேர், பிராமணர் அல்லாத இந்துக்கள் 12 பேர், பிற இனத்தவர் 74 பேர்!

கல்வி, வேலைவாய்ப்பு நிலைதான் இப்படி என்றால் சமுதாய நிலை என்ன?

பிராமணர் அல்லாதார் உள்ளே சென்று உட்கார்ந்து சாப்பிட முடியாது.

எடுப்புச் சாப்பாடுதான் வாங்கிச் சென்று வெளியே சாப்பிட வேண்டும்.

சென்னையில் அன்றைய மவுன்ட் ரோடிலும், ஜார்ஜ் டவுனிலும் இருந்த உணவு விடுதிகளில், ‘பஞ்சமர்களும், நாய்களும், குஷ்டரோகிகளும் உள்ளே நுழையக் கூடாது’ என்று விளம்பரப் பலகைகளை வைத்திருந்தனர்.

ரயில்வே உணவு விடுதிகளில் பிராமணாள், இதராள் என்று விளம்பரப் பலகை வைக்கப்பட்டு இருந்தது. இது மட்டுமல்ல. இருப்புப் பாதைகள் போடப்பட்டு, ரயில் பயணம் தொடங்கிய காலத்தில், நான்கு வகைப் பெட்டிகள் இருந்தன.

இப்பேர்பட்ட வருணா அடக்குமுறைகளை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்டது சமூக”நீதி” கட்சி.

திராவிடர் என்ற பெயர் மாற்றமே திராவிட இயக்கத்தின் சாதனை என்று சொல்லலாம்.

சமூக நீதி, தமிழ், தமிழர் நலன் என்பதே எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு திராவிடர் இயக்கத்தின் உயிர்மூச்சாக இருந்திருக்கிறது. அதேபோல, பொதுத் தளத்தில் அது உருவாக்கிய கருத்துருவாக்கம், கட்சிக்கு அப்பாற்பட்டு ஆட்சியாளர்களைச் செயல்பட வைத்திருக்கிறது, வைக்கிறது.

இப்படி ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கட்சி செய்த அரசியல் மாற்றங்கள் பல அவற்றை அடுத்த பதிவில் காண்போம். இவை அனைத்தையும் இந்த கால இளைஞர்களுக்கு கொண்டு சேர்ப்போம்.

திராவிடத்தை கற்போம்!
திராவிடம் அறிவோம்!
திராவிடத்தை கற்பிப்போம்!

வாழ்க தமிழ்! தமிழ் வெல்லும்!

– திராவிட கிறுக்கன்