இந்தியாவின் முதல் நிதியமைச்சர்!

இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஒரு தமிழர். அதுவும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அதிலும் இவர் பெயரை அறிந்தவர்கள் மிகச் சிலர் மட்டுமே. ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே கோலோச்சி வந்த காலகட்டத்தில் ஒரு தமிழர் இத்தனை உயரிய பதவிகளை வகித்தாரா என்று இக்கட்டுரை படித்த பின் இக்கால இளைஞர்களுக்கு தெரியவரும்.
அவர் ஆர். கே. சண்முகம்!
1947 ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப்பின் பதவியேற்ற இந்திய அரசின் முதல் நிதியமைச்சர் மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பல பெருமைகளை உடையவர். நாட்டுப் பிரிவினை போது எழுந்த கணக்கு பிணக்குகளுக்கு
சரியான முடிவு கண்டவர். விடுதலைக்குப் பின் பிரித்தானிய இந்தியாவிடம் மாட்டிக்கிடந்த பல நூறு கோடி ரூபாய் (இன்றைய தேதியில் பல ஆயிரம் கோடி) அந்நியச் செலாவணியையும், தங்க இருப்பையும் தமது வாதத் திறமையால் மீட்டெடுத்தவர். அதை இந்தியாவிற்கு திருப்பி தந்தது பிரித்தானிய அரசு.
திராவிட மாணவர் சங்கம் என்று 1912-ல் நடேசனாரால் பார்ப்பனரல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க சென்னையில் தொடங்கப்பட்ட மாணவர் விடுதியில் தங்கிப் படித்து பட்டம் பெற்றவர். தன் வளர்ச்சிக்கு உதவிய இயக்கம் மற்றும் கொள்கை பிடிப்பால் திராவிட இயக்கம் மீது தீராப்பற்று கொண்டவராக இருந்தார்.
ஒரு சிறந்த பேச்சாளர், வழக்கறிஞர், ஆற்றல்மிக்க சிந்தனையாளராக மத்திய மாநில சட்டசபை
உறுப்பினராக, மத்திய சட்டசபை (இன்றைய பார்லிமெண்ட்) தலைவராகவும் செயல்பட்டவர்.
பெரியாரின் சிறந்த நண்பர். நீதிக்கட்சியில் 15 ஆண்டுகள் செயல்பட்டவர். 1929-ல் நீதிக்கட்சியின் சப்ஜெக்ட் கமிட்டி
கூட்டத்தில் பார்ப்பனர்களை உறுப்பினர்களாக சேர்க்கலாம் என முடிவெடுத்தபோது அதை வாக்கெடுப்பின் மூலம் தோற்கடித்ததோடு அதை கடுமையாக எதிர்த்தவர்கள் இருவர் மட்டுமே.
ஒருவர் பெரியார். மற்றொருவர் ஆர்.கே சண்முகம்.
அவர், அவருடைய தகுதிக்கேற்ப பல்வேறு பதவிகள் வகித்தார். அவற்றில் சில!
கோவை நகர் மன்ற உறுப்பினராகவும்,
நகர் மன்றத் துணைத் தலைவராகவும்,
சென்னை ராஜதானியின் சட்டமன்ற உறுப்பினராகவும்,
இந்திய தேசிய சட்ட சபையின் (அன்றைய பாராளுமன்றம்) உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றினார்.
கொச்சி அரசின் திவானாகப் பணிபுரிந்தார்.
மத்திய சட்டமன்ற கீழவையில் உறுப்பினராக இருந்தார்.
இந்திய அரசியலமைப்பு சட்டமன்றத்திலும் உறுப்பினராகப் பங்கேற்றார்.
மத்திய சட்டமன்ற கீழவையில் துணைத்தலைவராக 1931-33 ஆண்டுகளிலும், தலைவராக 1933-34களிலும் பதவியிலிருந்தார்.
இந்திய தேசிய சட்ட சபையின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்,
இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பெருமைக்குரியவர்.
இந்திய அரசின் முதல் நிதியமைச்சர்,
மியுசிக் அகாடமி மாநாட்டு நிகழ்வில் பார்ப்பனர் அல்லாத ஒருவர் தலைமையேற்றது அதுதான் முதல்தடவை.
1941-இல் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இந்தியாவின் நிரந்தர வர்த்தகப் பிரதிநிதியாக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். பன்னாட்டு நிதியம், உலக வங்கி ஆகிய அமைப்புகளைத் தோற்றுவிக்க இவர் ஆற்றிய பணிகள் பல.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றியிருக்கிறார் .
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத் தலைவராக, தேசிய செய்தித்தாள் மற்றும் காகித ஆலையின் செயல் தலைவராக, தொழில் ஆய்வு நிலைக்குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார் .
“தமிழகத்தில், தமிழுக்கென தமிழிசை மன்றம் தொடங்க ஒரு இயக்கம் கிளர்ச்சி செய்யவேண்டிய நிலையில்தான் நம் தமிழ்மொழி இருக்கின்றது” என பெரியார் குடியரசில் 25-12-44 எழுதினார்.
அதற்கேற்ப அண்ணாமலை செட்டியாரும், ஆர்.கே. சண்முகமும் தமிழிசை மன்றத்தை 1943-இல் தொடங்கும் முயற்சியில் ஒரு இயக்கத்தை ஆரம்பித்தது. 1944-இல் தமிழிசை மன்றம் உருவானது. தமிழிசைக்கு மட்டும் இல்லாமல் தமிழ்மொழிக்கும் தொண்டாற்றியவர். அத்தோடு உலகம் முழுக்கத் தமிழ்ச் சங்கங்களை உருவாக்க வித்திட்டவர் அவர். இப்படி தமிழுக்காகவும், சமூகநீதிக்காகவும், நிர்வாக திறமைக்காகவும் பெரிதும் மதிக்கப்பட்டவர் ஆர்.கே சண்முகம் அவர்கள்.
திராவிட மாணவர் சங்கத்தில் தங்கி படித்ததோடு திராவிட கருத்தியலை நாடு முழுக்க தன் செயலால் விதைத்த மாமனிதர் ஆர்.கே சண்முகத்தை நன்றியோடு என்றும் நினைவுகூர்ந்து அவர்களைப் பற்றி ஒவ்வொரு திராவிட உறவுகளும் அறிந்து கொண்டு அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
திராவிட சித்தாந்தங்களை தூக்கிப் பிடித்துக் கொள்கையோடு வாழ்ந்த திராவிடர்களை அறிவோம்! திராவிடம் கற்பிப்போம்!
தமிழ் வாழ்க! தமிழ் வெல்லும்!
—
திராவிடன்
No Comments