மொழிப்போர்!

திராவிட இயக்கத்தின் மிக முக்கியமான பங்களிப்புகளில், தொடர் செயல்பாடுகளில் ஒன்று மொழியுரிமைக்கான போராட்டங்கள், தமிழுக்காக உயிர் நீத்த, அடி வாங்கி ரத்தம் சிந்திய போராளிகளின் தியாகங்கள்.
‘இந்தி’, ‘இந்து – இந்துஸ்தான்’ என்கிற ஒற்றைக் கலாச்சாரத்தில் இந்தியா சிக்காமல் இருக்கவும், குறிப்பாக இந்தி மொழியை தமிழர்கள் மீது திணித்தபோது வெகுண்டு எழுந்த தமிழ் இளைஞர்கள் நடத்திய ஒரு புரட்சிப் போராட்டமே மொழிப்போர்!
இன்றளவும் இந்திய துணைக்கண்டத்தில் தமிழகத்தை தனித்து இயங்கச் செய்வதற்கு இந்த மொழிப்போர் போராட்டமே மிக முக்கிய காரணங்களில் ஒன்று.
இந்தியை எதிர்த்து இன்று பல மாநிலங்களில் போராட்டங்களை ஆரம்பித்திருக்கலாம். ஆனால் அதற்குத் தமிழகம் விதை போட்டது சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு.
இன்று ஆங்கிலம் நீடித்து நிற்கவும், உலகமயச் சூழலில் இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களைவிட தமிழகம் முன்னணியாகப் போட்டியிட்டு நிற்கவும் மொழிப்போர் தியாகிகள் உதவியிருக்கிறார்கள் என்பதே வரலாறு. இதற்காக தங்கள் இன்னுயிரை நீத்தவர் பலர்.
அன்றைக்கு சென்னை மாகாணத் (இன்றைய தமிழ்நாடு) தேர்தலில் வெற்றி பெற்றதும், காங்கிரஸ் கட்சியின் அன்றைய முதல்வர் ராஜகோபாலாச்சாரி அவர்கள் (ராஜாஜி) தமிழகப் பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கப்பட உள்ளதாக அறிவித்தார்.
எந்த சட்டத்தையும் எடுத்தவுடன் அமல் படுத்த முடியாதல்லவா? ஆகையால் 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களை வைத்து வெள்ளோட்டம் பார்க்க 1938-ல் அரசு முயன்றபோதே பெரியாரிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. அந்த எதிர்ப்பையும் மீறி மேலும் 25 உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் அரசாணையை வெளியிட்டார் முதல்வர் ராஜகோபாலாச்சாரி அவர்கள்.
தொடர் போராட்டத்தில் இறங்கினார்கள் மாணவர்கள். டிசம்பர் 3 ‘இந்தி எதிர்ப்பு நாள்’ என்று அறிவிக்கப்பட்டு போராட்டங்கள் வெகுண்டு எழ ஆரம்பித்தது. கூட்டம் கூட்டமாக கைது செய்யப்பட்டார்கள்.
மாணவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். எங்கும் ஒடுக்குமுறை தாண்டவமாடியது. அப்போதுதான் போராட்டத்தின் முக்கியமான மற்றும் முதன்மையான நெருப்பு பற்றியது. தலைநகர் சென்னையைச் சேர்ந்த இளைஞர் நடராசனார் இந்தச் சித்திரவதையில் 1938, ஜனவரி 15 அன்று உயிரிழந்தார்.
அடுத்து 11.03.38 அன்று தாளமுத்து சிறைக் கொடுமையில் உயிரிழந்தார். தொடர்ந்து மேலும் பலர் கொடுமைப்படுத்தப்பட்டு உயிர்த் தியாகங்கள் நடந்தன. தமிழகமே திக்குமுக்காடத் தொடங்கியது. பெரியார் உட்பட ஆயிரக்கணக்கானோரின் கைதுகள், மிகவும் வீரியமாகப் பரவிய எதிர்ப்பின் விளைவாக இந்தித் திணிப்பு அன்று கைவிடப்பட்டது.
பின்னாளில் அவர்களின் உயிர்த் தியாகத்தை போற்றும் வகையில்தான் இன்று சென்னையில் அரசுக் கட்டிடம் ஒன்றிற்கு ‘தாளமுத்து நடராசன் மாளிகை’ என்று அவர்கள் பெயர் சூட்டி தமிழக அரசு அவர்களுக்கு நன்றி செலுத்துகிறது.
ஆனால், இந்திய விடுதலைக்குப் பிறகு அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்தின்போது மீண்டும் இந்தித் திணிப்பு வேறு ரூபத்தில் விஸ்வரூபம் எடுத்தது. நாட்டின் அலுவல் மொழியைத் தேர்ந்தெடுப்பதற்காக ஓட்டெடுப்பில் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வென்ற இந்தியை மட்டும் நாடு தழுவிய ஒரே அலுவல் மொழியாக கொண்டுவரத் திட்டமிட்டார்கள்.
