சாமி – யார்?

இந்துக்கள் சாமி, இயேசு சாமி, அல்லா சாமி இன்னும் பிற மதத்தினர் வழிபடும் சுவாமிகள்.
பொதுப்படையாக நான் கும்பிடும் தெய்வத்தை, ஒரு சக்தியை அந்தந்த மதத்தினர் “சாமி” என்றே அழைக்கின்றனர்.
தமிழ்நாட்டிற்கு சாமி என்றால் வடநாட்டுக்கு என்னவென்று கேட்டு விடாதீர்கள்! நமக்கு அவ்வளவு அறிமுகம் இல்லை. மொழிக்கு மொழி வேறுபடும் ஆனால் எல்லா மதத்தினரும் அந்த மொழியில் குறிப்பிட்ட ஒரு சொல்லைப் பயன்படுத்தித் தங்கள் தெய்வங்களை குறிப்பிடுகின்றனர்.
சரி நமது தலைப்புக்கு வருவோம்!
சாமி – யார்? எங்கிருந்து வந்தனர்?
நமக்கும் கடவுளுக்கும் இடையில் அவர்களுக்கு என்ன பணி?
சற்று யோசித்துப் பார்த்தால், வெங்காயம் போல ஒன்றுமே இல்லை. வெளியில் பார்க்கும்போது வெங்காயம் முழுமையாக தெரியும் ஆனால் அதை உறிக்க உறிக்க உள்ளே ஒன்றுமே இருக்காது. அப்படி தான் சாமியார்கள்.
நாம் மனவேதனையுடன் எதையாவது எதிர்பார்த்து அங்கு சென்று இருப்போம். அதை சரி செய்கிறேன் பேர்வழி என்று அவர்கள் ஏதோ ஒரு புத்தகத்தில் எழுதி வைத்திருக்கும் நான்கு சொற்களை ஊதுபத்தி கொளுத்தி வைத்து, அல்லது கோர்வையான சொல்லில் உங்களுக்கு சொன்னால், அதை நமது மனதை ஆறுதல் அடைந்து ஏற்றுக்கொள்கிறது.
ஆனால் கொஞ்சம் நிதானமாக சிந்தித்துப் பார்த்தால் அதை நாமே செய்து விட முடியும். ஆனால் யாரோ ஒருவரை நம்பி இருப்பதே நமக்கு பழக்கமாகிவிட்டது. ஏனென்றால் ஒரு சக்தி இருக்கிறது அதை நம்பி தான் நாம் என்று ஆரியம் நமது மனதில் ஆழப்பதிய வைத்திருக்கிறது.
நாம் சிந்தித்துப் பார்த்தால் நாம் மனதார கும்பிடும் கடவுளுக்கும் நமக்கும் இடையில் இவர் எதற்கு? ஆனால் நாம் சிந்திப்போமா? கிடையாது! சிந்திக்காமல் இருக்க வைப்பதற்கு தான் ஆயிரத்தெட்டு சடங்குகளும் பரிகாரங்களும்.
நம் மனம் கொண்ட கொண்ட ஆசையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது, அதை பெற்றுத் தருவதாக நமது மனதை நம்பவைக்கும் ஒரு கலையை தெரிந்து வைத்திருப்பதால்தான் அவர் சாமியார்!
உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும். ஆனால் இவரிடம் சென்றதால் தான் கிடைத்தது என்பதை நம்ப வைக்கும் அளவுக்கு நமது யோசிக்கும் திறனும் வெகுவாக குறைத்து வைத்திருக்கின்றனர் இந்த சாமியார்கள். ஒரு புத்தகத்தை படித்தால் வரும் அறிவை விட முதிர்ச்சியை விட சாமியார்கள் கொடுத்துவிட முடியுமா? ஏன் இதை நாம் சிந்திக்கவே இல்லை. எதற்காக நமக்கும் கடவுளுக்கும் இடையில் ஒரு தரகர் தேடுகிறோம்? பதில் இருக்காது!
ஏனென்றால் வழிவழியாக பரம்பரை பரம்பரையாக இதை நமக்கு கடத்திக் கொண்டு வருகிறார்கள். அறிவியல் இவ்வளவு வளர்ந்த பிறகும் நாம் கேள்வி கேட்க வேண்டாமா?
100 ஆண்டுகள் முன்புதான் எந்த அறிவியல் வளர்ச்சியும் இல்லாமல் ஆரியத்தின் சூழ்ச்சியால் நமது முன்னோர்களின் மனதில் இந்த பயத்தை ஆழப்பதிய வைத்துவிட்டார்கள். அது தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு இன்று நம்மிடமும் வந்து நிற்கிறது. ஆனால் அதில் பகுத்தறிவை பயன்படுத்தி சிந்தியுங்கள் என்று பெரியார் போன்று பலர் கூறியதால் இந்த பதிவை நான் எழுதுகிறேன். ஏனென்றால் பதினேழு வயது வரை நானும் இதே கூட்டத்தில் தான் இருந்தேன்.
ஒரு குடிசையோ கட்டிடமோ கட்டி ஆரம்பிக்கும் சாமியார் சில வருடங்களில் பல மாடிக் கட்டிடங்களும் பல நூறு ஆசிரமங்களும் திறக்கிறார் என்றால் எப்படி?
கொஞ்சம் மதத்தை தள்ளிவைத்துவிட்டு சிந்தியுங்கள் திராவிடர்களே!
எப்படி நமது தாய், தந்தையர், பாட்டி, தாத்தா மற்றும் நம் மதிப்பிற்குரிய ஆசிரியர்கள், புத்தகங்கள் சொல்லாத எந்த நல்ல விடயத்தை சாமியார்கள் சொல்லிவிடப் போகிறார்கள்?
நமக்கு அறிவு வேண்டாமா? சுய சிந்தனை வேண்டாமா?
இதற்கு சாட்சி ஜீசஸ், கால்ஸ், ஈசா யோகா போன்றோர். கடவுளின் ஏஜெண்டுகளாக இருக்கிறோம்! நாங்கள் கடவுளிடம் மன்றாடி உங்களுக்காக வேண்டுகிறோம் என்று சொன்னவர்களை இன்று இன்கம்டாக்ஸ் ரெய்டு முதல் அன்னிய செலாவணி மோசடி வரை துரத்துகிறது. இன்று சாமியார்களும் கார்ப்பரேட் மாயமாகி வருகின்றனர். தங்களுக்கு குடும்பம் என்று ஒன்று இருக்கும் பொழுது உங்கள் முன்னோர்கள் உங்களை நின்று காக்கும் பொழுது எதற்கு இந்த சாமியார்கள்?
ஏழைகளுக்கு உணவு அல்லது உதவிகளை செய்யும் பொழுது கிடைக்கும் மனநிறைவை விட அந்தச் சாமியாரிடம் எடுத்துப் போய் பணத்தைக் கொட்டுவதில் கிடைக்கப் போகிறதா?
வரும் தலைமுறையினருக்கு இப்பேர்ப்பட்ட சிந்தனைகளைத் தான் கடத்த வேண்டுமே தவிர, சாமியார்களிடம் சென்றால் நமக்கு நன்மை நடக்கும்; மனநிறைவு கிடைக்கும் என்று சொல்லி வளர்க்கவே கூடாது.
திராவிடம் அறிவோம்! திராவிடம் பேசுவோம்! திராவிடம் பழகுவோம்!
வாழ்க தமிழ் தமிழ் வெல்லும்!
—
திராவிடன்
No Comments