0

Enter your keyword

பெரியார் 143

பெரியார் 143

பெரியார் 143

பெரியாரின் 143-வது பிறந்தநாளான இன்று எழுதும் இக்கட்டுரையில் பெரியாரின் வாழ்க்கையைப் பற்றியோ, அவரின் கொள்கைகளைப் பற்றியோ அல்லது அவரது வரலாற்றைப் பற்றியோ நாம் பேசப் போவதில்லை. இதெல்லாம் ஏற்கெனவே நிறைய பேசிவிட்டோம்! அவற்றை தெரிந்துகொள்ள படிக்க புத்தகங்களும், இணையத்தில் பல காணொளிகளும் இருக்கின்றன. ஆனால் இன்று பேசப்போவது,

பெரியார் எப்படி இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்?

இளைஞர்கள் ஏன் கொண்டாடுகிறார்கள்?

143 ஆவது பிறந்த நாளான இன்று சமூக வலைதளங்களில் பெரியாரை கொண்டாடி தீர்ப்பவர்கள் இளைஞர்களே!

தான் பிறப்பதற்கு முன்னாடி மறைந்த ஒரு தலைவரை எப்படி இவ்வளவு இளைஞர்களால் கொண்டாட முடிகிறது?

பெரியவர்களை அவரை நோக்கி எது நகர்த்துகிறது?

இத்தனை லட்சம் இளைஞர்கள் தான் வாழும் காலத்திற்கு சரியாக நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் இறந்த ஒரு மனிதரை தங்கள்  தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்றால் அது எப்படி சாத்தியம்?

பெரியார் ஏன் கொண்டாடப்படுகிறார் என்றால் இந்தக் கால இளைஞர்கள் அவரைத் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கின்றனர். எல்லாக் கால இளைஞர்களின் எண்ண ஓட்டங்களை (pulse) நன்றாக தெரிந்து வைத்திருந்தவர் பெரியார். அதனால் தான் எல்லா வயது ஒத்த நபர்களும் பெரியாரைக் கொண்டாடுவதைக் காணலாம்.

ஒரு அரசியல் இயக்கம் என்றால் அதன் தலைவரைக் கொண்டாடுவார்கள். ஒரு ரசிகன் என்றால் அந்த நடிகரை கொண்டாடுவார்கள். சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்தவரை அந்தத் துறை சார்ந்தவர்கள் கொண்டாடுவார்கள். ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் அனைத்துத் தரப்பினரும் கொண்டாடும் ஒரு மனிதராக இருப்பவர்தான் பெரியார்.

பெரியார் என்பது ஒரு மனிதர் அல்ல. அவர் ஒரு சித்தாந்தம்.

நாற்பத்தி எட்டு வருடங்கள் ஆகியும் இன்னமும் எப்படி சனாதன வாதிகளுக்கும், போலி தமிழ் தேசியவாதிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கிறார் என்றால் எப்படி?

சனாதானம் ஏன் அவரை கண்டு பதறுகிறது என்றால், 95 வயது வரை தமிழகத்தின் குறுக்கிலும் நெடுக்கிலும் பயணித்து அவர் செய்த சம்பவங்கள் அப்படி.

இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் பெரியாரை இன்றும் தூக்கி  வைத்துக் கொண்டாடுகிறார்கள். ஏனென்றால் பெரியார் வெறும் கடவுள் எதிர்ப்பை மட்டும் சொல்லி விட்டுச் செல்லவில்லை. மனிதர்களுக்கு அடிப்படைத் தேவையான சுயமரியாதை, மொழியுரிமை, வகுப்புவாரி இட ஒதுக்கீடு, ஆண்-பெண் இருவரும் சமம் என்ற சமத்துவத்தையும், மனிதனாகப் பிறந்தால் அனைவரையும் சமமாகப் பார்க்கும் சமூகநீதியையும்தான் தன் காலம் முழுக்கச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.

கல்வி மூலமாக அல்லாமல் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை வைத்து ஒரு சிந்தனையாளராக உருவெடுத்தவர்தான் தந்தை பெரியார். அவர் கடவுள் எதிர்ப்பு செய்ததற்கு காரணம் சகல வேற்றுமைகளும், அதன் வேர்களும் சாதியிலேயே இருக்கின்றன என்பதால்,

அந்த சாதியத்தைத் தூக்கிப் பிடிப்பது சனாதான பார்ப்பனியம். அதற்கு ஆணிவேர் மதம். அந்த மதத்திற்கு ஆணிவேர் கடவுள் என்பதாலேயே அவர் கடவுள் இல்லை என்று பரப்புரை செய்தார்.

ஆனால் பெரியார் என்றால் கடவுள் எதிர்ப்பாளர், மறுப்பாளர் என்பதை மட்டுமே இன்றுவரை சனாதானவாதிகள் பரப்பி வருகின்றனர்.

ஏனென்றால் யாராக இருந்தாலும் நான் சொல்வதைக் கேளுங்கள், இதைப் பின்பற்றுங்கள், இதைச் செய்யுங்கள் என்றுதான் சொல்வார்களே தவிர “நானே சொன்னாலும் கேட்காதே! உன் சுய புத்திக்கு என்ன தோணுதோ அதை செய்! நான்கு முறை அதை யோசித்துப்பார்! தெரிந்துகொள்” என்று கூட இன்றுவரை உலகத்தில் எந்த ஒரு தலைவரும் சொன்னது கிடையாது.