இந்தி பேசாத மாநிலங்களில் கூட இந்திதான் அலுவல் மொழியாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ மொழியாகவும் அறிவிக்கப்படும் சூழல் ஏற்பட்டது.
அது நடந்தால், இந்நாட்டின் இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த 60% மக்கள் ஒரே நாளில் இரண்டாம் தரக் குடிமக்களாகிவிடுவார்கள். அவர்கள் நலனுக்காக ஆங்கிலமும் அலுவல் மொழியாக நீட்டிக்கப்பட வேண்டும். ஏனென்றால் ‘இதுவரை இந்தி என்றால் என்னவென்றே அறியாத மாநிலங்கள்தான் அதிகம்’ என்று போராடினார்கள் இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
இதிலும் அரசியலமைப்புச் சட்ட நிர்ணய சபையில் தமிழர்களின் குரல் ஓங்கி ஒலித்தது. அதன் விளைவாக, “ஆட்சி மொழி இந்தி, ஆனால், சில ஆண்டுகள் வரை ஆங்கிலமும் கூடுதலாகப் பயன்படுத்தப்படலாம்” என்ற கெடுவோடு 1950-ல் நடைமுறைக்கு வந்தது அரசியலமைப்புச் சட்டம்.
அன்று சற்றே பதட்டம் தணிந்து இருந்தாலும் முற்றிலும் அழிந்து விடாமல் தனலென எரிந்து கொண்டே இருந்தது இந்தியை இந்தியா முழுவதும் திணிக்கும் மோகம்.
இந்தக் கெடுவின்படி ஆங்கிலத்தை அறவே நீக்கிவிட்டு, ஜனவரி 26, 1965 முதல் இந்தியை மட்டும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்கும் நடவடிக்கைகள் ஒன்றிய அரசு தொடங்கிய போது, 1964-ல் கிளர்ந்தெழுந்தது தமிழகம்.
போராட்டங்கள் மறுபடியும் வெடிக்க ஆரம்பித்தன. மாணவர்கள் கூட்டம் கூட்டமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
“அய்யா தமிழைக் காப்பாற்றுங்கள். இந்தியை நுழைய விடாதீர்கள்” என்று முதல்வர் பக்தவச்சலமிடம் கெஞ்சிய இளைஞரைப் பார்த்து, “இந்தப் பைத்தியத்தைக் கைது செய்யுங்கள்” என்று போலிஸாருக்கு உத்தரவு போட்டார் முதல்வர். அந்த அளவிற்கு ஒன்றிய அரசும் அன்றைய தமிழக மாநில அரசும் இந்தியை திணிப்பதில் மும்முரமாக இருந்தன.
பல போராட்டங்கள் நடந்தாலும் விடியல் இல்லை. அந்த வேளையில்தான் ஒரு சம்பவம் நடந்தது. ஜனவரி 25 விடியற்காலை 4.30 மணிக்குத் தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டு “ஏ தமிழே நீ உயிர் வாழ நான் துடிதுடித்துச் சாகிறேன்” என்று முழக்கமிட்டபடி கருகிப்போனார் கீழப்பளுவூர் சின்னச்சாமி (1915-1939). அடுத்து கோடம்பாக்கம் சிவலிங்கம் தீக்குளித்தார். மொழிப்போர் போராட்டத்தில் ஈடுபட்ட சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் ராஜேந்திரனும், சிவலிங்கமும் போலிஸ் துப்பாக்கிச் சூட்டிற்கு இரையானார்கள்.
மேலும் 8 பேர் தீக்குளித்தும், விஷம் அருந்தியும் தற்கொலை செய்துகொள்ள, தமிழகம் தகித்தது. தமிழகமெங்கும் மாணவர்கள் களத்தில் குதித்தனர். பெரிய போராட்டம் தீப்பிழம்பாக தமிழகமே பற்றி எரிந்தது.
போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை அரசுக் கணக்கின்படியே 70 பேர்; இன்றைய அரசின் கணக்குகளே முன்னுக்குப்பின் முரணாக இருக்கும் பொழுது அன்றைய கணக்கைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். பல்லாயிரக்கணக்கானோர் கைதாயினர். இதன் விளைவாக ஒன்றிய சாஸ்திரி அரசு இறங்கி வந்தது. ஆங்கிலம் நீடிப்பதை உறுதிசெய்தது.
அதனால் தான் இன்றளவும் தமிழகத்திற்கு மட்டும் ஆங்கிலமும் தமிழும் ஆட்சி மொழியாகவும், ஒன்றிய அரசுடன் அலுவல் மொழியாக ஆங்கிலத்தையும் வைத்துக்கொள்ளலாம் என்று இருக்கின்றது. இது மற்ற மாநிலங்களுக்கு இல்லை. அத்தகைய தனித்துவம் தமிழகம் பெற்றதற்கு இத்தனை உயிர்த் தியாகங்களே காரணம்.
