0

Enter your keyword

எம். எஸ். எஸ். பாண்டியன்

எம். எஸ். எஸ். பாண்டியன்

எம். எஸ். எஸ். பாண்டியன்

எம். எஸ். எஸ். பாண்டியன்!

இவரை பலரும் இன்று அறிந்து இருக்க மாட்டார்கள்.

தெரிந்தவர்களும் மறந்து போய் இருப்பார்கள். அறிந்தவர்களுக்கு நினைவூட்டவும், அறியாதவர்களுக்கு தெரியப்படுத்தவும் இந்தப் பதிவு.

எம். எஸ். எஸ். பாண்டியன் அவர்கள் ஒரு சமகால நிகழ்வு சார்ந்த வரலாற்று ஆய்வாளர்.

அது என்ன சமகால வரலாற்று ஆய்வு?

தான் வாழும் சமகால நிகழ்வுகளை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்வது உயிரோட்டமான நிகழ்வு. கடந்தகால ஆய்வு என்பது ஆவணங்கள் மீதான தொகுப்பாக அமையும்.

சமகால வரலாற்று ஆய்வு என்பது, ஆய்வாளனின் நேரடிப் பங்கேற்பாக அமையும். அதுவே சமகால வரலாற்று ஆய்வு. அவரது சமகால நிகழ்வு சார்ந்த வரலாற்று ஆய்வுகள் குறித்து இங்கு பதிவு செய்ய முயல்கிறேன்.

எம். எஸ். எஸ். பாண்டியன் சமூக ஆய்வாளரும் தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியரும் ஆவார்.

பெரியாரையும் அவரது சுயமரியாதைக் கருத்துக்களையும் வெளியுலகிற்குக் கொண்டு சென்றவர்களில் ஒருவர்.

திராவிடர் இயக்கம், தேசிய இனப் பிரச்சனைகள், சாதிய சிக்கல்கள், தமிழ்த் திரைப்படம் எனப் பல துறைகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார்.

நாகர்கோயில் ஸ்காட் கிறித்துவக் கல்லூரியில் பயின்று 1978 இல் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1980 ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டமும், 1987 இல் முனைவர் பட்டமும் பெற்றார்.

பின்னர், சென்னை வளர்ச்சிக் கல்விகள் கழகத்தில் சேர்ந்து பணியாற்றிய பின்னர் கல்கத்தா சி. எஸ். எஸ். எஸ் நிறுவனத்தில் சிலகாலம் பணியாற்றி, மீண்டும் சென்னை வளர்ச்சிக் கல்விகள் கழகத்தில் துணைப் பேராசிரியராக 12 ஆண்டு காலம் பணியாற்றினார்.

ஆக்ஸ்போர்டு, ஹவாய், மின்னிசோட்டா உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்த இவர் 2009 முதல் தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார்.

‘‘Economical and Political Weekly’  என்ற இதழின் வழியாகவே பாண்டியன் தனது பதிவுகளை மிகுதியாகச் செய்திருக்கிறார். அவ்விதழில் 1989 – 2014 வரை அவர் எழுதி இருக்கிறார்.

ஆனால் குறிப்பிட்டு ஒரு நூலின் பெயரை சொன்னால் மட்டும் இவர் யாரென்று சிலருக்குத் தெரியும்.

இப்போது இவரைப்பற்றிப் படித்துவிட்டால் அந்த நூலையும் படித்து அவர் எப்படி சமகால வரலாற்று ஆய்வு செய்திருக்கிறார் என்பது பலருக்கும் புரியும். ஆம் அவர் எழுதிய முக்கியமான நூல்களில் ஒன்று “பிம்பச் சிறை” ஆங்கிலத்தில் ‘The Image Trap – M.G. RamaChandran in Film and Politics’

இந்நூல் பலரும் குறிப்பிடுவதைப் போல் சினிமா என்ற ஊடகம் குறித்த புதிய அணுகுமுறையை முன்னெடுத்த நூல். தமிழ்ச் சமூகத்தில், இருபதாம் நூற்றாண்டில் உருவான ஒடுக்கப்பட்ட வெகுசனங்களை பெரும்பான்மையாகக் கொண்ட திராவிட இயக்க வரலாறு, எவ்வாறு தமிழ் சினிமா வரலாற்றோடு இரண்டறக் கலந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு உருவானது.

