0

Enter your keyword

இந்துக்களே ஒன்று கூடுங்கள்!

இந்துக்களே ஒன்று கூடுங்கள்!

இந்துக்களே ஒன்று கூடுங்கள்!

ஒன்றுகூடிவிட்டனர் இன்று முறையாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமை தமிழக அரசால் முறையாக நிறைவேற்றப்பட்டது.

இது திராவிடத்தின் மிகப்பெரிய வெற்றி! தந்தை பெரியார் கண்ட கனவு மெய்ப்பட்ட தருணம் இது. ஐம்பது-அறுபது ஆண்டுகள் முன் தந்தை பெரியார் எந்த சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று நினைத்தாரோ, எந்த திட்டத்தை  கலைஞர் கருணாநிதி சட்ட வடிவமாக கொண்டு வந்தாரோ, அந்தத்  திட்டம் இன்று நிறைவேறி இருக்கிறது; குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இனி எந்த தடங்கலும் இல்லாமல் நிறைவேறி இருக்கின்றது.

ஏனென்றால் கலைஞர் போட்ட சட்டத்தை  நீதிமன்றம் வரை சென்று பல காலம் தடுத்து வைத்திருந்தார்கள் ‘இந்து மக்களே ஒன்று கூடுங்கள்’ என்று சொன்ன கும்பல்; அவர்கள் யாரென்று சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

இன்று அந்த சட்டத்தின்பால் அனுமதி பெற்று அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று வரலாற்று சிறப்புமிக்க ஒரு விடயத்தை இன்று சாதித்திருக்கிறது திராவிடம்; செய்தது தமிழக அரசு தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இதற்கான விதை மற்றும் அதை நிறைவேற்ற கொள்கை என்று ஒன்று வேண்டுமல்லவா? அதை கொடுத்தது திராவிடம். அதற்கு இன்றைய திராவிட முன்னேற்றக் கழக அரசிற்கு முதலில் நன்றி கூறுவோம்.

பெரியார் நினைத்ததோ அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும். ஆனால் அதை விட ஒரு படி மேலே சென்று பெண்களும் ஆண்களும் சமம் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு பெண் அர்ச்சகரை பணியமர்த்தியது இன்னும் சிறப்பு. இந்தியாவில் மட்டுமல்ல இது எல்லா மாநிலத்திற்கும் புதிது. எந்தக் கருவறையில் தீட்டு என்றும் பெண் நுழையக் கூடாது என்று தடைசெய்யப்பட்டிருந்ததோ அதே கருவறையில் பூஜை  செய்ய முறையாக பயிற்றுவித்து சட்டமும் இயற்றி இன்று ஒருவரை நியமனமும் செய்து விட்டார்கள்.

இது நெடுங்கால போராட்டத்தின் வெற்றியாக பார்க்க வேண்டும். தந்தை பெரியாரின் கனவு நிறைவேறிய தருணம் இது. அவர் இருந்திருந்தால் கண்டிப்பாக இதை பாராட்டி அவர் பாணியில் வாழ்த்தி இருப்பார். அத்தனை பேருக்கும் நியமன ஆணை கொடுத்துவிட்டு முதல்வர் சென்ற இடம் எது தெரியுமா? பெரியாரின் நினைவிடம்!

அங்கு சென்று அவரின் நினைவிடத்தில் இந்த அறிவிப்பை காணிக்கை ஆக்கினார், இன்றைய முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள். தந்தை எதை செய்ய நினைத்தாரோ அதை மகன் செய்து முடித்து விட்டார். என்றென்றும் காலத்தில் அழியாத சட்டமாக இதை வரலாற்றில் பதிவு செய்துவிட்டார்.

ஒரு கூட்டம் இந்துக்களே ஒன்று கூடுங்கள் என்று கூறியது. ஆனால் இப்போது இந்துக்கள் எல்லாரும் ஒன்றுகூடி அர்ச்சகராக வரும்போது வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறுவதை நாம் சமூக வலை தளங்களில் கண் கூட பார்க்கலாம்! அன்றே சொன்னார்  பெரியார். அவர் சொன்னது போல் கடவுள் இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டனர் பாவம். மற்ற வர்ணத்தினர் பூஜை செய்யும் இடத்தில் கடவுளை வைக்காது எடுத்துக் கொண்டு வந்து விடுங்கள் என்று கூப்பாடு போடுகின்றனர். சனாதன ஆரியத்தின் போலி முகம் வெளியில் பொது மக்களுக்கும் தெரியத் தொடங்கியிருக்கிறது. அவர்களின் இந்துத்துவ சாயம் வெளுக்க தொடங்கியிருக்கிறது.

பெரியார் அன்று போட்ட விதை இன்று பெரிய மரமாகி அதன் பலனை இன்றைய தலைமுறைக்குத் தந்து கொண்டிருக்கிறது. அதற்குச்  சாட்சி தான் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம். இன்னும் திராவிடத்தின்பால் நிறைய சட்டங்கள், திட்டங்கள் எல்லாம் வரும் காலங்களில் வந்து போலி இந்துத்துவ ஆரிய வாதிகளின் முகத்திரையை கிழிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆரியத்தின் கோரப்பிடியில் சிக்கி சிதறுண்ட தமிழகம் இன்று தலை நிமிர்ந்து திராவிடத்தின்பால் தனது பழைய நிலையை நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது. இந்த எடுத்துக்காட்டை பின்பற்றி ஏனைய பிற மாநிலங்களும் இந்த நிலைக்கு நகர்ந்து செல்ல ஆரம்பித்தால் அது திராவிடத்தின் இன்னொரு மாபெரும் வெற்றியாக இருக்கும். தமிழ்நாடு என்றுமே தனித்துவமானது என்று  மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.

இன்னும் வெகுதூரம் போக வேண்டியிருக்கிறது வருங்காலங்களில் இன்னும் திராவிடத்தை மும்முரமாக முன்னெடுத்துச் சென்று வீறுநடை போடுவோம்!

வாழ்க திராவிடம்!

வளர்க தமிழ்;  வாழ்க தமிழ்நாடு!


திராவிடன்

No Comments

Post a Comment

Your email address will not be published.