0

Enter your keyword

தமிழ்ப் புத்தாண்டு!

தமிழ்ப் புத்தாண்டு!

தமிழ்ப் புத்தாண்டு!

தை 1 தமிழ்ப் புத்தாண்டா அல்லது சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டா?

இதைப் பற்றிய விவாதங்கள் நிறையப் பார்த்தாகிவிட்டது ஆனால் எது தான் நமக்குப் புத்தாண்டு என திராவிடர்களாகக் கொஞ்சம் பகுத்தறிந்து பார்ப்போமா?

சித்திரையில் கொண்டாடப்படும் புத்தாண்டு என்பது என்ன?அதைப்பற்றி இருக்கும் வரலாறு என்பது கேட்கத் தகாதது என்பதால் அதை விட்டு விடுவோம்.

முதல் கேள்வி?

தமிழர்கள் நாம் கொண்டாடும் புத்தாண்டின் பெயர் தமிழில் அல்லவா இருக்க வேண்டும்? ஆனால் ஆண்டுகளின் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருத மொழியிலேயே வருகின்றன. தமிழ் ஆண்டுக்குச் சமஸ்கிருதப் பெயர் வர முடியுமா? ஏன் தமிழில் பெயரில்லையா?

இரண்டாம் கேள்வி?

ஆங்கிலப் புத்தாண்டு என்பது ஒருவரின் வாழ்க்கை காலத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டது (இயேசு கிறிஸ்து) சித்திரையில் கொண்டாடும் புத்தாண்டு அப்படிக் கணக்கிடப்பட்டதா?

மூன்றாவது கேள்வி?

சித்திரையில் கொண்டாடப்படும் புத்தாண்டு என்பதற்குச் சங்க இலக்கியங்களிலும், செப்பேடுகளிலும் , வரலாற்றுச் சான்று போல ஏதாவது குறியீடு இருக்கிறதா?

நான்காவது கேள்வி?

நன்கு கொளுத்தும் வெயில் காலத்தில் எந்த ஆண்டாவது துவங்குமா? இல்லை நன்றாக வளர்ச்சி பெற்ற ஒரு சமூகம் சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் புத்தாண்டைக் கொண்டாடுமா?

இந்த 4 கேள்விகளுக்கும் நாம் பதில் தேடிப் பார்த்தாலோ, அல்லது சிறிது சிந்தித்துப் பார்த்தாலே நமக்குப் புரிந்துவிடும் சித்திரை ஒன்று அல்ல புத்தாண்டு நமக்கு! தை மாதம் பிறக்கும் நாளே நமக்குப் புத்தாண்டு!

உடனே உங்களுக்கு என்ன சான்று இருக்கிறது நீங்கள் தை 1-ம் தேதியைப் புத்தாண்டாகக் கொண்டாடுவதற்கு என்று கேட்கலாம்.

இராமநாதபுரம் கீழக்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை தை பிறந்த தினத்தையே புத்தாண்டாகக் கருதப்பட்டதைக் காட்டுகின்றது.

தை மாதத்தின் அளவிற்கு வேறு எந்த ஒரு மாதமும் சங்ககாலப் பாடல்களில் சிறப்புப் படுத்தப்படவில்லை.

தை என்றால் சேர்த்தல் என்று பொருள். இங்குத் தையும் என்பது இரண்டு ஆண்டுகளில் இணைக்கின்றது என்பது பொருளாகும்.

தமிழர்களிடம் மதம் ஜாதி கிடையாது. அதைக் கீழடியும் நிரூபித்துக் காட்டியுள்ளது. நமது தைத்திருநாள் ஆனது மதச்சார்பற்ற விழாவாகக் கொண்டாடப்படுவதால் எல்லாத் தமிழரும் கொண்டாடப்படும் விழாவாக இருக்கின்றது.

அதுமட்டுமில்லாமல் தைத்திருநாள் ஆனது தமிழரின் வாழ்க்கையுடன் இணைந்ததும் உழவுத் தொழிலுடன் தொடர்பு கொண்டதாகவும் இருப்பதால் அறுவடை செய்யும் காலமே புத்தாண்டாகக் கொண்டாடப் பொருத்தமாக இருந்திருக்க முடியும்.

தை மாதத்தின் குளிர்ந்த தன்மை மற்றும் அறுவடை என்பதால் ஒரு மகிழ்ச்சியான காலப்பகுதியே இந்த ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளப்படும் என்பது பொது அறிவு!

நாம் திருவள்ளுவர் பிறப்பினை அடிப்படையாகக்கொண்டு நமது ஆண்டுக் கணக்கைச் செய்கின்றோம்.

எந்த அடிப்படையில் திருவள்ளுவரைக் கணக்கில் எடுக்கிறார்கள் என்று கேட்பார்கள்? திருக்குறளின் மாண்பு அனைவரும் அறிந்ததே! அதைக் கொடுத்த அய்யன் திருவள்ளுவரை விட வேறு ஒருவரை இதற்குத் தேர்ந்தெடுக்க முடியுமா என்பதை அவர்கள் விவாதத்திற்கு விட்டுவிடுவோம்.

இன்று இந்துத்துவ சக்திகள் திருவள்ளுவரை வலிந்து நினைப்பதற்கும் காரணம் இதுவாக இருக்கலாம். திருவள்ளுவரின் பிறப்பு ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகள் கூட்டி திருவள்ளுவராண்டு ஆக நாம் கொண்டாடுகிறோம். இதைத் தமிழக அரசும் ஏற்றுக்கொண்டு 1972 முதல் அரசுப் பயன்பாட்டிலும் ஆவணங்களிலும் திருவள்ளுவராண்டு நடைமுறைப்படுத்தி வருகிறது.

பின்பு 2006 இல் திராவிடக் கட்சியான திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் தை 1 தமிழ் புத்தாண்டு என்பதை அறிவித்துக் கொண்டாடி வந்ததும் அதைப் பின்னர்க் காழ்ப்புணர்ச்சியால் இன்னொரு தலைவர் மாற்றியதும் வரலாறு.

அதுமட்டுமில்லாமல் ஆத்திகர் – நாத்திகர் மற்றும் வெவ்வேறு கருத்துகளைக் கொண்ட பல தமிழ் அறிஞர்கள் ஒன்று கூடி அறிவித்ததே தை முதல்நாள் புத்தாண்டு. அவர்கள் யார் என்று கீழே கொடுத்துள்ளேன்.

தமிழ்க்கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியபிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் நா.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தரப் பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், பேராசிரியர் சா. நமச்சிவாயனார், உ.வே. சாமிநாத ஐயர்.

ஆனால் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் மிகவும் எளிமையான முறையில் நமக்கு அவரின் பாடல் மூலம் கூறிவிட்டார்!

“நித்திரையில் இருக்கும் தமிழா!

சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு

அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் , கற்பித்ததே

அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழனுக்கு

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”

வாழ்க தமிழ் ! தமிழ் வெல்லும் !

திராவிடம் அறிவோம் ! திராவிடம் பேசுவோம்!

திராவிடன்

No Comments

Post a Comment

Your email address will not be published.