0

Enter your keyword

சுயமரியாதை இயக்கம்.

சுயமரியாதை இயக்கம்.

சுயமரியாதை இயக்கம்.

திராவிடர் கழகத்தின் வரலாறு நாம் படிக்கும் பொழுது அதன் ஆரம்பப் புள்ளி சுயமரியாதை இயக்கம் என்பதை அறிவோம். பெரும்பாலும் திராவிடர் கழகத்தைப் பற்றிப் பேசும் இன்றைய தலைமுறையினர் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றிப் பேசுவதில்லை. ஆகவே திராவிடர் கழகத்தின் ஆணிவேரான சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி இன்று காண்போம்.

சுயமரியாதை இயக்கம் (Self-Respect Movement) சமுதாயத்தின் பிற்பட்ட மற்றும் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, மக்களின் வாழ்வியல் உரிமைக்காகவும், அவர்களின் மனித சமத்துவத்தை வலியுறுத்துவதற்காகவும் 1925-ஆம் ஆண்டு பெரியார் ஈ.வெ. இராமசாமி அவர்களால் இந்தியாவின், தமிழக மாநிலத்தில் (அப்போதைய சென்னை) தொடங்கப்பட்ட இயக்கம். 1944 ம் ஆண்டு முதல் இவ்வியக்கம் திராவிடர் கழகம் என்று மாற்றப்பட்டுத் திராவிடர்களின் நலன்களில் அக்கறை கொண்ட கட்சியாகச் செயல்பட்டது. ஆனால் திராவிடர் கழகத்திற்கான விதை போடப்பட்டது இந்த சுயமரியாதை இயக்கத்தில் தான்.

பெரியார் 1919-ஆம் ஆண்டுத் தனது வணிகத்தொழிலை நிறுத்திவிட்டுக் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். 1922-இல் சென்னை இராசதானியின் (மதராஸ் இராசதானி) காங்கிரஸ் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை, காங்கிரஸ் கட்சி ஆங்கில அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்பதை மிகத்தீவிரமாக முன்னிறுத்தினார். அவரின் முயற்சி அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களின் வர்க்க பேத மற்றும் பிறசாதியினரை வேற்றுமை கொண்டு பார்க்கும் தன்மையால் தோல்வியுற்றது. அதனால் 1925 இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கம் தொடங்கினார் பெரியார்.

இவ்வமைப்பு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் சுயமரியாதையை வலியுறுத்தி, வர்ணாசிரம தர்ம தத்துவத்தில் ஊறிய சமூகத்திடமிருந்து இவர்களை மீட்டெடுக்கவும், அவர்களைச் சமுதாயத்தின் மேல்மட்டத்திற்கு உயர்த்தவும் பாடுபட்டது. இவ்வியக்கத்தின் கொள்கை தமிழகத்தில் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் என்று அனைவரிடமும் பரவியது. சிங்கப்பூரில் தமிழவேள் ஜி சாரங்கபாணி தலைமையில் பரவியது.

சுயமரியாதை இயக்கம் முக்கியக் கொள்கைப் பரப்புரையாக, சமுதாயத்தின் ஏளனத்திற்கு உரிய மூடப் பழக்க வழக்கங்களையும், பரம்பரை வழக்கங்களையும் பின்பற்றப்படுவதைத் தொடர்ந்து எதிர்க்கும் நிலையை எடுத்தது, மக்களை அறிவின்மையிலிருந்து மீட்டெடுக்கவும், தெளிவுடையவர்களாக மாற்றவும் இதன் கொள்கைகள் வழிவகைச் செய்தன. பகுத்தறிவுச் சிந்தனையுடன் மக்களின் செயல்பாடுகள், பகுத்தறிவாளர்கள் பின்பற்றப்படவேண்டிய கடமைகளாகப் பலவற்றை இவ்வியக்கம் வலியுறுத்தியது.

சுயமரியாதைக்காரர்கள் பிரமாணப் புரோகிதரில்லா, சமயச்சடங்கில்லா திருமணங்கள் நடைபெற வலியுறுத்தினர்.

ஆணும், பெண்ணும் சமம். அவர்கள் வேறுபாடின்றி, சரிநிகர் சமமாக வாழும் முறையை வலியுறுத்தியது.

சாதி மறுப்பு திருமணத்தையும், கைம்பெண் திருமணத்தையும் ஊக்கப்படுத்தியது.

அளவில்லா குழந்தைகள் பெறுவதைத் தடுத்துக் குடும்பக் கட்டுப்பாட்டை 1920-களியிலேயே வலியுறுத்தியது.

கோயில்களில் சட்டத்திற்குப் புறம்பாகப் பின்பற்றப்படும் தேவதாசி முறையையும், குழந்தைத் திருமணத்தையும் தடை செய்தது.

இதனினும் முக்கியக் கொள்கையாக அரசு நிர்வாகப் பணி, கல்வி இவற்றில் இடவொதுக்கீடு முறையைக் கடைப்பிடிக்க மதராஸ் அரசு நிர்வாகத்தை 1928லேயே வலியுறுத்தியது.