வேறு எவ்வகையான தகுதிகளும் இல்லாமல், சினிமா ஊடகத்தின் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டு, ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியும் என்பது உலகில் தமிழ்ச் சூழலில்தான் முதலில் நடந்தேறியது. இதன் தொடர்ச்சி தெலுங்குச் சூழலிலும் உருவானது.  அதை உடைத்து இந்த நூலில் குறிப்பிட்டு இருப்பார்

1989 ஜூலை 29-ல் ‘Culture and Subaltern Consciousness – An aspect of MGR Phenomenon’ என்ற விரிவான கட்டுரையை பாண்டியன் எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரையில் கிராம்ஸ்கியின் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் கருத்தை முன் வைக்கிறார்.

அதற்கான எடுத்துக்காட்டாக தமிழ்ச் சூழலில் எம்ஜிஆர் என்று அழைக்கப்படும் ஒரு மகா பிம்பம் கொண்ட மனிதர் சார்ந்த நடவடிக்கையையும் அவரை ஒட்டி நடந்த விடயங்களும் ஒரு சமகால வரலாற்று நிகழ்வாக எப்படி அமைகிறது என்பதையும் எடுத்துக் கூறியுள்ளார்.

பாண்டியனின் இந்த உரையாடல் தமிழ்ச் சமூகப் பொருளாதார மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு எவ்வகையிலும் உதவாது. ஒடுக்கப்பட்டவர்கள் மேலும் மேலும் சாதிய வடிவம், பாலின முரண்பாடு, பொருளாதார முரண் ஆகியவற்றோடு வாழும் அவலம் குறித்த புரிதல் தான் பாண்டியனின் உரையாடல்.

இந்நிகழ்வை அவர்கள் ‘புரட்சி’ என்ற சொல்லால் குறிப்பிடுவதும், ‘புரட்சித் தலைவன்’, ‘புரட்சித் தலைவி’ ஆகிய சொல்லாட்சிகளும் சமூகத்தின் நகைமுரண்களாக உள்ளன. பாண்டியனின் இவ்வகையான சமகால வரலாற்று ஆய்வு அவரது நினைவுகளை நம் முன் என்றும் தொடரச் செய்யும்.

ஒடுக்கப்பட்ட மக்கள் மேலும் மேலும் சாதிய ஒடுக்குமுறை, பாலின முரண்பாடு, பொருளாதார முரண்பாடு ஆகியவற்றோடு சேர்ந்தே வாழ்ந்து கொண்டு எந்த ஒரு மாற்றமும் அவர்கள் வாழ்வில் நேராத கணத்திலும் புரட்சி என்ற சொல்லை அடைமொழியாகப் பயன்படுத்திப் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி என்று நகை முரணாக உள்ளவற்றையும் திரு. பாண்டியனின் இந்த உரையாடல் நமக்கு உணர்த்தும்.

அதே வேளையில் அவரது இந்த உரையாடல் கவர்ச்சியாகவும், வெகுஜன மக்களின் பண்புகளைத் தத்துவார்த்த ரீதியாக புரிந்து கொள்வதற்கும் உதவும். அவர் எம்ஜிஆர் பற்றி மட்டும் எழுதவில்லை.

1991 மார்ச் EPW -இல் ‘Parasakthi : Life and Time of a DMK Film’ என்ற கட்டுரையை அவர் வெளியிட்டார். இந்தக் கட்டுரை முன்னர் திராவிட இயக்க அடையாளத்தோடு சினிமாவில் செயல்பட்டவர்கள், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின் எவ்விதம் செயல் படுகின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள உதவியது.

1952-இல் வெளிவந்த ‘பராசக்தி’ சினிமா மூலம் எவ்வகையில் அறிய முடிகிறது என்பதை விரிவான ஆவணங்களோடு பாண்டியன் முன் வைத்தார்.

தமிழ் சினிமா மூலம் 1950-1990 கால வரலாறு, பொருளாதாரம், தத்துவம் ஆகியவை இணைந்த சமூகப் புரிதலை பாண்டியன் தமது திராவிட இயக்க அடையாள அரசியல் பதிவுகள் சார்ந்த ஆய்வுகள் மூலம் கட்டமைத்தார்.

1989 எம்.ஜி.ஆர். குறித்தும் 1991-இல் ‘பராசக்தி’ குறித்தும் செய்த ஆய்வுகள் மூலம் தமிழ்ச் சமூகத்தின் அறியப்படாத வரலாற்றை அடையாளம் காட்டினார்

அன்றைய சூழலில் இடதுசாரிக் கருத்துநிலை செல்வாக்குப் பெற்ற காலம். தங்களை இடதுசாரிகள் என்று அடையாளப்படுத்தும் வகையில் அச்சு, மேடைப் பேச்சு, நாடகம் மற்றும் சினிமா ஆகியவற்றில் தி.மு.க.வினர் செயல்பட்டனர்.

