0

Enter your keyword

ஊருக்குத்தான் அறிவுரை!

ஊருக்குத்தான் அறிவுரை!

ஊருக்குத்தான் அறிவுரை!

ராம்நாத் கோவிந்த் அவர்களை இந்தியாவின் முதல் குடிமகனாக அமர்த்திய போதும், இப்பொழுது திரு எல். முருகன் அவர்களை மத்திய இணை அமைச்சராக, பிஜேபியின் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபியினர் பேசி வந்தது, வருவது, “நாங்கள் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து ஒருவரைத் தலைவராகவும், இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுத்திருக்கிறோம். ஆனால் இத்தனை ஆண்டுகளாக சமூகநீதி பேசி வரும் திராவிடக் கட்சிகள் அப்படி செய்து இருக்கின்றதா?” என்பதே.

ஆம். இதுவரை தலைவர் பொறுப்பில் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் திராவிடக் கட்சிகளில் தலைவராக இல்லை என்பது உண்மைதான், மறுப்பதற்கில்லை.

கட்சித்தலைவராக அப்படி அமர்த்துவது மட்டுமே சமூகநீதி ஆகிவிடுமா? அல்லது கட்சியில், ஆட்சியில், பொறுப்பில் அனைத்து சமுதாய மக்களையும் சமமாக உட்கார வைப்பது சமூகநீதி ஆகுமா?

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து அரசு வேலைகளிலும், டாக்டர், இன்ஜினியர் போன்ற வேலைகளிலும் ஒரு பிரிவினர் மட்டுமே உட்கார்ந்து இருந்த இந்தத் தமிழ்நாட்டில் இன்று குப்பனும், சுப்பனும் அவர்கள் பிள்ளைகளும் மருத்துவராக, பொறியாளராக, நீதிபதியாக, வழக்கறிஞராக, மாவட்ட ஆட்சியராக, மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளாக, நிர்வாக அதிகாரிகளாக பரவலாக உட்கார்ந்திருக்கிறார்களே? அவர்களை அங்கே உக்கார வைத்திருப்பது சமூகநீதி அல்லவா?

அதுதானே நாட்டிற்கு மிகவும் முக்கியம்? இதைத் தானே 60 ஆண்டு காலமாக செய்து வருகின்றன திராவிட கட்சிகள்?

இதில் மிகவும் முக்கியமான பங்கு முன்னாள் முதல்வர் திரு கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு இருக்கின்றது. இட ஒதுக்கீடு, படிப்பு மற்றும் வேலை வாய்ப்பில் அதை செயல்படுத்திக் காட்டியது அவர் முதல்வராக பதவியேற்ற பின்பு தான். பின்னர் வந்த எம்ஜிஆர் ,செல்வி ஜெயலலிதா, இன்றைய முதல்வர் மு க ஸ்டாலின் வரை அதை கடைப்பிடித்துக் கொண்டு வந்தார்கள்; இன்னும் காலத்திற்கும் கடைபிடிப்பார்கள்.

அது சரி நாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் என்ன? என்று கேட்கும் அறிவார்ந்த சங்கி நண்பர்களுக்கு,

ஒரு இயக்கம் என்றால் என்ன?
அதன் ஆணிவேர் என்பது எங்கே இருக்கிறது?
அதில் இருந்துதான் அனைத்தும் ஆரம்பிக்கத் தொடங்கும். ஜன சங்கமாக இருந்து, பாரதிய ஜனதா கட்சியாக மாறிய அரசியல் இயக்கத்திற்கு ஆணி வேறு யார்?
ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் எனும் ஆர்எஸ்எஸ்!

ஆர்எஸ்எஸ் தலைமையில், ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் கூட வேண்டாம், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அவர்கள் கீழ் நீங்கள் எல்லாம் வேலை பார்த்து இருந்தால், இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு உங்களுக்கு தார்மீக உரிமை உண்டு.

ஆனால் அப்படியா இருக்கின்றது?

ஆர்எஸ்எஸ் தலைமைக்குப் பார்ப்பன வகுப்பைத் தவிர்த்து வேறு யாராவது தலைமை ஏற்க முடியுமா? தப்பித்தவறி பார்ப்பனர் அல்லாத ஒருவர் பதவி ஏற்றாலும், மேல் ஜாதியைத் தவிர வேறு யாராவது அந்த பொறுப்பை வகிக்க முடியுமா? இதுவரை இருந்த 6 ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ராஜேந்திர சிங் என்ற ஒருவர் மட்டுமே பார்ப்பனரல்லாதவராக இருந்திருக்கிறார்.

அவர்கள் எல்லோரும் ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்கள். அதுவும் சித்பவன் பார்ப்பனர்கள் எனும் உயர்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள். தங்களின் வேராகக் கருதப்படும் ஆர்எஸ்எஸ்ஸில் இருந்து முதலில் மாற்றத்தைக் கொண்டு வரலாமே?

ஒருவேளை 1900-களின் ஆரம்பக் காலங்களில் தேசர்த மற்றும் கர்கதேஸ் பார்ப்பனர்கள், இவர்களை தீண்டத்தகாதவர்களாக நடத்தியதின் கோபமோ என்னவோ?

இவர்கள் இப்பொழுது, மற்றவர்களை அதே போல நடத்துகிறார்கள். ஆரம்பக் காலங்களில் இவர்கள் ஒடுக்கப்பட்டது எல்லாம் வேறு வரலாறு. அதை இன்னொரு பதிவில் பார்ப்போம். எந்த அளவு ஒடுக்கப்பட்டு இவர்களுக்குள் சண்டை இருந்ததென்றால், இந்த மூன்று பிரிவினரும் இணைந்து செயல்பட வேண்டுமென்று, திரு பாலகங்காதர் திலக் அவர்கள் வேண்டுகோள் விடுக்கும் அளவுக்குப் பிரச்சனைகள் நடந்தன.

