0

Enter your keyword

ஏன் செய்யவேண்டும் சுயமரியாதை திருமணம்?

ஏன் செய்யவேண்டும் சுயமரியாதை திருமணம்?

ஏன் செய்யவேண்டும் சுயமரியாதை திருமணம்?

சுயமரியாதை திருமணம் என்றால் என்னவென்று எல்லோருக்கும் தெரியும்! ஆனால் அதை செய்வதால் நமக்கு என்னென்ன பலன் கிடைக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். என்னடா இதுவும் திருமணம் தானே இதில் என்ன பெருசாக சேமித்து விடப் போகிறீர்கள் என்று தானே கேட்கிறீர்கள்?

இந்திய கல்யாண சந்தையின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஒரு லட்சம் கோடிக்கும் மேல். அதுமட்டுமில்லாமல் 25 முதல் 30 சதவீத வளர்ச்சியில் அது ஒவ்வொரு வருடமும் வளர்ந்து வருகிறது.

இந்தியாவில் திருமணம் செய்யும் ஒரு குடும்பம் தான் சம்பாதித்த சொத்தை ஐந்தில் ஒரு பகுதியை அந்த திருமணத்திற்கு மட்டும் செலவிடுகிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன. அதுமட்டுமில்லாமல் யார் திருமணம் செய்தாலும், இந்து முறைப்படி ஒரு பிரிவினர் மட்டுமே புரோகிதம் செய்து வரவேண்டும் என்ற ஒரு ஜாதிய மனப்பான்மையும் அதில் இருக்கிறது. இப்பொழுதுதான் அனைத்து பிரிவினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. விரைவில் புரோகிதம் செய்யவும், திருமணங்களில் தமிழில் மந்திரங்கள் செய்யும் வகையில் வழிவகை செய்யப்படும் என்று நம்புவோமாக.

ஒரு நடுத்தரவர்க்க திருமணத்தின் செலவு சராசரியாக 10 முதல் 20 லட்சம்.

ஏன் நடுத்தரவர்க்கம் எடுத்துக் கொள்கிறோம் என்றால் பெரும்பாலான செலவுகள் அந்த பிரிவில் இருந்து தான் வருகிறது.

குறைந்தபட்சம் ஒரு கோடி திருமணங்கள் இந்தியாவில் நடக்கின்றன அதில் 80 சதவிகிதம் இந்து முறைப்படி நடத்தப்படுகிறது.

இதில் எத்தனை சதவிகிதம் சுயமரியாதை திருமணம் என்று நினைக்கிறீர்கள்? 0.01 சதவிகிதம்கூட அல்ல!

ஆகவே சுயமரியாதை திருமணங்கள் ஊக்குவிக்கப்பட்டு நடைபெற ஆரம்பித்தால் எவ்வளவு பணம் மற்றும் பொருள் மிச்சப்படும்?

கல்யாணம் என்றாலே செலவுகள் நிறைய செய்வோம். அதுமட்டுமில்லாமல் ஆடம்பரம் அலங்காரம் மற்றும் சாஸ்திரம் சம்பிரதாயம் என்று பல பொருட்களை வீணடித்து நேர விரயம் மட்டும் பணவிரயம் செய்யாமல் தடுக்கலாம்!

முதலில் பார்ப்பனர்களை வைத்து திருமணங்கள் நடத்த வேண்டிய தேவை இருக்காது. அதனால் அத்தனை மணிநேரம் உட்கார்ந்து சடங்குகள் செய்வதை தவிர்க்கலாம். இதனால் நேரம் மிச்சப்படும்.

பிறகு அவர்களுக்கு கொடுக்கப்படும் தட்சனை (ஊதியம்) கொடுப்பது தவிர்க்கப்படும் இதனால் பணமும் மிச்சமாகும்.

நெருப்பு யாகம் வளர்த்து அதில் பல பொருட்களை தீயில் இடுவார்கள். கூடவே நெய்யையும் ஊற்றுவார்கள். அப்படி பல அத்தியாவசிய பொருட்கள் வீணடிப்பது தவிர்க்கப்படும்.

அதைவிட முக்கியமாக சுயமரியாதை திருமணம் செய்தால் பல அறிவியலுக்கு மற்றும் பகுத்தறிவிற்கு ஒவ்வாத சடங்குகள் தவிர்த்து விடலாம். ஒரு உதாரணத்திற்கு கால் கழுவி விடுவது. பகலில் அருந்ததி நட்சத்திரம் பார்ப்பது; சிறு குழந்தைக்கு கூட தெரியும் பகலில் எந்த நட்சத்திரமும் தெரிவதில்லை என்று.

