கலைஞரும் குறளும் | பகுதி 2 [வள்ளுவனுக்கு வானுயர சிலை]

சென்ற கட்டுரையில் திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் செய்தவற்றைப் பார்த்தோம்.
இக்கட்டுரையில் திருவள்ளுவர் சிலை வைத்த கதையையும், சிலையைப் பற்றியும் காண்போமா?
மூன்றாவது முறையாக 1989- இல் திராவிடக் கட்சியான திமுகவின் கலைஞர் கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றிருந்த சமயம்,
காலையில் ஏதோ சிந்தனை வயப்பட்டவராக தன்னுடைய செயலர் ராஜமாணிக்கம் மூலமாக தனது மனதுக்கு நெருக்கமான சிற்பி மாமல்லபுர அரசுக் கட்டட மற்றும் சிற்ப கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் கணபதி ஸ்தபதியைத் தொடர்பு கொள்கிறார்.
அவரிடம், “ஸ்தபதியாரே, கன்னியாகுமரிக் கடற்கரையில் வள்ளுவருக்கு ஒரு சிலை வைக்க வேண்டும். நாடு இங்கே முடிகிறது என்று கூறுகிறார்கள் அல்லவா! இல்லை; இங்கே நம் தமிழ்நாட்டில் இருந்துதான் தொடங்குகிறது என்று சொல்கிற மாதிரி சிலை அமைய வேண்டும். அதுவும் குமரியில் இருந்து வள்ளுவர் நேராக இமயத்தை பார்க்கிற மாதிரி அமைய வேண்டும்” என்று கூறுகிறார்.
ஏன் கன்னியாகுமரியில் வைக்க வேண்டும் என்று கலைஞர் முடிவு செய்கிறார்? அதற்கு ஒரு காரணம் உண்டு.
அங்கு கடலில் விவேகானந்தர் அமர்ந்து தியானித்த பாறை உண்டு. கலாச்சாரத் தூதர்களில் ஒருவராக இருந்தவரை இந்துத்துவ சங்பரிவாரசக்திகள் ஒரு இந்துத்துவத்தின் அடையாளமாகவே விவேகானந்தரை உருமாற்றினார்கள்.
இந்தப்பாறைகளில் அமைக்கப்பட்ட நினைவிடம் அதற்கான சின்னங்களில் ஒன்றானது. அலைகள் மோதும் கடற்பாறையில் பறக்கும் காவிக்கொடி எங்கும் ஆக்கிரமித்திருந்தது.
எனவே காவியின் குறியீடாக இருக்கும் விவேகானந்தர் பாறையை விஞ்சும் விதத்தில் பிரம்மாண்டமாக வள்ளுவனுக்கு வானுயர சிலை அமைத்தார் கலைஞர்.
விவேகானந்தர் பாறையைக் காணச் செல்லும் மக்களைத் தானாக சற்றே தொலைவில் நிற்கும் வள்ளுவர் சிலை ஈர்ப்புவிசையால் ஈர்க்கத் தொடங்கும்.
அதுவரை தமிழகத்தில் தென்கோடி என்றால் நினைவுக்கு வரும் விவேகானந்தர் பாறையை பின்னுக்குத் தள்ளி இனி எந்தக் காலத்திலும் அது திருவள்ளுவர் சிலை என்று மக்கள் மனதில் நினைவுக்கு வரும் அளவிற்கு அதை பிரம்மாண்டமாக அமைத்து நமக்குத் தந்தவர் பேரறிஞர் அண்ணாவின் தம்பியும், தந்தை பெரியாரின் சீடனும் ஆன அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள்.
மசூதியை இடித்துத் தான் கோயில் கட்டுவோம் என்று இந்துத்துவ கும்பல்கள் இருக்கும் இந்த நாட்டில்தான் எந்த ஒரு சின்னத்தையும் இடிக்காமல், அழிக்காமல் ஆனால் அதைவிடச் சிறப்பாக ஒன்றைக் கட்டி அதை இருட்டடிப்பு செய்யக்கூடிய திறமை அந்த மதிநுட்பம்தான் அவரின் தனிச்சிறப்பு; திராவிடம் கற்றுத்தந்த அறிவுக்கூர்மை.
அவர் 1989-இல் இதை முதன் முதலில் கூறினார் என்று நினைத்தால் அதுதான் தவறு.
பின்பு எப்பொழுது கூறினார்?
திருவள்ளுவர் சிலை ஆரம்ப வரலாறு முதல் அதை கட்டி முடிக்கும்வரை காலவரிசைப்படி கொடுத்துள்ளேன்.
விவேகானந்தர் நினைவு மண்டபம் பாறையில் திருவள்ளுவருக்கு சிலை வைக்கலாம் எனப் பரிந்துரைத்து முழுத் திட்டம், வரைபடம் மற்றும் மதிப்பீட்டை அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியிடம் கொடுத்தார் ஏக்நாத் ரணடே.
1975-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கத் திட்டமும் அறிவிக்கப்பட்டது.
1979-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி அப்போதைய ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி, பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையில் எம்.ஜி.ஆர் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார்.
1990-91 இல் நிதிநிலையில் சிலை அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1990 செப்டம்பர் 6 ஆம் நாள் சிலை அமைக்கும் பணியை கலைஞர் மு.கருணாநிதி தொடங்கி வைத்தார்.
ஆனால் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கட்டுமானப்பணி கிடப்பில் போடப்பட்டது.
1997 – இல் மீண்டும் புத்துயிர் பெற்று பணி விரைவு படுத்தப்பட்டது.
இறுதியாக 2000 ஜனவரி 1-ம் தேதி அப்போதைய முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி வள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார்.
குமரிமுனையில் நின்று அச்சிலையை பார்க்கும் போது வள்ளுவன் நமக்கு ஏதோ ஒன்றை எடுத்துரைப்பது போல நமக்கு தோன்றும். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். “நான் இங்கு நின்று உங்களுக்கு வழி காட்டுகிறேன்; நீங்கள் ஆரியத்தை எதிர்த்து வீறு நடைபோடுங்கள் திராவிடர்களே!” என்று கூறுவதாகவும் இருக்கலாம்.
உலகத்திற்கே கொடையாகத் திருக்குறளை கொடுத்த திருவள்ளுவருக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்க 25 ஆண்டுகள் தேவைப்படுகிறது. எவ்வளவு முட்டுக்கட்டைகள்?!
அதுவும் திராவிட ஆட்சி இருக்கும்போதே அப்படி என்றால் பார்ப்பனியம் எப்படியெல்லாம் தமிழரின் அடையாளங்களை ஏற்படுத்த விடாமல் தடுக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். தொடர்ந்து ஆரியத்தை எதிர்த்துக் கொண்டே இருப்பதற்கு திராவிடம் ஒன்றுதான் பேராயுதம் அந்த ஆயுதத்தைக் கீழே போட நினைத்தால் நமக்கு மிஞ்சப்போவது அடிமைத்தனம் மட்டுமே!
ஆனால் பெரியாரும், திராவிடக் கருத்தியலும் இருக்கும் வரை ஆரியம் நம்மை ஆட்கொள்ள ஒருபோதும் விட மாட்டோம்!
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்நாடு!
—
திராவிடன்
No Comments