0

Enter your keyword

நாத்திகனாய் இருப்பதால் என்ன பயன்?

நாத்திகனாய் இருப்பதால் என்ன பயன்?

நாத்திகனாய் இருப்பதால் என்ன பயன்?

என்னிடம் பல பேர், “உனக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லையா? வர்ணாசிரமத்தைக் கடைபிடிக்கும் இந்து மதத்தைத்தான் எதிர்க்கிறீர்கள், இந்த மதத்தில் இல்லை என்றாலும் வேறு மதத்திலாவது நம்பிக்கை இருக்கலாம். அல்லவா?” என கேட்பதுண்டு. ஆனால் என்னைப் பொறுத்தவரை அனைத்து மதங்களும் ஏதோ ஒரு வகையில் பிற மதங்களை ஏற்றுக் கொள்ளாமல் தன் மதம் மட்டுமே சிறந்தது எனக் கூறுபவை ஆகும்.

இன்று நாம் அறிவியல் காலகட்டத்தில் இருப்பதால், எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளும் மன நிலையிலும், அதில் இருக்கும் மூடநம்பிக்கைகளை பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளாத சுய அறிவும் இருப்பதினால் எந்த மதமும் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

சரி ஆத்திகனாக இல்லாமல் நாத்திகனாக இருப்பதால் என்ன பயன் என்றும் பலபேர் கேட்டுள்ளனர். நானும் இதை பொது வெளியில் சொல்ல வேண்டும் என்று பலநாள் நினைத்ததுண்டு. இதோ இன்று கூறி விடுகிறேன். என்னய்யா, ஏதோ சிங்கிளாக இருப்பது எவ்வளவு ஆனந்தம் என்று கூறுவது போல் கூறுகிறாயே என்று நீங்கள் கேட்கலாம். இது கிட்டத்தட்ட அப்படித்தான். எப்படி என்று பார்ப்போம்!

நேரம் சேமித்தல் :

நாத்திகனாக இருந்தால் முதலில் கடவுளைத் தொழும் இடங்களுக்குச் செல்லத் தேவையில்லை. அதற்கான நேரம் மிச்சப்படுகிறது.

தோராயமாக, ஒருவர் கடவுளை கும்பிடும் நேரத்தையும் அம்மத ஆலயங்களுக்குச் செல்லும் நேரத்தையும் கணக்கிட்டுப் பார்த்தால் கிட்டத்தட்ட வாரத்தில் அரை நாட்களுக்கு மேல் செலவாகின்றது.

அதாவது மாதத்தில் சராசரியாக 2 முதல் 3 நாட்கள். வருடத்திற்கு ஒரு மாதம் அதை வேறு அவசியமுள்ள செயல்களைச் செய்வதற்குப் பயன்படுத்தலாம்.

நாங்களெல்லாம் வீட்டிலேயே வணங்குகிறோம், எங்களுக்கு அவ்வளவு நேரம் பிடிப்பதில்லை என்று கூறுவோர் உண்டு. ஆனால் நான் ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொள்வது ஒரு பக்தி கொண்ட ஆத்திகனின் பூஜைக்கான பொருட்கள் வாங்கும் நேரம், பண்டிகைகளுக்கு பொருட்கள் வாங்கி அதை அலங்காரம் செய்து செலவிடும் நேரம்.

குறிப்பாக தினமும் எமகண்டம், ராகு காலம் போன்றவற்றை அறவே பார்க்காமல் அனைத்து நேரங்களையும் நல்ல நேரமாக பார்க்கும் நாத்திகனின் பண்பு நேரத்தை மிச்சப்படுத்தி உதவும் என்பதுதான் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை.

எந்தச் செயலையும் செய்ய, நாள், நேரம், காலம் பார்க்கத் தேவையில்லை என்கிற சுதந்திரமும்  நாத்திகனுக்கு மட்டுமே உண்டு.

பண சேமிப்பு:

நாத்திகனிடம் பணம் நிறைய மிச்சமாகும். அவனிடம் சேமிப்பு நிறைய இருக்கும். எப்படிச் சொல்கிறேனென்றால் மேலே கூறியபடி பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லை; எந்தக் கோயில் குளங்களுக்கும் செல்வதில்லை என்றால் அங்கு செலவாகக் கூடிய பணமும் மிச்சம் ஆகின்றது.

