அரசு வேலையை பரவலாக்கியது திராவிடமே!

ஒரு பிரிவினர் மட்டுமே அரசு வேலைவாய்ப்பில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நேரம் அது.
இந்தியா விடுதலை அடைந்ததற்கு முன்பும் சரி, பின்பும் சரி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அரசு உயர் பதவிகள், 90% அரசு வேலைகள் மற்றும் தனியார் நிறுவன உயர் பதவிகள் என அனைத்திலும் இருந்தனர். அரசு பதவிகள் மட்டுமில்லாமல் அரசியல் இயக்கங்களிலும் கூட இவர்களது ஆதிக்கமே அதிகமாய் இருந்தது. ஒரு சிறு மக்கள் தொகை உள்ள அச்சமூகம், அதிகப்படியான மக்கள் தொகை உள்ள சமூகத்தை விட வேலைவாய்ப்பிலும் படிப்பிலும் எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தி வந்ததை எதிர்த்துத்தான் தந்தை பெரியார் கேள்வி கேட்டார்.
வகுப்புவாரி இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டுத் தான் பெரியார் தான் இருந்த காங்கிரசை விட்டு வெளியேறினார். ஆதிக்க எதிர்ப்பும், வகுப்பு வாரியாக ஒதுக்கீடு தராமல் காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்டதுமே அதற்கு ஒருவகையில் காரணமாக அமைந்தன.
இன்றும் வடநாட்டில் பெரும்பாலும் உயர் சாதியினரும் ஒரு குறிப்பிட்ட சாதியினரும்தான் உயர் பதவிகளில் இருக்கின்றார்கள். பெயருக்கு இட ஒதுக்கீட்டில் சில இடைநிலை சாதி மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வேலை கிடைக்கின்றது. அதுவும் சமூகநீதி காப்பாளன் திரு வி பி சிங் அவர்கள் மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல் செய்த பின்புதான் கொஞ்சமாவது அவர்களுக்கும் கிடைக்கப்பெற்றது.
ஆனால் தமிழகத்தில் நிலைமை வேறு. இந்திய ஒன்றியத்தில் சமூக நீதியையும் இட ஒதுக்கீட்டையும் பின்பற்றும் ஒரே மாநிலம் தமிழகம் தான் அதற்குக் காரணம் திராவிட ஆட்சி. பெரியாரின் சமூகநீதிக் கொள்கையை பின்பற்ற ஆரம்பித்த திராவிடக் கட்சிகள். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் வேலைகளில் இப்பொழுது பரவலாக அனைத்து சமூக மக்களும் வேலை செய்வதற்கு முழு முதற்காரணம் திராவிட ஆட்சி தான். காங்கிரஸ் ஆண்டுகொண்டிருந்த வரை இது சாத்தியமில்லாமல் இருந்தது. ஆனால் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் முதன்முதலில் அமைந்த திராவிட ஆட்சி முதல் இன்று வரை திராவிடக் கட்சிகளே தொடர்ந்து ஆட்சி செய்து வந்துள்ளதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
எப்படி செய்தார்கள்? பார்ப்போம்!
அரசு வேலைவாய்ப்பில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தவிர மற்ற சமூக மக்களும் வேலையில் இருக்க முக்கியமான காரணமாக இருந்தவர் முன்னாள் முதல்வர் திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்கள். அவர் முதல்வராக பதவியேற்ற பிறகு அவர் செய்த ஒரு காரியம்தான் இன்று தமிழகத்தில் இவ்வளவு பரவலாக அனைவரும் அரசு வேலைகளில் வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள். அதை அப்படியே பின்பற்றி மாற்றாமல் காத்து வந்தனர் பின்பு வந்த திராவிட ஆட்சியாளர்களான எம்ஜிஆரும், அம்மையார் ஜெயலலிதா அவர்களும். ஆனால் பாசிசத்தின் பிடியில் சிக்கி அவர்களுக்கு தலைவணங்கி தமிழர்களின் வேலைவாய்ப்புகளுக்கு வேட்டு வைத்த கதையும் தமிழகத்தில் கடந்த நான்கு வருடங்களாக (2017-2021) நடந்தது என்பதையும் மறக்க வேண்டாம்.
அரசு வேலைக்கு விண்ணப்பிக்க (TNPSC) தமிழ்நாடு அரசு தேர்வாணையம் என ஒன்றிருப்பது கூட OBC, BC, SC மாணவர்கள் அறியாத காலமது. ஏனென்றால் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல யாரும் இல்லை. பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களே அரசு வேலைகளில் ஒட்டிக் கொண்டிருந்தனர். கல்விப் பின்புலமில்லாத குடும்பங்களிலிருந்து புதிதாக பட்டப்படிப்பு முடித்து வரும் OBC, BC, SC கிராமப்புற மாணவர்களுக்குப் போதிய வழிகாட்டுதலோ, பயிற்சியோ இல்லாத காரணத்தால் இந்த நிலை ஏற்பட்டது.
