அப்படி என்னய்யா செய்தது திராவிடம்?

Jan 13, 2021

தலைப்பு போல இன்று பலர் இந்த கேள்வி கேட்கிறார்கள்? ஆனால் அதில் அதில் கேட்பவர்களை பாதிக்கும் மேல் தாங்கள் ஏற்கனவே பல திராவிட கருத்துகளை தங்களுக்கே தெரியாமல் உள்வாங்கிக் கொண்டு அதை பயன்படுத்தி வருகிறோம் என்பதை அறியாமல் உள்ளனர்!
மீதி பேர் அம்புலிமாமா கதைகளை மேடையில் கேட்டு அதுதான் உண்மை என்று நம்பி திராவிடத்தின் ஒரு பகுதிதான் தமிழ் தேசியம் என்பதை அறியாமல் அது ஒரு தனி சித்தாந்தம் என்று நினைத்துக்கொண்டு தவறாக எண்ணி புரிதல் இல்லாமல் பேசி வருகிறார்கள்!

சரி  என்ன தான்யா செய்தது திராவிடம் ?

எல்லா சாதியினரும் ஒன்றாக ஒரே மேடையில் அமர வைத்து அழகு பார்த்தது திராவிடம்.

ஜாதி பாகுபாடு இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் துண்டு போட்டு அண்ணன் தம்பிகளாக பழக சொல்லி கொடுத்தது திராவிடம்!

யாரும் உயர்ந்தவன் இல்லை யாரும் தாழ்ந்தவன் இல்லை என்று அனைவரையும் செருப்பு போட்டு நடக்க வைத்தது திராவிடம்!

மேல சட்டையும், தலையில் தலைப்பாகையும் , வேட்டியை நினைத்த நேரத்தில் மடித்து கட்டவும் முழங்காலுக்கு மேல் தூக்கி கட்டவும் துணிவு கொடுத்தது திராவிடம்!

பெயருக்குப் பின்னால் ஜாதியை போடாத மாநிலம் எது என்று கேட்டால் தமிழ்நாடு என்று இந்தியா முழுக்க சொல்லக்கூடிய அளவுக்கு அந்த பெயரை வாங்கித் தந்தது திராவிடம்!

பெண் பிள்ளைகளும் படிக்க வேண்டும் அவர்களுக்கு சொத்துரிமை தரவேண்டும் மற்றும் பெண் பிள்ளைகள் அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு சமமாக இருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு முதல் சொத்துரிமை வரை சட்டமாக இயற்றி தந்தது திராவிடம்!

ஒரு தாழ்த்தப்பட்ட சாதியினர் மேல் வகுப்பு சாதியினரை அய்யா என்று மட்டுமே அழைத்து வந்த மேடையில் எல்லோரும் சமம் என்று எல்லோர் பெயரையும் ஒரே பத்திரிகையில் போட்டு சமமாக நடத்த சொல்லி முன்னெடுத்தது அந்த திராவிடம் தான்!

அரைத்த விழுதை இன்று எல்லா சாதியினரும் சரிக்கு சமமாக அனைவரும் பெயரையும் ஒரே பத்திரிகையில் போடுமளவுக்கு முன்னேற்ரியதும் திராவிடம் தான்!

இன்று தமிழகத்தில் மதக்கலவரங்கள் வெடிக்காமல் இருப்பதற்கும் காரணம் திராவிடம் ஊட்டிய பகுத்தறிவு கொள்கை தான்!

தீவிர கடவுள் பக்தி உடையவரும் அடுத்த மதத்தினரை அன்போடு பார்க்க செய்தலும் திராவிடம் தான்!

எல்லாவற்றையும்விட  சமூக நீதியின் முதுகெலும்பான இட ஒதிக்கீடு பின்பற்றுவது தமிழ்நாடு மட்டும் தான் அதையும் செய்தது திராவிடம் தான்!

இந்தியாவே ஒரு பக்கம் நிற்கும் பொழுது தமிழ்நாடு மட்டும் இன்னொரு பக்கம் சுயமரியாதையுடன் பகுத்தறிந்து நிற்பதற்கு காரணம் திராவிடமே!

இவையெல்லாம் திராவிடம் என்னும் மலையின் ஒரு சில கற்களே, திராவிடம் செய்த சாதனைகள் சொல்லி மாளாது!

இன்னும் திராவிடம் கொடுத்த சிந்தனைகள், கருத்துக்கள், சித்தாந்தங்கள் உள்வாங்கி அரசியல்ரீதியாக, சட்டரீதியாக, சமூக நீதியாக, தமிழகம் பெற்ற முன்னேற்றங்கள் கணக்கிலடங்காதவை! அதை  கூறிக்கொண்டே போகலாம். ஆனால் அதை பல பேர் பல இடத்தில் பதிவு செய்து விட்டதால் இனிவரும் முத்தாய்ப்பான சில விடயங்களை மட்டுமே இங்கு கூறினேன்!

அப்படி என்னங்க செஞ்சது திராவிடம்?

அப்படி என்னங்க முன்னேறிவிட்டது தமிழ்நாடு? என்று கேட்பவர்கள் ஒரு முறை ஒரே முறை வட இந்திய மாநிலங்கள் சென்று அந்த மாநிலம் முழுவதும் சுற்றி பார்த்துவிட்டு வந்தாலே இனி பெரிய கட்டுரை எழுதுவார்கள் என்பதை ஆணித்தனமாக கூறிக்கொள்கிறேன்!

அதற்காக இந்த வளர்ச்சி போதுமா என்றால், இல்லை போதாது இன்னும் வளர வேண்டும்.

ஜாதி எல்லாம் திராவிடம் ஒழித்து விட்டதா என்றால் இல்லை முற்றிலுமாக ஒழிக்க வில்லை!
ஆனால் அதை ஒழிக்கும் பணியை முன்னெடுத்துள்ளோம் எல்லோரையும்விட நான்கு படி முன்னே உள்ளோம் இன்னும் முன்னேறிச் செல்ல வேண்டும் அதற்கு இந்த திராவிடத்தையும் அதன் சித்தாந்தத்தையும் சரியாக புரிந்து கொண்டு திராவிடர்கள் ஆகிய நாம் தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும்!

திராவிடம் அறிவோம்!
திராவிடம் பழகுவோம்!
தமிழ் வாழ்க!
தமிழ் வெல்லும்!

இப்படிக்கு,
அருண்
திராவிடன் குழு