அதேபோல் திருமணத்திற்கு வந்தவர்களை நன்கு கவனிக்கலாம் அவர்களுக்கு நன்கு உணவு பரிமாறி அவர்களை சிறப்பித்து வழி அனுப்பி வைக்கலாம் ஏனென்றால் மற்ற செலவுகளை குறைத்து அந்த செலவை உணவிற்கு சேர்த்து செய்தால் வரும் உறவினர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் அவர்களை கவனித்த மனமகிழ்வு நமக்கும் இருக்கும்.

அதிகமாக செலவு செய்தால் தங்களுக்கு புகழும் குடும்ப கௌரவமும் உயர்வதாக ஏற்படும் ஒருவித மனப்பான்மை சமூகத்தில் பரவி வருகிறது அவையெல்லாம் உடைபட ஆரம்பிக்கும்.

குறிப்பாக, இருப்பதைவிட அதிகமாக கடன் வாங்கி செலவு செய்துவிட்டு கடனில் தத்தளிக்கும் பெற்றோர்களை உருவாக்காமல் இருக்கும் சுயமரியாதை திருமணங்கள்.

அதிகாலை முகூர்த்தம் நேரத்தில் திருமணம் வைத்து பலர் கலந்து கொள்ள இயலாமல் போவதும் தவிர்க்கப்படும் எல்லா நேரமும் நல்ல நேரமே என்ற ஒரு பகுத்தறிவு சிந்தனையோடு குறுகிய நேரத்தில் திருமணத்தை நடத்தி வந்தவர்கள் கவனத்தை அனுப்பினால் வருபவர்களுக்கும் சரி, திருமணம் செய்பவர்களுக்கும் சரி நேரம் மிச்சப்படும்.

வரதட்சனை என்ற ஒன்று சுயமரியாதை திருமணம் செய்வதால் வாங்கவும் படாது கொடுக்கவும் படாது.

ஏனென்றால் சுயமரியாதை திருமணம் செய்பவர்கள் கண்டிப்பாக சுயமரியாதைக்காரர்கள் ஆக இருக்கும் பட்சத்தில் இழிவான ஒரு விடயமாக வரதட்சணையை ஏற்கவும் மாட்டார்கள் கொடுக்கவும் மாட்டார்கள்.

ஜாதி; ஆம் குறிப்பாக சுயமரியாதை திருமணங்களில் ஜாதி ஒழிப்பு தான் முதன்மையானது. ஏன் பிற்காலங்களில் அவை மத ஒழிப்பு கூட பயன்படலாம். சாதி மறுப்புத்  திருமணங்கள் பெரும்பாலும் நடைபெறுவது சுயமரியாதை திருமணங்களால் தான். ஆகவே ஜாதி ஒழிப்பு அங்கே இருந்துதான் தொடங்குகிறது.

ஆகவே தோழர்களே, சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் இருக்கும் ஆறறிவு படைத்த மனித இனங்களான நாம் சுயமரியாதையுடன் திருமணங்கள் செய்வோம், தேவையில்லாத செலவுகளை தவிர்ப்போம், நம் வரவுக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்டு எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கும் பழக்கத்தை ஆரம்பித்து வைப்பதே சுயமரியாதைத் திருமணங்கள் தான்.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்ற புரோகித மறுப்புத் திருமணங்கள் ஏராளமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது 1958-இல் இத்திருமணத்திற்குச் சட்டபூர்வமான அங்கீகாரம் வழங்கினார். அது மட்டுமின்றி, மலேசியா நாட்டிலும் இத்திருமணத்தின் சிறப்புத்தன்மையை அறிந்து, அந்நாட்டு அரசு 1982-இல் சட்ட வடிவம் கொடுத்தது. தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் உட்பட தமிழர்கள் வாழக்கூடிய உலகின் பல்வேறு பகுதிகளிலும் இந்தச் சுயமரியாதைத் திருமணம் சிறப்போடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அங்கிருந்தே தேவையில்லாத செலவுகளை தவிர்த்து நாம் சேமிப்பதை தொடங்குகிறோம். இந்தியாவில் தமிழ்நாட்டில் சுயமரியாதை திருமணங்கள் அரசால் அங்கீகரிக்கப் பட்டிருப்பதால் இந்தியாவிற்கு முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது. இதை நாம் தமிழகத்தில் எடுத்துச் சென்ற பிறகு அதை இந்திய அளவில் எடுத்துச்செல்ல வேண்டும் என்பதே நமது ஆசை. அதுமட்டுமில்லாமல் இதுதான் பெரியாரின் ஆசையும் கூட.

மானமிகு சுயமரியாதைக்காரன் ஆக இருப்போம், திராவிடம் கற்பித்த இது போன்ற பல விடயங்களை உலகிற்கு எடுத்துச் செல்வோம். கடைபிடித்து நாம் திராவிடர்களாக தலைநிமிர்ந்து, தமிழ்நாட்டையும் தமிழையும் தலைநிமிரச் செய்வோம்.

வாழ்க தமிழ்!

வாழ்க தமிழ்நாடு!

திராவிடன்

No Comments

Post a Comment

Your email address will not be published.