இதுதான் அந்த அந்த உத்தரவின் ஆங்கில மொழி பெயர்ப்பு.
Rule 1 (ii) of the Official Languages (Use for Official Purpose of the Union) Rules, 1976, is quite clear. It states: “They [the Rules] shall extend to the whole of India, except the State of Tamil Nadu.
அதுமட்டுமில்லாமல் இரண்டு பிரிவுகளாக பிரித்து ஒரு பிரிவு மாநிலங்களுக்கு இந்தியில் மட்டுமே சுற்றறிக்கையும், மற்ற மாநிலங்களுக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் சுற்றறிக்கை அனுப்பப்படும் என்று ஒன்றிய அரசு முடிவு செய்தது. அதிலும் தனித்து நின்றது தமிழகம். காரணம் இந்தியாவிலேயே மொழிக்காக போராட்டத்தை ஓரளவுக்கு நடத்திய ஒரே மாநிலம் தமிழகம்.
எதிலும் தனித்து நிற்கும் மாநிலம் தமிழகம் என்பதை இதிலும் நிரூபித்துக் காட்டினர் தமிழக மக்கள் மற்றும் மாணவர்கள். இந்தப் போராட்டத்தில் திராவிட கட்சிகளின் பங்கு பெரும்பங்கு.
அவர்கள் பலர் கைது மற்றும் அரசின் இன்னல்களுக்கு ஆளாகினர். ஆனால் திராவிட கட்சிகளை ஆட்சிக்குக் கொண்டுவந்ததிலும் முக்கியப் பங்கு வகித்தது இந்தப் போராட்டம்.
அதன்பிறகு இன்றுவரை தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளே நடந்து வருகின்றன. அதனால்தான் தமிழகமும் இன்றளவில் தனித்துவமான மாநிலமாக இருக்கின்றது.
இந்தியாவே மோடி அலையில் விழுந்த போது அதை எதிர்த்து வாக்களித்து தனது எதிர்ப்பைக் காட்டிய மாநிலம் தமிழகம். எதிலும் தனித்துவத்தை கடைபிடிக்கும் மாநிலம் அதற்கு முக்கிய காரணம் திராவிடம்.
மொழிப்போர் தியாகிகள் ஆரம்பித்து வைத்த நெருப்பு இன்றளவும் இந்தியாவின் பல மாநிலங்களில் பல பகுதிகளில் இந்தித் திணிப்பிற்கு எதிராக போராட வைத்திருக்கின்றது. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடகாவில், “எங்கள் மாநில பலகைகளில் இந்தி எதற்கு?” என்று கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கின்றனர்.
எதற்காக இந்த மொழிப்போர்? நாம் மொழிப்போர் நடத்தி இருக்கவில்லை என்றால், இன்று வட இந்தியாவில் பல மாநிலங்களில் தனது தாய் மொழி இரண்டாம் தர மொழியாகவும் இந்தி முதல்தர மொழியாகவும் இருப்பது போல இங்கும் நடந்து இருக்கும்.
வட இந்திய சினிமாக்களின் தலைமையகமான பாலிவுட் எனும் இந்தி திரை உலகம் மராட்டிய மாநிலத்தின் தாய்மொழியான மராட்டிய சினிமாவை இன்று எந்த அளவில் கொண்டு சென்று உள்ளது என்று அனைவரும் அறிந்ததே! ஆனால் அந்த நிலை தமிழ் சினிமாவுக்கு ஏற்படவில்லை; காரணம் மொழிப்பற்று மற்றும் நாம் நடத்திய போராட்டங்கள். கிட்டத்தட்ட 500 மொழிகளுக்கு மேல் இந்தி அழித்துள்ளது.
இன்று கர்நாடகத்திலும், ராஜஸ்தானிலும் அவர்கள் இலக்கியத்தை காப்பாற்ற மிகவும் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த நிலை தமிழருக்கு ஏற்படவில்லை. அதேபோல ஆங்கிலத்தை முன்னிறுத்திய தமிழகத்தின் நிலை இன்று பல மாநிலங்களின் நிலையை விட மேலோங்கி இருக்கின்றது.
எங்கு தொட்டால் எங்கு துலங்கும் என்று சிந்தித்துத் தான் திராவிட இயக்கங்கள் மற்றும் திராவிட தலைவர்கள் மொழிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். அதை கொடுக்காத பல மாநிலங்கள் இன்று பல இக்கட்டான சூழ்நிலைகளைச் சந்தித்து வந்து கொண்டிருக்கின்றன.
தமிழன் என்றும் தனித்துவமாக சிந்திப்பான்; அவனின் எண்ண ஓட்டம் என்றும் தனித்துவமாக இருக்கும் என்று வரலாற்றில் நிரூபிக்கக் கூடிய ஒரு நிகழ்வாகத் தான் இந்த மொழிப்போர் அமைந்திருக்கின்றது.
வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்நாடு!
—
திராவிடன்
No Comments