பொதுப்பணித்துறையோ, மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டுக்குள் வரும் வருவாய்த்துறையோ, ஏனைய பத்திரப்பதிவு, கல்வித்துறை வாகனப்போக்குவரத்து (RTO), வணிகவரித்துறை இப்படி எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் உயர் பொறுப்பில், எழுத்தராக, மேலாளராக ஒரு பிரிவினர் மட்டுமே இருப்பார்கள். உதவியாளர் வேலையில் மற்ற சமூகப் பிரிவினர் இருந்தாலே அது பெரிய விடயம் என கொள்ளலாம்.
1972 -ம் வருடம்,
படித்து முடித்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு இளைஞரணி (Youth Corps) என்னும் ஒரு திட்டத்தை அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அறிவிக்கிறார்.
அதன்படி மாதம் 175 ரூபாய் உதவித்தொகை நிர்ணயிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியரால் OBC, BC, SC பட்டதாரிகளிடம் விண்ணப்பம் கோரப்பட்டு, மெரிட் மற்றும் சமூக நீதி அடிப்படையில் பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் கௌரவ உதவியாளராக நியமிக்கப்பட்டனர்.
அதோடு நின்றிருந்தால் இந்த ஒரு மாற்றம் ஏற்பட்டு இருக்காது. இந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பட்டதாரி இளைஞர்களை அந்தந்த வருட TNPSC போட்டித்தேர்வில் கலந்து கொள்ள, அவர்களுக்கு முன்கூட்டிய அனுபவம் மற்றும் வேலைத்திறன் தனி மதிப்பெண்கள் வழங்கி அவர்கள் அனைவரும் TNPSC-யால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்களிலும் Group IV , Group II , Group I என அனைத்துப்பதவிகளிலும் அமர வைக்கப்பட்டனர்.
இவ்வாறுதான் ஒரு பிரிவின் ஆதிக்கத்தை உடைத்து அனைத்து சமூக மக்களும், சமூக நீதியின் அடிப்படையில் பணியில் அமரச் செய்தது திராவிடம். அதைப் பின்பற்றும் திராவிட கட்சிகளும், சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தந்தாலும், அந்த இடங்களை நிரப்ப அவர்களைத் தேர்வு செய்ய வேண்டுமல்லவா? அவர்களைத் தயார் செய்ய வேண்டுமல்லவா? பணியிடங்களை நிறப்பாத போது அவை காலியாக இருக்கும். அதைக் காரணம் காட்டி இருப்பவர்களை வைத்து நிரப்பிக் கொள்ளலாம் என்று பல காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்தவர்களுக்குச் சம்மட்டி அடியாக விழுந்தது திராவிடத்தின் வளர்ச்சியும் திராவிட ஆட்சியின் வளர்ச்சியும்.
இப்படித்தான் ஒவ்வொரு விடயத்தையும் சந்தித்து சமூக நீதியின் பால் அனைத்து மக்களும் பயன்பெற திராவிட கட்சிகளும் அதற்குச் சிந்தனை ஊட்டிய திராவிடமும் இன்று ஆலமரமாய் தமிழகத்தில் வளர்ந்து நிற்கின்றது.
குப்பனும், சுப்பனும், கோவிந்தனும் இப்படித்தான் அரசு அதிகாரிகள் ஆனார்கள் எனபதை அறிந்து கொள்ளுங்கள். இன்றைய இளைஞர்களே இன்று பல பேருடைய அப்பாக்கள், அம்மாக்கள், அண்ணன், அக்கா, மாமா, அத்தை போன்ற பலர் அரசு வேலைகளில் இருப்பதற்குக் காரணம் திராவிடம் தான்.
பாவம், வட இந்தியர்களுக்குத்தான் திராவிடம் போல ஒரு சித்தாந்தமும், தலைவர்களும் கிடைக்காததால் இன்றும் அவர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இப்படி எண்ணிலடங்கா சாதனைகளை சத்தமே இல்லாமல் செய்து இன்று தமிழகத்தை ஒரு முன்னோடி மாநிலமாக மாற்றியது திராவிடம் தான். ஆகவே இளைஞர்களே! மக்களே! திராவிடத்தின் மாண்பையும் திராவிடத்தின் சாதனைகளையும் அனைவருக்கும் எடுத்துச் சொல்லி திராவிடத்தை எல்லோரிடமும் எடுத்துச் செல்வோம். எல்லோரும் பயன் பெறும் வகையில் பேசுவோம்! பகிர்வோம்!
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்நாடு!
—
திராவிடன்
No Comments