0

Enter your keyword

ஒடுக்குமுறைகளின் உச்சம் – புதிரை வண்ணார்கள்!

ஒடுக்குமுறைகளின் உச்சம் – புதிரை வண்ணார்கள்!

ஒடுக்குமுறைகளின் உச்சம் – புதிரை வண்ணார்கள்!

அது என்ன ஒடுக்குமுறையின் உச்சம்? படிப்பவர்கள் கேட்கலாம்.

இந்தியா பல ஜாதிகளால் மொழிகளாலும் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட ஒரு தேசம், இந்திய சுதந்திரத்திற்கு பிறகு ஒரு தேசமாக ஒன்றிணைத்து இருந்தாலும் மொழிகளாலும், ஜாதிகளாலும், மதங்களாலும் இன்னும் பிளவுபட்டு இருக்கிறது இந்த நாடு.

பார்ப்பனியம் வர்ணாசிரமத்தை தோற்றுவித்து பல ஜாதிகளை உருவாக்கி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடம் வேறுபாட்டை ஏற்படுத்தி அவர்களுக்குள் ஜாதி வெறியைத் தூண்டி அதில் குளிர் காய்கிறது. இன்று நாம் அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் இட ஒதுக்கீடு சமூக நீதி என்று போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு சமூகம் நாங்களும் இருக்கிறோம் என்று சொன்னாலும் கூட அவ்வளவாக வெளியே தெரியாமல் காலங்காலமாக ஒடுக்கப்பட்ட வருவது நம்மில் பல பேருக்கு தெரியாது!

நீ சூத்திரன் என்று ஒரு பிரிவினர் மற்ற எல்லாப்பிரிவினரையும் இழிவுபடுத்துவதை கண்டிருப்போம்.

நீ தாழ்த்தப்பட்ட ஜாதி என்று இடைநிலை ஜாதியினர் அவர்களை இழிவு படுத்துவதை கண்டிருப்போம்.

இன்று நம் மக்களுக்காக அனைவரும் இணைந்து போராடி ஓரளவு சமூகநீதியை தமிழகத்தில் நிலைநாட்டிக்கொண்டிருந்தாலும் இன்றும் சாதிக் கலவரங்கள் மற்றும் ஜாதி ஒடுக்குதல் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

சரி இந்த இடைநிலை ஜாதி மக்கள்தான் ஒடுக்கப்பட்டவர்களை மேலும் மேலும் ஜாதியை கொண்டு ஒடுக்கி வருகிறார்கள். அதனால் அந்தக் கொடுமையின் வீரியத்தையும், வலியையையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்கு புரியும். ஆகவே அவர்கள் மற்றவர்களை முன்னவர் போல் நடத்தாமல் ஒன்று சேர்ந்து சமமாக நடப்பார்கள்  என்று நாம் நினைத்தால் அங்குதான் நாம் தவறு செய்கிறோம்.

ஆதிக்க இடைநிலை சாதியினரால் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்படும் ஒரு சாதியினரே அவர்களுக்குள் உள்பிரிவுகளை வைத்துக் கொண்டு சாதிய ஒடுக்குமுறைகளை நடத்துவது பலருக்கு தெரியாத விஷயம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உள்ளேயே நான் பெரியவன் நீ சிறியவன் என்ற ஜாதி வெறி. அதிலும் விளிம்புநிலை சமூகமான புதிரை வண்ணார் மக்களையும் சாதிக் கொடுமையின் வலியை உணர்ந்த மக்களே கொடுமைப்படுத்தி ஒடுக்குவது இன்றைய தமிழகத்தில் இன்றும் நடந்து வரும் கொடுமை.
யூ டியூப் வலைதளத்தில் இந்த சமூக மக்களின் காணொளிகளை கண்டால் இரண்டு நாட்களுக்கு நம்மால் தூங்கவோ உணவு அருந்தவோ முடியாது.

Untouchables கேள்விபட்டு இருப்பீர்கள்?

