மெட்ராஸ் தினம்!

இன்று சென்னையின் 382 ஆவது பிறந்தநாள்! முதலில் மதராஸ் மாகாணம் பிறகு மெட்ராஸ் ஆக மாறி இன்று சென்னையாக கம்பீரமாக நிற்கிறது!
சென்னைக்கும் திராவிடத்திற்கு மிகப்பெரிய தொடர்பு உண்டு! தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது சென்னையில் தான். திராவிட கட்சிகள் சென்னையில் உருவாவதற்கு இதுதான் அச்சாணி.
நீதிக்கட்சி ஆரம்பித்தது சென்னையில் தான்! அதன் நீட்சியாக அரசியல் இயக்கமாக பின்னாளில் பல திராவிடக் கட்சிகள் உருவானாலும் இன்று ஆண்டுகொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் 1949-ல் சென்னையில் இருக்கும் ராபின்சன் பூங்காவில்தான் துவங்கப்பட்டது.
அதேபோல திராவிடத்தின் பல கொள்கைகளை உள்வாங்கி அதை நடைமுறையில் கூட காணக்கூடிய பல விடயங்கள் நடக்கக் கூடிய இடம் சென்னை மாநகரம்.
மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கமும்கூட சென்னையில் தான் உருவெடுத்தது.
1965-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் சென்னையே முன்னிலை வகித்தது. இந்திக்கு எதிராக தமிழகம் முழுவதுமே கிளர்ந்தெழுந்தாலும் சென்னையில்தான் அது மையம் கொண்டிருந்தது.
இப்பொழுது கடைசியாக ஜல்லிக்கட்டுப் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது சென்னை மரீனாவில்! மரீனா போராட்டம் என்று என்றும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட்டிருக்கும்.
ஊர்ப் பக்கங்களில் பார்க்கக்கூடிய சாதிய பாகுபாடு, சாதி வெறி கலவரங்கள், ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் ஜாதி மக்கள் என்று எதுவும் இங்கே காண முடியாது. இங்கே நீங்கள் என்ன ஆட்கள் என்று கேட்க மாட்டார்கள். குறிப்பிட்ட இடங்களை வைத்து இவர்கள் இன்னார் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு சென்னையில் அனைவரும் இரண்டறக் கலந்து விட்டார்கள். ஆனால் சில விஷமிகள் அவர்கள் இரண்டு பக்கங்களிலும் இருக்கின்றனர். அவர்கள் கூறுவது தான் சென்னையில் சேரிகள் இருக்கின்றனவே நீங்கள் அவர்களை எதற்கு ஒதுக்கி வைத்து இருக்கிறீர்கள் என்று. உள்ளே சென்று பார்த்தால் தான் தெரியும் அனைத்து மக்களும் கலந்து வாழுமிடமாக தான் சேரிகள் இருக்கின்றன. அதையும் முடிந்தவரை கூரை வீடுகளாக மாற்ற முற்படுகின்றது திராவிடம் மற்றும் அதைச் சார்ந்த அரசியல் இயக்கங்கள்!
இன்றும் மற்ற மொழிகளின் படையெடுப்பினால் அழியாத நகரம் சென்னை மாநகரம். எடுத்துக்காட்டிற்கு பம்பாய் தனது மராட்டிய மொழி அழகை இழந்து விட்டது. ஆனால் இன்றளவும் சென்னையில் தமிழ்தான் முதன்மையான மொழி. மற்ற மாநில மக்களும் எம்மொழி பேசுபவர்களாக இருந்தாலும் சென்னை தனது அடையாளத்தை இழக்காமல் இன்றுவரை நீடித்து நிற்பதற்கு ஒரு முக்கிய காரணம் இங்கு திராவிடம் வேரூன்றி இருப்பதால்தான். இடதுசாரி சிந்தனைகளும் நிறையவே உண்டு சென்னை மாநகரில்! ஏனென்றால் அதிகம் உழைக்கும் மக்கள் கொண்ட சென்னை மாநகரில் அப்படி இருப்பது சாத்தியமே!
பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் போன்ற திராவிட தலைவர்கள் வாழ்ந்து, கோலோச்சிய நகரம் சென்னை! இத்தனை நூற்றாண்டுகளில் தனது அழகியலை இறக்காமல் தனித்துவத்தோடு நிற்கும் நகரங்கள் வெகு சிலவே! அதில் சென்னையும் ஒன்று. எத்தனை இடர்கள் எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை தாங்கி நின்று இன்னும் வலுவாக வேரூன்றி நிற்கும் சென்னை மாநகரம். இன்னும் பலகாலம் செழித்து தமிழையும் திராவிடத்தையும் இன்னும் சீரும் சிறப்புமாக வளரச் செய்யும். அதை உடனிருந்து நாமும் செய்ய வேண்டும்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்நாடு!
—
திராவிடன்.
No Comments