0

Enter your keyword

தமிழர்கள் மறந்த தொல்காப்பியம்!

தமிழர்கள் மறந்த தொல்காப்பியம்!

தமிழர்கள் மறந்த தொல்காப்பியம்!

தொல்காப்பியம் இந்தப் பெயரை பள்ளியில் படிக்கும்போது கேள்விப்பட்டிருப்போம். பிறகு அதை அத்தோடு மறந்திருப்போம். இதே நிலைதான் நமது குழந்தைகளுக்கும்.

தொன்மைமிக்க நூலான தொல் காப்பியம் தமிழின் முதல் இலக்கண நூலாகும். எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகாரம் என மூன்று அதிகாரங்களாக உள்ள தொல்காப்பிய நூலில் 1600 நூற்பாக்கள் இடம் பெற்றுள்ளன.

எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்னும் இரண்டு அதிகாரங்களில் எழுத்து, சொல், தொடர் என்னும் மொழி இலக்கணங்களை விளக்குகின்றார் தொல்காப்பியர்.

அதில் பழந்தமிழ் மக்களின் அக, புற வாழ்வியலை மிகவும் தெளிவாக வரையறை செய்து விளக்குகின்றார். இவ்வகையான ஒரு வாழ்வியல் இலக்கணம் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை. ஆனால் அந்த நூலைப் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை,  ஏன்?

ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை அறிந்து வைத்திருக்கும் குழந்தைகளும், இளைஞர்களும் அதே அளவிற்குத் தொல்காப்பியத்தை அறிந்து வைத்துக் கொள்ளாதது ஏன்? ஆரியத்தின் சூழ்ச்சியில் தமிழ் நூல்கள் மழுங்கடிக்கப்பட்டு வடநாட்டு நூல்களான மகாபாரதம், ராமாயணம் ஆகியவை வழிவழியாக நமது முன்னோர்களின் மனதில் புகுத்தி திணிக்கப்பட்டன.

இன்று நமது இலக்கணத்தின் தலையாய நூலான தொல்காப்பியத்தை எடுத்துக்கூறி மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்.

1847-ல் தொல்காப்பியத்தை ஓலைச் சுவடி வடிவில் இருந்து அச்சு வடிவுக்கு மழவை மகாலிங்க ஐயர் முதன் முதலில் மாற்றினார். அதன் பிறகு பல பேர் அதை அச்சிட்டு வெளியிட்டாலும் இன்ன பிற நூல்களைப் போல அது பிரபலம் ஆவதற்கு காரணம் என்ன? நூலைப் படித்தால் தமிழனின் பெருமையும், தமிழின் செழுமையும் , பார்ப்பனியத்தின் புரட்டுகளும் வெளிவந்து விடுமே! அதனால்தான் அதை மழுங்கடித்து இன்றைய சந்ததியினர் அதை படிக்காமல் இருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் சிறப்பாகச் செய்திருக்கின்றனர். Fantasy என்று சொல்லப்படும் புனையப்பட்ட கதைகள் வரிசையில் வரும் ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை மதத்துடன் சேர்த்து நாமெல்லாம் இந்துக்கள் என்று கூறி அதை நம் மனதில் பதியவைத்து உள்ளனரே! எதனால்?

அதையே தொல்காப்பியத்திற்கும் சிலப்பதிகாரத்திற்கும் எட்டுத்தொகை பத்துப்பாட்டுக்கும் செய்திருக்கலாம் அல்லவா? செய்ய முடியாது; ஏனென்றால் அந்நூல்களில் இலக்கணம் இருக்கின்றது; தமிழனின் பெருமை இருக்கின்றது, மரபு இருக்கின்றது. அதை விட முக்கியமாக இந்துத்துவா எனும் சனாதன மதம் பற்றி எதுவுமே கிடையாது. உதாரணத்திற்கு தமிழன் திருமண முறை எப்படி என்று தொல்காப்பியம் விவரித்துள்ளது. அதை படித்து விட்டால் இப்போது நடக்கும் திருமணங்களில் நடக்கும் சடங்குகள் ஏன் எதற்கு என்று கேள்விகள் தானாக பிறந்துவிடும். அப்படிப் பிறந்துவிட்டால் அவர்களின் புரட்டுகளும் குட்டுகளும் வெளிப்பட்டுவிடும். இது போன்ற பல விடயங்கள் தொல்காப்பியத்தை கற்றுணர்ந்தால் தெரியவரும்.

