இப்படியும் அழைக்கலாமே!

நம் அன்றாட வாழ்க்கையில் நிறைய மனிதர்களைச் சந்திப்போம் அதில் பல முகங்கள் நமக்குத் தெரிந்தவையாக இருந்தாலும் அவர்களின் பெயர் நமக்குத் தெரியாது. அவர்களை அவர்கள் செய்யும் வேலையைகொண்டே நாம் அடையாளப்படுத்தி நினைவு வைத்திருப்போம். ஓட்டுநர், நடத்துனர், குப்பைக்கார அம்மா/அய்யா, பூ விற்பவர், காய்கறி விற்பவர், காவலாளி, நம் அலுவல ஊழியர்கள் பலரையும் அவர்களின் பதவியை வைத்துத் தான் நாம் அழைக்கிறோம்.
நமக்கு மேல் பதவியில் இருப்பவர்களைப் பொதுப்படையாக சார் என்று மேடம் என்றும் அழைத்து விடுகிறோம். இப்படி நமக்கு மேல் பதவியில் இருப்பவர்களையும், ஓர் அரசு பதவியில் அல்லது ஒரு பெரிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு அவர்கள் பெயருடன் சேர்த்து சார், மேடம் ஐயா போன்ற மரியாதை தரும் நாம் ஏன் மேலே சொன்ன இன்னபிற நபர்களுக்கு அந்த மரியாதையைக் கொடுக்க மறுக்கிறோம்?
நாம் மட்டுமா அதைச் செய்கிறோம், நமது அடுத்தத் தலைமுறையான குழந்தைகளுக்கும் அதைக் கடத்தி விடுகிறோம். இன்னும் சிலர் குழந்தைகள் தவறுதலாகத் தாத்தா பாட்டி மாமா என்று செல்லமாக முறை வைத்துக் கூப்பிட்டாலும் அதைச் செய்யாதே என்று கண்டித்து அவர்களைச் செய்ய விடாமல் செய்து விடுகிறோம்.
இப்படி நாம் அன்றாடம் சந்திக்கும் மக்களின் பெயரைக் கூடத் தெரிந்து வைத்துக்கொள்வது கிடையாது. அவர்களிடம் ஒரு சிறு நட்பு பாராட்டுவது கூடக் கிடையாது. பெரும்பாலான மனிதர்கள் அவர்களின் அதிகாரத்தையும் நான் உனக்கு மேல் என்று யாரிடமாவது காட்டிக்கொள்ள வேண்டிய அந்த மனோபாவத்தை இப்படிப்பட்ட மனிதர்களிடம் காட்டுவது மிகவும் சர்வ சாதாரணமாகிப் போய்விட்டது. இவையெல்லாம் நான் என் சுற்றத்தில் தினமும் கண் கூடப் பார்க்கும் காட்சிகள்.
அவர்களும் மனிதர்கள் தானே! அவரவரின் வேலைகளை அவர்கள் செய்கிறார்கள் அவர்களுக்கு ஒரு சிறு மரியாதை, மரியாதை என்றால் மாலை போட்டு வணக்கம் வைப்பது போன்ற மரியாதைகள் அல்ல. சிறு புன்னகை, எப்படி இருக்கிறீர்கள், சிறு நல விசாரிப்பு என சகஜமாகப் பேசிப் பழகினால் போதும். ஒன்றும் பெரிதாக நாம் செய்து விட வேண்டாம். வாங்க போங்க, என்ற மரியாதையான சொற்றொடர் தமிழில் தான் உள்ளது. அதைக் கூறினால் போதுமே. இப்படிக் கடினமாக உழைக்கும் உழைப்பாளிகளிடம் ஒரு சிறு ஆறுதலான கேள்வி கூட அவர்களின் அன்றைய நாளை இனிதாக்கிவிடும்.
குழந்தைகளுக்கும் அதையே சொல்லிக் கொடுப்போம். எல்லோரிடம் நட்பு பாராட்ட வேண்டும், அஃது அக்கம்பக்கத்தினர் சுற்றியுள்ள உறவினரிடம் மட்டும் பாராட்டினால் போதாது. நாம் அன்றாடம் காணும் நமக்காக வேலை செய்யும் நமக்குத் தேவையானவற்றைக் கொண்டுவரும் இப்பேர்ப்பட்ட கடைநிலை மனிதர்களிடமும் நட்பு பாராட்ட வேண்டும் என்று சொல்லியே வளர்க்க வேண்டும். அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்று பாடத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு இதுவே முதல் பாடமாக அமையவும் வாய்ப்பாக இருக்கும்.
இணையத்தில் பல கட்டுரைகள் கதைகளைப் படித்திருப்போம். பிட்சா டெலிவரி செய்த நிறுவன ஊழியர் ஒருவரின் உயிரையே காப்பாற்றியது, தினமும் வணக்கம் சொல்லும் ஓர் ஊழியர் வராததால் அவரைத் தேடிப்போய் அவர் உறைபனி கிடங்கில் மாட்டியவரை மீட்டெடுத்த காவலாளி இப்படிப் பல கதைகள் உண்டு. இவையெல்லாம் இப்படி நட்பு பாராட்டுதலின் எடுத்துக்காட்டுகள் தானே!
நமது வயதில் மூத்தவராக இருந்தால் அக்கா, அண்ணா, அப்பா, அம்மா, ஐயா இளையவராக இருந்தால் தம்பி, தங்கை இப்படி உறவுப் பெயர்களை வைத்து அழைப்பதில் நாம் ஒன்றும் கெட்டு விடப்போவதில்லை. சொல்ல முடியாது நாளை இந்தச் சிறு புன்னகையும், நலம் விசாரிப்பும் நாளை உங்களுக்கு வேறு விதத்தில் உதவியாக அமையலாம். நான் இதை எனது வாழ்வில் உணர்வுப் பூர்வமாக அனுபவித்துக் கொண்டிருப்பதால் இதை மற்றவர்களுக்கும் கூறுகிறேன்.
இனி உணவு டெலிவரி செய்ய யாராவது வந்தால் ஒரு சிறு புன்னகை செய்வோம். நமது வீடுகளில் குப்பை சேகரிப்பவர்களைக் கண்டால் ஒரு சிறு நலம் விசாரிப்போம். ஏனென்றால் நமது வீடுகளையும் நமது தெருக்களையும் சுத்தப்படுத்துவது அவர்கள் தானே, அவர்கள் நல்ல உடல் நிலையில் உள்ளார்களா என்று கேட்பதில் தவறில்லை. இனி நலம் விசாரிப்பதை அனைத்து மக்களிடமும் சமத்துவமாகச் செய்வோம்! மனிதம் போற்றுவோம்.
கடவுளை மற! மனிதனை நினை! என்று தந்தை பெரியார் கூறினார். நாம் கடவுளை மறுக்கிறோமோ இல்லையோ மனிதர்களை நினைக்காமல் இருக்க வேண்டாமே! நட்பு பாராட்டாமல் இருக்க வேண்டாமே!
தமிழ் வாழ்க! தமிழ் வெல்லும்!
—
திராவிடன்
No Comments