0

Enter your keyword

தமிழ் திணிப்பு வேண்டாம்?

தமிழ் திணிப்பு வேண்டாம்?

தமிழ் திணிப்பு வேண்டாம்?

Image by StockSnap from Pixabay

என்னடா திராவிடம் என் மூச்சு, திராவிடம் என் பேச்சு என்று பேசியவன் இப்படி ஒரு தலைப்பை எழுதுகிறான் என்று பார்க்கிறீர்களா? இதை நான் சொல்லவில்லை. எந்த தமிழ் இளைஞர்கள் ஹிந்தி திணிப்பு வேண்டாம்! தமிழ் வாழ்க! என்று புரட்சி செய்தார்களோ அதே இளைஞர்களை வைத்து தமிழைத் திணிக்காதே என்று கூப்பாடு போட வைத்தது ஒரு கூட்டம். அந்த வரலாற்று நிகழ்வைத் தான் இனி நாம் காணப்போகிறோம். முதலில் இச்செய்தியைக் கேள்விப்படும் பொழுது வியப்பாக இருந்தது.

ஆனால் இன்று நடக்கும் கூற்றுகளைப் பார்த்தால் கண்டிப்பாக அது  நடக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் போலி தமிழ்த் தேசியம் பேசுவோர் காவிகளின் கூட்டாளிகளை ஆதரிக்கும் நாட்டில் இது போன்ற கூற்றுகளும் நடக்கும் தானே?

தமிழ் பயிற்று மொழி என்பதைக் கல்லூரி வரை அறிமுகப்படுத்தியது அன்றைய ஆட்சியிலிருந்த திமுக. ஏற்கனவே உயர்கல்வியில் தமிழ் பயிற்று மொழியாக இருந்தபோதும், 1970 ல் புதுமுக வகுப்பு அடுத்துப் பட்ட வகுப்பு இரண்டிலும் தமிழைப் பயிற்று மொழி என்று அறிவித்தார்கள். அதை நடைமுறைப்படுத்தக் கோவை அரசினர் கல்லூரி மற்றும் சென்னை மாநிலக் கல்லூரியில் அத்திட்டத்தை செயல்படுத்தினர். அதற்குக் காரணம் பெரியாரை தலைவராக ஏற்றுக்கொண்ட திராவிடத்தின் முதுபெரும் தலைவர் பேரறிஞர் அண்ணா ஜனவரி 21 1968-ல் சட்டமன்றத்தில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று ஐந்தாண்டு திட்டத்தை அறிவித்ததே ஆகும்.

5 ஆண்டுகளில் எல்லாவற்றிலும் தமிழ் இருக்கும். ஆட்சிமொழி முதல் கல்வித்துறை வரை அனைத்திலும் தமிழ் இருக்குமாறு இந்த ஆட்சி பார்த்துக்கொள்ளும், இல்லை என்றால் பதவியை விட்டு விலகுவேன் என்று  சூளுரைத்தார் அண்ணா. அதை நிறைவேற்றும் பொருட்டு தமிழ் பயிற்று மொழி சட்டத்தைக் கொண்டு வந்தார் அன்றைய முதல்வர் கலைஞர். இன்று நாம் தமிழ் வழிக் கல்வி தந்து பல சட்டங்களை போட்டு இட ஒதுக்கீடுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோமே, ஆனால் தமிழைப் பயிற்று மொழியாக்க 50 ஆண்டுகள் முன்னே இப்படி ஒரு முன்னெடுப்பு தமிழகத்திலிருந்தது பலருக்குத் தெரியுமா?  தமிழ்நாட்டில் தமிழைப் பயிற்று மொழியாகப் படுவதில் யாருக்கும் எந்த இடர்பாடும் இருக்காது என்று நினைத்த வேளையில், கிளம்பியது புது எதிர்ப்பு! யாருமே எதிர்பார்க்காத எதிர்ப்பு, தேசிய மாணவர் பேரவை என்ற பெயரில்!

அந்த தேசிய மாணவர் பேரவை ஊருக்கு ஊர் மாணவர்கள் உயர் நிலைப் பள்ளி மாணவர்கள் உட்படப் பலரைத் தூண்டிவிட்டு எந்த மாநிலத்தில் 1965ல் இந்தியைத் திணிக்காதே என்று போராடினார்களோ, அதே மாநிலத்தில் தமிழைத் திணிக்காதே என்று முழக்கம் போட வைத்தனர். அதிலும் இந்தப் போராட்டம் வெடிக்க இன்று தமிழ் தான் எல்லாவற்றிலும் இருக்கவேண்டும் என்று பேசும் தமிழ்த்  தேசியவாதிகள் கொண்டாடும் மா பொ சி உள்பட, விஸ்வநாதன் அவர்களும், குன்றக்குடி அடிகளார் அவர்களும் அப்போதைய முதல்வர் கலைஞரை சந்தித்துத் தமிழைப் பயிற்று மொழி ஆக்குவதில் இவ்வளவு வேகம் வேண்டாம், பொறுமையாக செய்து கொள்ளலாமே என்று அச்சட்டத்தை நடைமுறைப் படுத்துவதைத் தடுத்தார்கள்.

இப்படி தமிழுக்கு எதிராக அப்பொழுதே திட்டம் போட ஆரம்பித்து விட்டனர். இப்படி ஒரு சம்பவம் நடந்ததை யாரும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இப்படித் தமிழையும் தமிழர்களையும் ஒழித்துக்கட்டப் பல வரலாற்று சம்பவங்களை மறைத்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய பல விடயங்களை இருட்டடிப்பு செய்து தெரியாமல் பார்த்துக் கொள்வதே ஆரியத்தின் மிக முக்கியமான செயல்களில் ஒன்று. இந்தியைத் திணிக்காதே என்று கூறிய அதே மாணவர்களை ஐந்து ஆண்டுகளில் தமிழைத்  திணிக்காதே என்று போராட வைத்தது பார்ப்பனியம். அப்பொழுதே அப்படி என்றால் இன்று சமூக ஊடகமும், ஊடகங்களை சட்டைப்பையில் வைத்திருக்கும் இந்நூற்றாண்டில் எவ்வளவு வேலைகளைப் பார்ப்பார்கள்?  

இன்று அதே போல் சமஸ்கிருதத்தை இந்தி வழியாக திணிக்க முற்படும் இந்துத்துவ சக்திகளை எதிர் கொள்ள வரலாற்றையும் தெரிந்து கொள்வது காலத்தின் கட்டாயமாகும். இப்படி ஏனைய தகவல்கள் நம்மிடம் இருந்து மறைக்கப்பட்டுள்ளன. அதை அறியாமல் ஆரிய மாயையிலிருந்து விடுபட்டு  திராவிடத்தை மேலோங்கச் செய்வது நமது தலையாய பணியாகும். வாழ்க திராவிடம்

தமிழ் வாழ்க! தமிழ் வெல்லும்!

திராவிடன்

No Comments

Post a Comment

Your email address will not be published.