இப்போது கதைக்கு வருவோம். எப்படி இவர்களை உயர் பதவிகளுக்கும் பிற பதவிகளுக்கும் வர விடாமல் அவர்கள் தடுத்தார்களோ, அதேபோல இப்பொழுது இவர்களின் ஆர்எஸ்எஸ் தலைமைப் பதவிக்கு வேற்றுச்  சமூகத்தை சேர்ந்தவர்களை பதவியில் அமர்த்த விரும்ப மாட்டேன் என்கிறார்கள்.

ஆகவே, இவர்கள் பிஜேபி ஆளும் ஒரு மாநிலத்தில் பரவலாக சமூக நீதியை நிலைநாட்டிவிட்டு பின்னர் திராவிடக் கட்சிகளுக்கு வகுப்பு எடுத்தால் அது பயனளிக்கலாம்.

நாங்கள் கேட்பதற்கு, இது பதிலா என்று கூட நமது சங்கி நண்பர்கள் கேட்கலாம். ஆம், இதுதான் பதில். நீங்கள் கேள்வி மட்டுமே கேட்டுக் கொண்டும், அதற்கு நாங்கள் பதில் மட்டுமே சொல்லிக் கொண்டும் இருந்த காலம் மலையேறிவிட்டது.

இனி நீங்களும், எங்கள் கேள்விகளுக்கு பதில் கூறியே ஆகவேண்டும். பதில் தராமல் மற்றவர்களிடம் இருந்து பதில் எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

ஆகவே சமூக நீதியை ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் இருந்து ஆரம்பித்து பிறகு உண்மையான சமூக நீதி அமைப்பான திராவிடக் கட்சிகளிடம் அன்பர்கள், நண்பர்கள் கேள்விகளைக் கேட்கலாம்.

நாங்கள் இப்பொழுது வெறும் ஆர்எஸ்எஸ் தலைமை பற்றிய கேள்வியை மட்டும்தான் கேட்டிருக்கிறோம். இன்னும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் உள்ள பல பதவிகள் பல வருடமாக எந்தச் சமூகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அதில் ஒன்றிரண்டு, சமீபகால மோடியின் ஆதரவால் எப்படிக் கை மாறியது என்றும் கேள்வி கேட்கவில்லை.

ஆர்எஸ்எஸின் முக்கிய கிளை அமைப்புகளான பாரதிய கிசான் சங்கம், பாரதிய மஸ்தூர் சங்கம், சேவா பாரதி, ABVP,  ராஷ்டிரிய சேவிகா சமிதி, வித்யா பாரதி, ஸ்வதேசி ஜாகரன் மஞ்ச், போன்ற பல துணை அமைப்புகளில், எந்த சமூகத்தினர் இத்தனை ஆண்டு காலங்களாக தலைமைப் பதவி வகித்து வந்துள்ளனர் என்றெல்லாம் நாங்கள் கேட்கவில்லை.

அதற்கு பதில் இருக்குமா என்று தெரியாது. ஆகவே தங்களை சுயபரிசோதனை செய்துகொண்டு சமூக நீதியை நிலைநாட்டிய பிறகு, மற்றவர்களிடம் கேள்வி கேட்பது தான் சரியாக இருக்கும் என்று கருதுகிறோம்.

சமூகநீதியை வெறும் பெயரளவில் பேசாமல், தங்கள் அமைப்புகளில் நிலைநாட்டி விட்டு, பிறகு சமூக நீதி வகுப்பை திராவிட கட்சிகளுக்கு பிஜேபியினர் எடுக்கலாமே?

ஒரு கட்சியின் தலைமைக்கு சமூக நீதி வேண்டுவோர் தங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் சமூக நீதியை நிலைநாட்டி விட்டார்களா என்பதையும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது என்பதையும் மறவாமல் இருக்க வேண்டும் சங்கிகள்.

சமூக நீதி என்பது சங்கிகளுக்கு வெறும் ஒரு சொல். ஆனால் தமிழர்களுக்கும், திராவிடத்திற்கும் அதுதான் தூண்!

ஜாதி மதத்தை வைத்து ஏமாற்றி மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் என்று நினைத்தால், இது வட நாடு அல்ல; திராவிட ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் திராவிட சித்தாந்தம் மேலோங்கி இருக்கும் பெரியாரின் மண் தமிழ்நாடு என்பதை அடிக்கடி இவர்கள் மறந்து விடுவதுதான் இந்த தசாப்தத்தின் மிகப் பெரிய நகைசுவையாக இருக்கும்.

தமிழக மக்களின் நலனுக்காக பெரியார் தந்த திராவிட முற்போக்கு பகுத்தறிவுக் கொள்கைகளும், ஆட்சி அதிகாரம், சட்டத்தின் மூலமாக சமூகநீதியை நடைமுறைப்படுத்திய திராவிடக் கட்சிகளின் ஆட்சியும் இருக்கும் வரை 1000 பாஜக வந்தாலும், தமிழகத்தில் ஒன்றும் செய்ய இயலாது என்பதே வரலாறு நமக்குச் சொல்லும் உண்மை. இன்னும் இதை நூறு வருடங்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டுமானால், திராவிடத்தைத் தாங்கிப் பிடிப்பது, நமக்கு ஒற்றைக் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

வாழ்க தமிழ்!

வாழ்க திராவிடம்!

வளர்க தமிழ்நாடு!

திராவிடன்

No Comments

Post a Comment

Your email address will not be published.