1920களில் உருவான சுயமரியாதை இயக்கம் சார்ந்த திராவிடக் கருத்தியல் சார்ந்து 1950 களில் காங்கிரசுக்கு எதிரான செயல்பாடுகளை தி. மு. கழகத்தினர் மேற்கொண்டனர்.

சினிமா ஊடகம் அவர்களுக்குச் சாதகமாக அமைந்ததன் வடிவமே எம். ஜி. இராமச்சந்திரன். இந்தச் சூழலில் சிவாஜி கணேசன் அவர்களின் உணர்ச்சிகரமான நடிப்பால், பராசக்தி சினிமா ஒரு கருத்தியல் வடிவமாகவே இருந்தது. இந்த வரலாற்றைப் பாண்டியன் மிகத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார்.

இப்படிப் பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார் பாண்டியன் அவர்கள். அதன் தலைப்புகளில் கீழே நான் சிலவற்றை குறிப்பிட்டிருக்கிறேன் அதை படிக்க நினைப்பவர்கள் ‘‘Economical and Political Weekly’ கூகுள் வலைத்தளத்தில் தேடிப் படித்துக் கொள்ளலாம்.

அவற்றில் முக்கியமானவை சில:

 • 1996 ஏப்ரலில் ‘Tamil Cultural Elites and Cinema : Outline of An Argument’
 • 1993 அக்டோபரில்  EPW -இல் ‘ Denationalising the Past : Nation in E.V.Ramasamy’s Political Discourse
 • மே-ஜூன் 1994-இல் வெளிவந்தது. “Notes on the Transformation of ‘Dravidian’ Ideology : Tamilnadu : 1900-1940”
 • டிசம்பர் 1996-இல் “Towards National – Popular : Notes on ‘Self-respecters’ Tamil”  எழுதினார்.
 • One Step Outside Modernity : Caste, Identity Politics and Public Sphere”  என்னும் கட்டுரையை மே மாதம் 2002 எழுதினார்.
 • “Dilemmas of Public Reason : Secularism and Religious Violence in Contemporary India” மே-ஜூன் 2005 எழுதினார்.
 • 2007-இல் Brahmin and Non-Brahmin : Genealogies of the Tamil Political Present எனும் நூல் எழுதினார்.
 • Writing Ordinary Lives என்னும் EPW செப். 2008 எழுதினார்.
 • The Image Trap: M G Ramachandran in Films and Politics (1992)
 • Political Economy of Agrarian Change: Nacnchilnadu, c. 1880-1939, 1990
 • Muslims, Dalits and Fabrications of History: Subaltern Studies, Writings on South Asian History and Society, vol. 12, 2005 (தொகுப்பு)

பாண்டியன் என்ற சமூகவியல் ஆய்வு அறிஞனை மேலே பதிவுசெய்ய முயன்றுள்ளேன். இவை மிகவும் குறுகிய தகவல் உடைய பதிவுகள். நான் இவரைப் பற்றி எழுதினால் இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். மனிதர் அவ்வளவு ஆய்வு செய்து சமகால வரலாற்றை உரையாடலாக எழுதியுள்ளார்.

அவரின் ஆய்வு, உலகப் பயணம் குறித்து நாம் இன்னும் பேச வேண்டும். அதை ஒரு தொடராகவே எழுதக்கூடிய அளவுக்கு அவர் சமூகவியல் ஆய்வு செய்துள்ளார்.

இப்படி அறியப்பட்ட அறிஞர்களின் அறியப்படாதவற்றையும் தெரிந்துகொண்டு எப்படியெல்லாம் திராவிடத்திற்கும். தமிழுக்கும் இப்படி பலர் தொண்டாற்றி வந்துள்ளனர் என்பதையும் அறிந்து கொள்ளவேண்டும்.

சினிமா நடிகரைப் பற்றி தெரிந்து வைத்துக்கொண்ட அளவுக்கு இப்பேர்ப்பட்ட சமூகவியல் ஆய்வு அறிஞர்களை தெரிந்து வைத்துக் கொள்வதில்லை நமது இளைய தலைமுறையினர். அவர்களிடம் இப்பேர்பட்ட மனிதர்களை கொண்டு சேர்ப்போம்.

வாழ்க தமிழ்!

வாழ்க திராவிடம்!


திராவிடன்

No Comments

Post a Comment

Your email address will not be published.