இந்தப் பரப்புரை மற்றும் தத்துவங்களை முழுநேரச் செயல்பாடுகளாகப் பெரியார் 1925-லிருந்து செயல்படுத்தி வந்தார். இதைப் பரப்புவதற்கு ஏதுவாகத் தொடங்கப்பட்டதுதான் குடியரசு இதழ்; 1925ல் துவக்கினார். ஆங்கிலத்தில், ரிவோல்ட் (REVOLT) என்ற நாளிதழ் மூலம் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த மக்களுக்காகப் பிரசாரம் செய்தார்.

சுயமரியாதை இயக்கம் வெகு வேகமாக மக்களிடையே வளர்ந்தது. மக்களின் ஆதரவையும் நீதிக்கட்சித் தலைவர்களின் மூலமாகப் பெற்றது. 1929-இல் சுயமரியாதையாளர்கள் மாநாடு பட்டுக்கோட்டையில் எஸ்.குருசாமி மேற்பார்வையில் மதராஸ் மாகாணம் சார்பில் நடைபெற்றது. சுயமரியாதையாளர்களின் தலைமையைக் கே.வி.அழகிரிசாமி ஏற்றார். இம்மாநாட்டைத் தொடர்ந்து அன்றைய மதராஸ் மாகாணம் பல மாவட்டங்களில் சுயமரியாதையாளர்களின் கூட்டங்கள் நடைபெற்றன. இதற்கான பயிற்சிப் பட்டறையாக, பயிற்சி களமாக ஈரோடு மாநகரம் செயல்பட்டது. இதன் நோக்கம் சமுதாய மறுமலர்ச்சிக்காக மட்டுமில்லாமல் சமுதாயப் புரட்சிக்காகவும், இதன் மூலம் விழிப்புணர்வு பெற்ற புதிய சமுதாயத்தை உருவாக்கவும் வழி வகை செய்தது. அத்தகைய பயிற்சிப் பட்டறைகளில் உருவாகியவர்கள் தான் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன் போன்றோர்.

சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடு அன்றாட வாழ்க்கையின் அனைத்துத் தளங்களையும் தழுவியது. குறிப்பாகக் குடும்ப வாழ்க்கையில் உறைந்திருக்கும் சாதி, மத வெளிப்பாடுகளில் அது தலையிட்டது. அந்தத் தலையீடுகளில் முக்கியமானது சுயமரியாதை திருமணங்கள். சுயமரியாதை திருமணம் என்பது குடும்பம், உள்ளூர் சமூகத்தைப் பிற்போக்குத் தனங்களிலிருந்து மீட்கும் முயற்சியாக விளங்கியது. இயக்கம் துவங்கிய முப்பது வருடங்களில் அனைத்துத் தமிழக மாவட்டங்களிலும் சாதி மறுப்பு, பிராமணிய சடங்குகள் மறுப்பு, புரோகிதர் மற்றும் சமஸ்கிருத மந்திரங்கள் தவிர்த்த சுயமரியாதை திருமணங்கள் நடந்துள்ளன.

சுயமரியாதைத் திருமணங்கள் செய்வதில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பதை நாம் வரும் காலங்களில் பார்ப்போம்.

இன்று திராவிடம் தழைத்தோங்கி தமிழகத்தில் வேரூன்றி ஆலமரமாக நிற்பதற்கு விதை போட்டது சுயமரியாதை இயக்கம். அதிலிருந்து மருவித் தோன்றியதுதான் திராவிடர் கழகம். இன்றளவும் எல்லாத் திராவிடக் கட்சிகளுக்கும் தாய்க்கழகமாக இருப்பது திராவிடர் கழகம் தான். அதனால்தான் தலைவர் பதவியைப் பெரியாருக்காக என்று வைத்திருந்தார் திமுகவைத் தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா அவர்கள். கடைசிவரை பெரியாரை மட்டுமே தலைவராக ஏற்றுக் கொண்டார். இன்று தமிழகம் முன்னேற்றப் பாதையில் செல்ல உதவுவது திராவிடம். அந்தத் திராவிடச் சித்தாந்தத்தை ஆரம்பப் புள்ளியாக வைத்துத் தோன்றியது சுயமரியாதை இயக்கம். அந்த இயக்கத்தின் வாயிலாகத்தான் திராவிடர் கழகமும், திராவிடக் கட்சிகளும்.

அந்தத் திராவிடக் கட்சிகளின் தேர்தல் அரசியல் தான் இன்றைய தமிழகத்தின் முன்னேற்றத்தின் ஆணிவேர். ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானது சுயமரியாதை. அதுதான் இன்று தன்மானத்துடன் எதிர்த்துக் கேள்வி கேட்கவும் அநீதியைக் கண்டால் வெகுண்டு எழவும் சொல்லிக் கொடுத்திருக்கிறது.

அத்தகைய சுயமரியாதை இயக்கம் எப்படித் தோன்றியது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா?

வாழ்க திராவிடம்! வளர்க தமிழ்!

திராவிடன்

No Comments

Post a Comment

Your email address will not be published.