பேரறிஞர் அண்ணா!

ஆம் திராவிடத்தை அரசியலாக்கி ஒரு தேர்தல் அரசியல் இயக்கமாக நிர்மாணித்து அதைத் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றக்கூடிய இயக்கமாக இன்றுவரை செயலாற்றிக் கொண்டிருக்கும் திராவிட கட்சிகளின் அடித்தளம் இவரே.
பேரறிஞர் அண்ணா (15.09.1909 – 03.02.1969)
தேர்தல் அரசியல் வேண்டாம் என்று பெரியார் தலைமையில் திராவிட கழகம் கடை பணி மட்டுமே ஆற்றிக் கொண்டிருந்த வேளையில் அரசியல் அதிகாரம் பெற்றால் தான் எதையும் சட்டமாக்கி மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்று தேர்தல் அரசு பாதையை தேர்ந்தெடுத்தவர் பேரறிஞர் அண்ணா! அவர் ஆரம்பித்த திராவிட முன்னேற்றக் கழகம் தான் எல்லாவற்றுக்கும் அடித்தளம். இன்று பல திராவிட கட்சிகள் இருந்தாலும் தாய் கழகம் என்று சொல்லும் பொழுது அதன் ஆரம்பப் புள்ளி அரசியல் இயக்கமான திராவிட முன்னேற்ற கழகத்தையும் அதை நிர்மாணித்த பேரறிஞர் அண்ணாவையே சாரும்.
தேர்தல் அரசியல் பாதையில் தமிழகம் கண்ட மாபெரும் தலைவர்.
‘தமிழர்’ என்ற சொல்லால் தாழ்த்தப்பட்டோர் முதல் பிராமணர் வரை எல்லா அடையாளங்கள், பேதங்களையும் களையும் கனவு அரசியலைத் தமிழர்களுக்குக் கொடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர்.
தலைவரே, எஜமான், ஐயா என்று சொற்கள் குறுகிய காலத்தில் தம்பி என்று உரிமையுடன் அழைத்து அனைவரும் சமம் என்று துண்டு போடும் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தவர் பேரறிஞர் அண்ணா.
மிட்டா மிராசுகள், பண்ணையார்களும் செல்வந்தர்களும் மேல்குடி மக்களுமே அரசியலில் பதவி பெறும் காலம் அது. அதில் குப்பனும் சுப்பனும் சாமானியத் தமிழர்களை அரசியலதிகாரத்தை நோக்கி நகர்த்தியவர். அவர் காலத்தில்தான் மாடசாமி குப்புசாமி எல்லாம் எம்எல்ஏ ஆனார்கள். எளியோரும் அரசியலில் பங்கு பெற முடியும் என்று உலகிற்கு ஒரு புதிய வழிகாட்டுதலை எடுத்துக் கூறியவர் செயலில் செய்து காட்டியவர் இவரே. பின்னாளில் இவரின் போர்ப் படைத் தளபதிகளில் ஒருவரான கலைஞர் கருணாநிதி அவர்கள் ஒரு அசைக்கமுடியாத அரசியல் ஆளுமையாக வந்தார் என்பது மிகையல்ல.
“இந்தி – இந்து இந்துஸ்தான் ஒற்றைக் கலாச்சார அரசியலுக்கு எதிராக எங்கும் தமிழ், எதிலும் தமிழர்!’ என்ற தமிழ் தேசிய அலையைத் தமிழக அரசியலின் பிரிக்க முடியாத அங்கமாக்கியவர். அன்று அண்ணா போட்ட விதைதான் இன்றும் தமிழகத்தில் வேறு இன்றி கிடைக்கிறது. இன்றும் அண்ணா வழியில் தான் இவர்களை நாம் எதிர்கொள்கிறோம் அன்றே சொன்னார் அண்ணா!