அதன் காரணமாகவே தொல்காப்பியத்தை மிகவும் பிரபலப் படுத்தாமல் மழுங்கடிக்கப்பட்டு உள்ளது. வெறும் சான்றோர், தமிழ் அறிஞர்கள் மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் தொல்காப்பியத்தை பரவலாக அனைவரும் தெரிந்து வைத்திருக்குமாறு நாம் அதை மாற்ற வேண்டும்.

தமிழின் சிறப்புகளைச் சொல்லும் தொல்காப்பியம் குறித்து தமிழர்களுக்கு குறிப்பாக தமிழ் மாணவர்களுக்கு இன்னமும் சரியான புரிதல் இல்லை. திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் அளவுக்கு அமைப்பு ரீதியாக தொல்காப்பியம் பிரபலப்படுத்தப்படவில்லை. இனியாவது நாம் அதை ஒரு அமைப்பு ரீதியாக எடுத்துச் சென்று பள்ளி முதல் கல்லூரி வரை, இணையம் முதல் சமூக ஊடகங்கள் வரை தொல்காப்பியத்தை புரிதலோடு அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.

தமிழின் பெருமையை அறிந்து சீனா அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்து வந்து படிக்கும் மாணவர்கள் இருக்கும் இந்த வேளையில் தமிழக மாணவர்கள் தொல்காப்பியத்தின் அருமை பெருமைகளை அறிந்து கொள்வது மிகவும் தேவையான ஒன்றாக படுகிறது. காப்பியத்தின்  பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அதை இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.

இன்றைய காலத்தின் கட்டாயம் நமது தமிழ் இலக்கணம் மற்றும் பழமையான தொன்மையான நூல்களை நமது இளைய சமுதாயத்தினருக்கு எடுத்துச்சென்றே ஆகவேண்டும்.

இதுவரை தமிழ் நூல்கள் காக்கப்பட்டது திராவிடத்தால். இனியும் தமிழ் நூல்களைக் காக்கப்போவது திராவிடம் தான்.

மேற்கூறியவற்றையெல்லாம் செய்தால் தான் இன்னும் பல நூறு ஆண்டுகள் தமிழ் தழைதோங்கி உயர்ந்து நிற்கும். தமிழை அடுத்த தலைமுறையினருக்கு சென்று சேர்ப்பது  தமிழர்களாகிய ஒவ்வொருவரின் கடமையாகும்.

தொல்காப்பியம் மட்டுமல்ல பல தமிழ் நூல்கள் எல்லாம் ஒரு சில விடயங்களை தான் மேற்கோள் காட்டுகின்றன. அவை அன்பு, அறநெறி, தமிழரின் மாண்பு, தமிழ் மொழியின் செழுமை, அதன் தொன்மை, தமிழர்களின் சிறப்பு, தமிழரின் வழிபாடு மற்றும் உணவு முறை பற்றித்தான்.

எல்லாம் தெரிந்து கொண்டால் நாம் கேள்வி கேட்போம் அல்லவா? அதனால்தான் பல இலக்கிய இலக்கண நூல்கள் நமது கண்ணில் படாதவாறு தள்ளி வைக்கப்பட்டு தேவையில்லாத பல இதிகாசங்கள்  நமது தலையில் ஏற்றப்பட்டு இருக்கின்றன. அதை மதத்தோடு சாதியோடு பின்னி கொடுத்து நமது மனதிலும் மூளையிலும் ஏற்றி வைத்திருப்பதால் அதை அவ்வளவு எளிதாக தள்ளிவைக்க நமது மக்களால் முடியவில்லை. ஆனால் இப்பொழுது சிந்திக்கும் அளவுக்கு கொண்டு வந்து இருக்கும் நிலையே திராவிடத்தின் வெற்றிதான்!

இனியும் ஆரியத்தின் சூழ்ச்சிகளை வேரறுத்து தமிழைக் காக்க பெரியார் கற்பித்த வழியில் சென்று வென்றெடுப்போம்.

தமிழ் வாழ்க! தமிழ் வெல்லும்!


திராவிடன்

No Comments

Post a Comment

Your email address will not be published.