அதேபோல தன்னை தலைவன் என்றும் சொல்லிக் கொண்டதே கிடையாது. மற்றவர்கள்தான் அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டார்களே தவிர, அவர் ஒருநாளும் நான் தலைவன் என்று கூறியது கிடையாது. அவர்தான் பெரியார். யார் ஒருவர் தனது புகழ் வேண்டாம், பதவி வேண்டாம், என்று ஒதுக்குகிறாரோ அவரைத்தேடித்தான் புகழும் பதவியும் வரும். அதற்கு எடுத்துக்காட்டு தான் பெரியார்.

இறந்து நாற்பத்தி எட்டு ஆண்டுகள் ஆகியும் இது பெரியார் மண். பெரியாரின் வழியில் தான் ஆட்சி செய்வோம், என்று ஒரு மாநிலம் தனித்து நிற்கிறது என்றால் அது பெரியாரின் அயராத முயற்சிக்குக் கிடைத்த புகழ்.

பெரியார் எதையெல்லாம் கனவு கண்டாரோ அவையெல்லாம் இன்று தமிழ்நாத்தில் நினைவாகி கொண்டிருக்கிறது. இன்றைய சூழலுக்கு ஏற்ற சட்ட திட்டங்களை ஐம்பது முதல் அறுபது வருடங்களுக்கு முன்பு ஒருவர் சிந்திக்க முடியும் என்றால், அவரின் சிந்தனைத் திறன் எவ்வாறு  இருந்திருக்க வேண்டும்?

எல்லா காலத்திற்கும் ஏதுவாக அமையும் அளவிற்குச் சிந்திப்பது சாதாரண விடயமல்ல. மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமைந்திருப்பதே அவருக்கு கிடைத்த மாபெரும் பதவி. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அவர் சின்னமாக (ICON) பார்க்கப்படுகிறார். ஏனென்றால் இன்றைய இளைஞர்கள் சுதந்திர கருத்துக்களைப் (Free Thinkers) பேசுபவர்களாக இருக்கிறார்கள்.

அவர்கள் மனதில் பட்டதை சொல்கிறார்கள்; செய்கிறார்கள். அதில் பெரும்பாலான கருத்துக்கள் பெரியாரால் ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னரே கூறப்பட்டவை. பெரும்பாலும் பெரியாரின் கருத்துக்கள் இன்றைய கால இளைஞர்களின் கருத்துக்களோடு ஒத்துப் போவதாலோ என்னவோ, அவரின் மேல் தானாக ஒரு ஈர்ப்பு ஏற்படுகின்றது. பெரியாரின் கருத்துக்களைப் படிக்கும் இளைஞர்கள் சரியாத் தானே சொல்லியிருக்கார், இதற்கு எதுக்கு இவ்வளவு எதிர்ப்பு என்ற உணர்வுதான் வருமே தவிர பெரும்பாலும் முரண்படுவதில்லை.

ஆனால் இன்னும் நிறைய இளைஞர்கள் மத்தியில் பெரியாரைக் கொண்டு சேர்க்க வேண்டும். ஆரியம் தனது சித்து வேலைகளைப் பல வழிகளில் செய்து கொண்டு வருகிறது. அதையெல்லாம் முறியடிக்க வேண்டுமென்றால் திராவிடமும், பெரியாரும் தான் ஒரே தீர்வு.

பெரியாரை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் பொருட்டு அதற்கான ஒரு பெரும் முயற்சியாகத்தான் தற்போதைய திமுக அரசு பெரியாருக்கு 135 அடி சிலை வைப்பது மற்றும் அதை ஒட்டிய திட்டங்களை ஆரம்பித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பெரியார் பிறந்த இந்நாள் “சமூகநீதி நாளாக” இனி கொண்டாடப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.

இன்றும் இளைஞர்களை மூளை சலவை செய்து ஒரு கூட்டம் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றது. பல இளைஞர்கள் அவர்களிடம் சிக்கி அம்புலிமாமா கதைகளை எல்லாம் நம்பி வாட்ஸ் அப்பில் படித்ததையெல்லாம் பிதற்றிக் கொண்டுதான் வருகிறார்கள். ஆனால், அதை நாம் புறந்தள்ளிவிட்டுப் பெரியாரை அவர்களிடம் கொண்டு சேர்ப்போம். சிறிது புரிய ஆரம்பித்துவிட்டால் இந்தப் பக்கம் வந்து விடுவார்கள். ஏனென்றால் பெரியாரின் தத்துவமும் சித்தாந்தமும் உள்வாங்கிப் படிக்க வேண்டியவை அல்ல. அவை நிதர்சனம். நமது வாழ்க்கையில் ஒரு தனி மனிதன் கடைபிடிக்க வேண்டியவை. அதை கடைபிடிக்க ஆரம்பித்தாலே போதும் அவர்கள் பெரியாரின் வழி நடக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

பெரியாரின் பிறந்தநாளான இன்று நாம் பெரியாரின் வழியில் பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பரப்புவோம் என்று உறுதி ஏற்போம்!

வாழ்க பெரியார்! வாழ்க திராவிடம்! வாழ்க தமிழ்!


திராவிடன்

No Comments

Post a Comment

Your email address will not be published.