ஒருவருக்கு வீடு என்பது மிகவும் அடிப்படையானது. பொதுவாக வீடு பார்ப்பவர்கள் வாஸ்து பார்ப்பார்கள். அதற்காக நிறைய செலவு செய்பவர்களும் உண்டு. அல்லது வாஸ்துப்படி வீடு வேண்டும் என்று பார்த்து வாடகைக்கு குடியேறுபவர்கள், அதிக வாடகை கொடுப்பதும் உண்டு. ஆனால் நாத்திகர்கள் வாஸ்து பார்க்க மாட்டார்கள். அதனால் மேலே சொன்ன செலவுகள் எதுவும் கிடையாது.

ஜோதிடம் பார்ப்பவர்கள் எதற்கெடுத்தாலும் நாள், நேரம், திசை மற்றும் ஜாதகம் பார்ப்பது  வழக்கமான ஒன்று. அதில் பெரும் பணச் செலவு ஏற்படும். அந்தச் செலவுகள் எதுவுமே நாத்திகர்களுக்குக் கிடையாது.

பெயரில் நியூமராலஜி பார்க்க மாட்டார்கள். குறிப்பாக பெரும்பாலும் சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்வதாலும், இன்னும் சிலர் எளிமையாக திருமணம் முடிப்பதாலும் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் பெரும் செலவான திருமண செலவு கூட நாத்திகர்களுக்கு மற்றவர்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவுதான்.

மூட நம்பிக்கைகள்:

நாத்திகர்களாக இருப்பதால் ஜாதகம், வாஸ்து, நியூமராலஜி, ஜோதிடர்கள் மற்றும் சாமியார்கள் அளந்து விடும் ஆன்மீக கதைகளையும், அறிவியலுக்குப் புறம்பான கதைகளையும் நம்ப வேண்டியதில்லை.

இதனால் நேர விரயம் மட்டுமல்ல, பண விரயமும் தடுக்கப்படுகின்றது. குறிப்பாக மன அமைதிக்காகவோ, நல்ல சிந்தனைகளைப் பெறவோ எந்த சாமியார்களிடம் செல்ல வேண்டிய தேவை நாத்திகர்களுக்கு ஏற்படுவதே இல்லை. ஏனென்றால் புத்தகங்களை விட பெரிய சிந்தனை ஊக்கி வேறொன்றும் இருந்துவிட முடியாது என்பதே, 99 சதவீத நாத்திகர்களின் கருத்தாகும்.

பகுத்தறிதல்:

எவரோ ஒருவர் புரட்டுகளைப் போகிற போக்கில் அடித்து விட்டாலும், அதை அப்படியே நம்பாமல் பகுத்தறிந்து அதற்குத் தரவுகள் இருக்கிறதா, என்று பார்த்துப் படித்து அறிந்த பின்பே அதை நம்பும் குணமுடையவர்கள் நாத்திகர்கள்.

இதனால் பல புரளிகள் பரவுவது தடுக்கப்படுகின்றது. இதை நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. உண்மை இதுதான். ஏனென்றால் பல புரளிகள் பகுத்தறிந்து பார்க்கப்படாமல் பரப்பப்படுவதால் தான் மதக் கலவரங்களும், ஜாதிக்கலவரங்களும் உண்டாகின்றன.

தமிழகத்தில் மதக்கலவரங்கள் பரவலாக காணக் கிடைப்பதில்லை. அதற்குக் காரணம் திராவிடமும், பெரியாரும் தான்.

இரண்டாயிரம் ஆண்டுகளாக வருணாசிரமத்தை, இடைநிலை சாதிகளின் மனதில் புகுத்திய பார்ப்பனியத்தின் ஜாதி வெறியை ஓரளவுக்கு கட்டுக்குள் வைத்திருப்பது தமிழ்நாடுதான் என்பதற்கு திராவிடக் கருத்தியலே காரணம்.