Unseeables கேள்விப்பட்டதுண்டா? நாம் அந்தக் கொடுமை நமது தமிழ்நாட்டில் பெரியார் மண் என்று பெருமை பேசும் தமிழகத்தில் தான் நடக்கிறது. 21-ஆம் நூற்றாண்டில் இந்த கொடுமையை அனுபவிக்கும் அவர்கள் கடந்த காலத்தில் எவ்வளவு அடக்குமுறையைக் கண்டிருப்பார்கள் என்று நினைத்து பார்க்கவே பதை பதைப்பாக இருக்கிறது. இங்கு நான் அவர்கள் எப்படி எல்லாம் கொடுமை செய்யப்பட்டார்கள் என்று எழுத வரவில்லை. ஏனென்றால் அவ்வளவு தங்கள் கண் முன்னாடி இணையத்தில் கொட்டிக் கிடக்கிறது.

ஆனால் இப்படி ஒரு சமூகம் ஒடுக்கப்படுவது பலருக்கு தெரியாமல் இருக்கிறது. அந்த செய்தியைக் கொண்டு சேர்க்கவே இந்த கட்டுரை.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இந்த ஜாதியினருக்கு இவ்வளவு இட ஒதுக்கீடு கொடுங்கள் என்று கேட்கும் அளவிற்கு போகும் மக்கள் மிக குறைவான எண்ணிக்கையில் பல இடங்களில் கூட்டமாக கூட இல்லாமல் தனித்தனி குடும்பமாக பல ஊர்களில் ஒடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு, இரவில் மட்டுமே நடமாட வேண்டும் போன்ற குரூர ஒடுக்குதல் நடக்கும் இந்த மக்களுக்கு என்ன இடஒதுக்கீடு செய்ய போகிறார்கள்?

இவர்களுக்காக கேட்க எந்த ஒரு அமைப்பும் இல்லை. இவர்கள் எந்தக் கட்சியிலும் எந்த பொறுப்பிலும் இல்லை. ஆனாலும் சமூக நீதி மண்ணான தமிழகத்தில் அதுவும் திராவிட கட்சிகள் ஆட்சி செய்யும் இந்த மாநிலத்தில் அவர்களுக்காக ஒரு நலவாரியம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இவ்வாரியத்தால் மாணவர்களுக்கு தங்கு தடையின்றி கல்வி அறிவு பெற வசதியாக ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் செயல்படும் விடுதிகளில் புதிரை வண்ணார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்தப் பாகுபாடும் காட்டக் கூடாது.

விண்ணப்பித்த அனைவரையும் விடுதியில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

தாட்கோ மூலம் வழங்கப்படும் சிறு கடன்கள் வழங்கவும், சலவைத் தொழில் சார்ந்த கடைகள்  நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,  பல்வேறு தொழில்களுக்கான பயிற்சி வகுப்புகளை “தாட்கோ’ மூலம் நடத்தி தனியாக தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்க வாரியத்தின் மூலம் இந்த மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்” என்று அரசின் உத்தரவில் உள்ளது.

புதிரை வண்ணார் இன மக்களின் முன்னேற்றத்துக்காக அரசு மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்கள் வரும் காலங்களில் அவர்களுக்கு சரியான இட ஒதிக்கீடு மற்றும் பொறுப்புகளை சரிவர கிடைக்கும் என்று நம்புவோமாக.

“தீண்டாமைக்குள் தீண்டாமை: புதிரை வண்ணார் வாழ்வும் இருப்பும்” என்ற நூல் முடிந்தால் வாங்கிப் படியுங்கள் அதில் இவர்களது வாழ்வியலை ஒடுக்குமுறைகளை மிகவும் அழகாக விவரித்து இருக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.

சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம் “மாடத்தி” அதிலும் மிகவும் நேர்த்தியாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் தோழர் லீனா மணிமேகலை அவர்கள்.

இன்னும் பெரியார் கண்ட கனவை நாம் அடைய வேண்டுமென்றால் ஜாதியை விட்டொழித்து மனிதர்களாக வாழ முற்படுவோம். ஜாதியற்ற தமிழ் சமூகம் உருவாகும் நாளே தமிழகம் உண்மையான பகுத்தறிவு பூமியாக மாறும். அதை நோக்கி செல்வதற்கு திராவிடம் நமக்கு ஒரு முக்கியமான ஆயுதமாக இருக்கும்.

வாழ்க தமிழ்!

தமிழ் வெல்லும்!


திராவிடன்

No Comments

Post a Comment

Your email address will not be published.