0

Enter your keyword

புலிகளும் பல்லுயிர் காடுகளும்!!!

புலிகளும் பல்லுயிர் காடுகளும்!!!

புலிகளும் பல்லுயிர் காடுகளும்!!!

Photo by Jose Almeida from Pexels

பொதுவாகக் காடுகள் அவற்றின் அடர்த்தி மற்றும் உயிரின அமைப்புகளைக் கொண்டே வகைப்படுத்தப்படுகின்றன. மிகக்குறைந்த மனிதக் குறுக்கீடுகள், தனக்கே உரித்தான தாவர அமைப்பு மற்றும் அடர்த்தி மிக்கக் காடுகளை முதன்மை நிலைக் காடுகள் என்றும், முதன்மைநிலைக் காடுகளை ஒத்த தாவர அமைப்புள்ள மனித குறுக்கீடுகளுக்குப் பிறகு அமையப்பெற்ற காடுகள் இரண்டாம்நிலைக் காடுகள் எனவும் உயிரியலாளர்கள் வகைப்படுத்துகின்றனர். இதில் பல்லுயிர் காடுகள் மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன.  ஏனென்றால் ஒரே தாவர இடமாகவோ இல்லை ஒரே மிருக இனமாக இல்லாமல் பல தாவர இனங்களும் மிருகங்களும் சேர்ந்து வாழும் காட்டுப்பகுதி இது . இந்த வகைக் காடுகள் தான் இயற்கையைச் சமமாக வைத்துக் கொள்ளவும் வெப்ப மயமாதலைத் தடுக்கவும் உதவும் காடுகள்.

ஆனால் இந்த வகைக் காடுகள் இந்தியாவில் மற்றும் தமிழகத்தில் அழிந்துகொண்டே வருகின்றன. ஏனென்றால் அந்தப் பல்லுயிர் காடுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் புலி இனமும் அழிந்து கொண்டே வருவதால்தான். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் படி உலகிலேயே இந்தியாவில்தான் புலிகள் அதிகமாக இருப்பதாலும் அதன் எண்ணிக்கை கூடிக் கொண்டு வருவதாலும் நாம் நல்ல ஒரு முன்னேற்றத்தை நோக்கிச் செல்கிறோம் என்ற சிறு ஆறுதல் அடையலாம். ஆனால் இத்துடன் நிறுத்தாமல் இன்னும் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காட்டின் எண்ணிக்கைகளையும் அதிகப்படுத்த வேண்டும். ஏனென்றால் இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் 40,000 மேல் புலிகள் இருந்த இந்தியாவில் இன்று வெறும் சில ஆயிரம் புலிகளே இருக்கின்றன. அதுவும் 1973 ல் மத்திய அரசு விழித்துக் கொண்ட பிறகு.

புலிகளுக்குச் சங்க இலக்கியங்களில் தனியிடமுண்டு. பல இலக்கியப் பாடல்களில் புலிகளை நன்கு வர்ணித்துப் பாடியுள்ளனர். புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, மலைபடுகடாம் ஆகிய நூல்கள் புலியின் தோற்றத்தையும் வண்ணத்தையும் வெகுவாக வியந்து போற்றுகின்றன. புலிக்கு உழுவை, வேங்கை, வயம், வல்லியம், பல்வரி எனப் பல்வேறு காரணப் பெயர்கள் உண்டு. விரல் நகங்களால் இரையை உழுதலால் உழுவை என்ற பெயரும், அதே போல் விரைந்து ஓடுவதால் வல்லியம் எனவும், வேங்கை மரத்தின் மலர்களைப் போன்ற நிறத்தை ஒத்ததால் வேங்கை என்றும் பல பெயர்களில் புலிகள் சங்க காலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சங்க காலத்தில் புலிக்கு இவ்வளவு முக்கியத்துவம் தந்து இருக்கிறார்கள் என்றால் புலியின் மகத்துவத்தைத் தெரிந்தேதான் அதைப் போற்றிப் பாடியிருக்கிறார்கள். இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த அந்தக் காலத்திலேயே அப்படி என்றால் இன்று இயற்கையை அழித்து அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நாம் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

பல வகைகளாக இருந்த புலிகள் இன்று மிகச் சில வகைகளாக மாறுவதற்கு முக்கியக் காரணம் மனிதர்கள்.

ஒன்பது வகையான புலிகள் இருந்தன. இதில் துருக்கியிலுள்ள காஸ்பியன் புலி, ரஷ்யாவில் உள்ள அமுர் புலி, தென் கிழக்கு ஆசியாவிலுள்ள புலிகளும் அடங்கும். ஜாவா மற்றும் பாலி புலி இனங்கள் முழுவதும் அழிந்து போய்விட்டன. உலக அளவில் தற்போது மொத்தமாகச் சுமார் 3,890 புலிகள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றில் முக்கால் பங்கு இந்தியாவில் இருக்கின்றது.இந்தியாவில் வரும் புலிகளைப் பாதுகாத்து அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கப் புலிகள் பாதுகாப்புத் திட்டம் 1973-ல் தொடங்கப்பட்டது. அப்போது 1,220 புலிகள் தான் இருந்தன. இந்தியாவில் 18 மாநிலங்களில் புலிகள் காணப்படுகின்றன. அவற்றின் பாதுகாப்புக்காக கடந்த 46 ஆண்டுகளில் நாடெங்கும் 50 புலிகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் தமிழ்நாட்டில் 4 புலிகள் காப்பகங்கள் உள்ளன. அவை, நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை, நீலகிரி மாவட்டம் முதுமலை, கோவை மாவட்டம் ஆனைமலை மற்றும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்கள் ஆகும்.

மனிதர்களின் சுகாதாரமான வாழ்க்கைக்குச் சுத்தமான காற்றும் நீரும் அவசியம். அவை இரண்டையும் தருவது காடுகளே. அந்தக் காடுகளைக் காக்க உதவும் புலிகளை நாம் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முடியும். இல்லையென்றால் புலிகள் அறிய அறியக் காடுகளும் அழியும் காடுகள் அழிந்தால் இன்று இருக்கும் சூழ்நிலையில் காற்று மாசு மற்றும் வெப்பம் அதிகரிக்கும்.

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”

என்ற வள்ளுவர் வாய்மொழிக்கு ஏற்ப நம்மைச் சுற்றி வாழும் அனைத்து வகையான உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டியது நம் கடமை ஆகும்.

புலிகளின் வாழ்விடமான காடுகளையும் இயற்கைத் தன்மை மாறாமல், துண்டாடாமல் போற்றிப் பாதுகாத்து நம்மையும் பாதுகாத்துக் கொள்வோம்.

தமிழ் வாழ்க! தமிழ் வெல்லும்!

திராவிடன்

No Comments

Post a Comment

Your email address will not be published.