பெரும்பாலும் சுயமரியாதைத் திருமணம் செய்வதால், வரதட்சணை கேட்கும் பழக்கம் அறவே இருக்காது. பெண்ணடிமைத்தனம் முதல் எதெல்லாம் செய்யக்கூடாது என்று வேத, இதிகாச நூல்கள் சொல்கிறதோ அதை எல்லாம் கண்டுகொள்ள தேவையும் இருக்காது. ஆகையால் எந்தவித மூடப் பழக்க வழக்கமும் பின்பற்ற வேண்டிய அவசியம் அறவே இருக்காது.

இவ்வாறு சேமிக்கப்படும் நேரங்களில் வேறு சில தகவல்கள் மற்றும் இன்னபிற நூல்களைப் படித்து நமது அறிவாற்றலை மெருகேற்றிக் கொள்ள முடியும்.

நம்மால் செய்ய முடிந்த சிறுசிறு நற்செயல்களை சமூகத்திற்கும் மக்களுக்கும் செய்ய முடியும். ஆங்கிலத்தில் ‘குவாலிடி டைம்’ என்று கூறுவார்கள் அப்படிப்பட்ட பொன்னான நேரம் நமக்கு நிறையவே கிடைக்க வாய்ப்பிருக்கின்றது.

நாத்திகராக இருப்பதால், ‘நீங்கள் பெரியாரைப் படித்ததால் தான் நாத்திகம் பேசுகிறீர்கள்’ என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறேன்.

என் 25 வயது வரை ஆத்திகனாகவே வளர்க்கப்பட்டு, அந்த ஆத்திகம் சொல்லும் எல்லா கோட்பாடுகளையும் கடைப்பிடித்து, கோவிலுக்கும் சென்றவன். ஆனால் சுயமாக சில கேள்விகள் மனதில் தோன்றி, ஏன் நாம் கருவறை உள்ளே செல்லக்கூடாது, எதற்காக நாம் வெளியே நிற்க வேண்டும் என்று பல கேள்விகள் பெரியாரைப் படிப்பதற்கு முன்னமே தோன்றியதாலும், பல வாழ்க்கை நிகழ்வுகளைத் தாண்டி வந்ததாலும் அதற்குப் பிறகு பெரியாரையும் படித்ததாலும் நாத்திகனாக மாறினேனே தவிர, வெறும் பெரியார் சொன்னதை மட்டும் கேட்டு நாத்திகன் ஆகிவிடவில்லை.

நமக்குள் இருக்கும் சுயமரியாதை விழித்துக் கொள்ளும் பொழுது தானாகவே நாத்திகம் வெளிப்படும். இன்று பெயரளவில் ஆத்திகர்களாக இருப்பவர்கள் 40% மேல் தங்கள் பெற்றோர்களும், மனைவியும் ஏதாவது சொல்லப் போகிறார்கள் என்ற அச்சத்தினாலேயே அப்படி இருப்பவர்கள்தான்.

அதுமட்டுமல்லாமல், பார்ப்பனியத்தின் சூழ்ச்சியை அறியாமல், அது சொன்ன எல்லாவற்றையும் உண்மையென நம்பி இரண்டாயிரம் ஆண்டுகளாக மனதில் திணிக்கப்பட்டவை.

நம்மேல் நமது பெற்றோர்கள் திணிக்கும் பொழுது அதை நாம் சிறுவயது முதல் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் வளர்ந்த பிறகு ஆறாவது அறிவு வளர வளர, சுயமரியாதை வெளியே வர வர இவற்றையெல்லாம் கேள்வி கேட்கும் பண்பு நம்மிடையே வரத் தொடங்குவதால் நம்முள் இருக்கும் நாத்திகம் பிறக்கிறது.

இவை எல்லா மதத்திற்கும் பொருந்தும். ஆத்திகனாய் இருப்பதை விட நாத்திகனாக இருப்பதிலேயே நான் பெருமை கொள்கிறேன். அதற்காக ஆத்திகவாதிகளை நான் குறை சொல்லவில்லை. ஆத்திகத்திலிருக்கும் மூடப்பழக்க வழக்கங்களையும் தேவையில்லாதவற்றையும் பகுத்தறிந்து பார்த்தால் போதும் என்றுதான் வேண்டிக் கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழ் வாழ்க! தமிழ் வெல்லும்!

திராவிடன் 

No Comments

Post a Comment

Your email address will not be published.