0

Enter your keyword

சமூக இழிவு எது?

சமூக இழிவு எது?

சமூக இழிவு எது?

சமூக இழிவு என்றால் என்ன?

நம் நாட்டில் இந்தக் காலகட்டத்தில் உடனே அகற்ற விரும்பும் சமூக இழிவு எது என்று கேட்டால், அதற்கு மறுகணமே நமக்கு வரும் பதில் தீண்டாமை, மூடநம்பிக்கை, மதவெறி, இனவெறி, ஊழல், பெண்ணடிமை, பாலியல் கொடுமை, திரைத்துறை மோகம், போதைப் பழக்கங்கள், குடும்ப வன்முறை, குழந்தைத் தொழிலாளர் முறை, முதியோர் இல்லம், விபச்சாரம், மோசமான நிர்வாகம், இயற்கை வளங்களைச் சூறையாடுதல், சாதி வெறி, கொத்தடிமைத் முறை என்றெல்லாம் அவரவர் கருத்திற்கேற்ப சொல்லப்படும்.

ஆனால், இத்தனை இழிவுகளுக்கும் மேல் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் இழிவு என்பது அறிவுக்குறைபாடு. என்ன அறிவு குறைபாடா? நமது நாட்டில் தான் நிறையப் பேர் படிக்கிறார்கள். வெளிநாடு செல்கிறார்கள். கூகிள் தலைமை செயல் அதிகாரி கூட நமது நாடு தான் என்று நம்மைத் திருப்பிக் கேள்வி கேட்பார்கள்.

ஒரு படிப்பைப் படிப்பது வேறு; வாசித்து அறிவு பெறுவது வேறு. நான் கூற வருவது புத்தகங்களை வாசிக்காதிருப்பது எனும் மாபெரும் சமூக இழிவு தான். ஆம், புத்தக வாசிப்பு மிகவும் குறைந்து கொண்டு வருகிறது. குறிப்பாக இளைய சமுதாயத்தினரிடம். ஏனென்றால் புத்தகத்தை விட வேறு எதுவும் ஒருவரின் அறிவை, சிந்தனையைத் தூண்டி விடமுடியாது.

பெரியாரிய அம்பேத்கரிய சிந்தனைகளை வாசித்த ஒருவன் முதலில் வெறுத்து ஒதுக்கித் துறப்பது சாதிய அடையாளத்தைத்தான்.

திராவிடச் சித்தாந்தம், இந்தி எதிர்ப்பு போன்ற வரலாறுகளைப் படித்தவன், முதலில் எதிர்ப்பது இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பாகத்தான் இருக்கும். ஏனென்றால் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் தமிழிலும், தமிழ் மொழியிலும், நமது வாழ்வியலிலும் எப்படியெல்லாம் திணித்திருக்கிறார்கள் என்பது புத்தகங்கள்தான் நமக்குச் சொல்லிக் கொடுக்கின்றன; பேஸ்புக்கோ இன்ஸ்டாகிராமோ அல்ல.

வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துவிட்ட ஒருவனால் நடிகனின் கட் அவுட்டிற்குப் பால் அபிஷேகம் செய்ய முடியாது.

பழங்காலத் தமிழர்கள் வாழ்வியல் மற்றும் தத்துவங்களை வாசித்துவிட்ட ஒருவன் ஒருபோதும் ஒரு கார்ப்பரேட் சாமியாரின் காலடியில் அரை மயக்கத்தில் கிடக்க மாட்டான்.

அரசியல் நூல்களை வாசித்த ஒருவன் இந்த ஜனநாயகத்திற்கு தேசம் கொடுத்திருக்கிற விலை என்ன என்று அறிவான். முட்டாள்தனமாகச் சிலர் கூறும் ஆமைக்கறி கதைகளையும், குறுகிய போலி தேசியவாத இன அரசியலையும் ஒருபோதும் நம்ப மாட்டான்.

சூழழியல் நூலை வாசித்துவிட்டவன் வனப்பகுதியில் பீர் பாட்டிலை உடைத்து வீசமாட்டான். நெகிழிப்பைகளைக் காடுகளில் வீச மாட்டான்.

வாஞ்சிநாதன் ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி. ஆட்சியர் ஆஷ்துரையைச் சுட்டுக் கொன்றான் என்று படிப்பு சொல்லிக் கொடுக்கலாம். ஆனால் உண்மை, சனாதன தர்மத்தை எதிர்த்த ஒரே காரணத்திற்காகச் சமத்துவத்தைப் பேணிப் போற்றிக் கடைப்பிடித்த ஆட்சியர் ஆஷ்துரையைக் கொன்றான் என்றும், அவன் எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டி இந்தப் புத்தகங்கள்தான் வெளிக்கொண்டு வருகின்றன.

இன்று வரலாற்றைத் திரித்து சமூக ஊடகங்களில் எழுதப்படும் அனைத்தையும் உடைத்தெறியும் கருத்துகளைத் தெரிவிப்பது புத்தகங்களிலிருந்து பெற்ற அறிவால் தான்.

புத்தகங்களை வாசிக்காமலிருந்திருந்தால் இன்று சாவர்க்கர் நம் நாட்டின் தேசத் தந்தையாக ஆகியிருப்பார். இந்தியச் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டது ஆர்எஸ்எஸ் என்று பதியப்பட்டிருக்கும் ஒரு கருத்திற்கு எதிர்ப்பு வருகிறது என்றால் அந்தக் கருத்து தவறு என்பதை அறிந்தால் மட்டுமே சொல்ல முடியும். அது தவறு என்பது எப்படி நமக்குத் தெரியும்? படித்தால் மட்டுமே தெரியும். வாசிக்கவேண்டும்; புத்தகங்களை வாசித்தால் மட்டுமே சமூக அறிவும், அரசியல் அறிவும், நம்மைச் சுற்றி இருக்கும் வாழ்வியலும் தெரிந்துகொள்ள முடியும்.

உண்மையான சமூக இழிவு என்பது அறியாமையே. மனிதன் பண்பட, இன்னும் மேம்பட்டவனாக மாற, தான் வாழும் பூமியைக் காப்பாற்றி அடுத்தத் தலைமுறைக்களிக்க அவன் வாசித்தே ஆகவேண்டும்.

வாசியுங்கள்!

தமிழ் வாழ்க ! தமிழ் வெல்லும்!

திராவிடன் 

No Comments

Post a Comment

Your email address will not be published.