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
அறிஞர் அண்ணா அவரது கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமாகவும் அவரது கட்சியின் பண்பாடாகவும் இம்மூன்று சொற்களை முன்மொழிந்தார். பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படையான பண்பாடுகள் இவை. கட்டுப்பாடு, கடமை ஆகியவை தனிப்பட்டு ஓர் அமைப்புக்குள் இருப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய குணநலன்களாகவும் கண்ணியம் என்பது பொதுவாக மற்றவர்களுடனும், அதிலும் சமுதாயத்தில் – அரசியலில் கலந்து கொள்ளும் அனைவருடனும் ஒருவருக்கொருவர் காட்டிடும் மதிப்பு, மரியாதை என்பனவற்றைக் குறிக்கும். வேறுபட்ட கட்சிகள், மாறுபட்ட வெறுப்போ, விரோதமோ இல்லாமல், எதிர் நிற்பவர்களையும் நண்பர்களாகப் பாராட்டும் தன்மை பொதுவாழ்வில் மிகவும் தேவையான ஒரு பண்பாடு ஆகும். இவை அனைத்தையும் கடைபிடித்தவர் இத்தகைய ஒரு தாரக மந்திரத்தை தன் கட்சியினருக்கு சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். இந்தக் கட்டுப்பாடு கடமையுடன் இருப்பதால்தான் இன்றும் திராவிட முன்னேற்ற கழகம் 70 ஆண்டு தாண்டியும் கட்டுக்கோப்பாக இருக்கிறது.
இந்திய ஒன்றியத்தில் மாநிலங்களின் உரிமையைப் பேசும் வலிய குரலாக ‘மாநில சுயாட்சி’ முழக்கத்தை வளர்த்தெடுத்தவர். அரசியல், பொருளாதாரத் துறைகளில் முதுகலைப் பட்டங்களைப் பெற்ற அண்ணா, வரலாற்றிலும் இலக்கியத்திலும் ஆழ்ந்த வாசிப்பைக் கொண்டிருந்தவர். எழுத்து, பேச்சு, சினிமா எல்லாவற்றிலும் அரசியலைப் பொருத்தினார். அவருடைய அடுக்குமொழிப் பேச்சு தமிழுக்கு ஒரு புதிய ஆபரணமானது. அவர் பேசுவது எளிமையான நடையிலும் சாமானிய மக்களுக்கும் அறிவு தேடலையும் இலக்கியக் காதலையும் அது உண்டாக்கியது
திமுகவின் மாலை நேரக் கூட்டங்கள் மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகளாக மாறின. தமிழ் இளைஞர்கள் அரசியல் நோக்கி அலையலையாக வந்தனர். இளைஞர்கள் தான் நாளைய நம்பிக்கை என்று இளைஞர்களின் கட்சியாக வளர்ந்து எடுத்தவர் அண்ணா, இளைஞர்கள்தான் நாளை நாட்டைக் காக்க போகிறவர்கள் அவர்கள் கையில்தான் அரசியல் இருக்க வேண்டும் என்று அன்றே கணித்தவர் அண்ணா.
பெரியாரிடமிருந்து பிரிந்து வந்து திமுகவைத் தொடங்கினாலும், “நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் – பெரியார்” என்று சொன்ன அண்ணா, கட்சியின் தலைவர் பதவியை மானசீகமாகத் தன் தலைவருக்கு ஒதுக்கியவர். தன் ஆட்சியையும் தன் தலைவருக்கே சமர்ப்பித்தவர். பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகளை அரசுத்தளத்தில் கொண்டு செல்வதற்கான பாதையை வகுத்தவர். உலகின் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றைக் கொண்டிருந்த தமிழ் நிலத்துக்குத் தமிழ்நாடு’ என்று பெயர் தந்தது அண்ணாவின் ஆட்சியே.
ஐம்பதாண்டு திராவிடக் கட்சிகள் இன்று சாதித்திருக்கும் சாதனைகள் எதுவாயினும் அதற்கான தடம் அண்ணா போட்டுத்தந்தது.
மிகச் சிறந்த ஜனநாயகவாதி. தமிழகம் கண்ட மிக எளிமையான ஆட்சியாளர்.
வெகுசீக்கிரம் நிகழ்ந்த அண்ணாவின் மரணம் இந்திய அரசியல் கண்ட பேரிழப்புகளில் ஒன்று. உலகிலேயே அதிகமானோர் பங்கேற்ற இறுதி ஊர்வலம் அண்ணாவினுடையது.
தமிழ் மக்களின் இதயத்தில் நீங்கா இடம்பெற்ற அண்ணாவின் கொள்கைகளே இன்றுவரை தமிழ் மக்களுக்கு அரசியல் வழிகாட்டும் கைவிளக்கு! அவர் ஒரு கலங்கரை விளக்கமாக இன்றும் தமிழகத்திற்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறார். மாநில சுயாட்சி, அண்ணாவின் வழியில் கலைஞருக்குப் பிறகு இன்று முதல் அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் அதையே முன்னிறுத்தி இன்று ஆட்சி செய்து வருகிறார்.
இன்றும் அண்ணாவின் வழியில் சென்று தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்!
வாழ்க தமிழ்!
—
திராவிடன்
No Comments