0

Enter your keyword

கலைஞரும் கே.ஆர்.வேணுகோபால் சர்மாவும்

கலைஞரும் கே.ஆர்.வேணுகோபால் சர்மாவும்

கலைஞரும் கே.ஆர்.வேணுகோபால் சர்மாவும்

கே.ஆர்.வேணுகோபால் சர்மா!!!

பல பேர் அறிந்திடாத பெயர்! ஆனால் அண்ணாவால் “ஓவியப் பெருந்தகை” என்று பட்டம் சூட்டப்பட்டார். தமிழகத்தில் இவர் வரைந்த ஒரு ஓவியத்தை பார்க்காத ஒருவர் இருக்கவே முடியாது. இந்தியாவில், உலகத்தில் அத்தனை பேரும் ஒருமுறையேனும் இவரது அந்த ஒரு படைப்பைக் காணாமல் இருக்க மாட்டார்கள். திருக்குறளைப் பற்றி தேடுபவர்கள் இவரின் அந்தப்  படைப்பைக் கண்டே ஆக வேண்டும்!

யூகித்து விட்டிர்களா ? ஆம்! அய்யன் திருவள்ளுவர் திருவுருவ படத்தை வரைந்தவர் தான் இந்த வேணுகோபால் சர்மா! இவர் வரைந்த படத்தைத்தான் திருவள்ளுவரின் அதிகாரப்பூர்வமான படமாக அரசு அறிவித்துள்ளது.

அந்தப் படத்தைத்தான் இன்று இந்துத்துவக் கும்பல் காவி நிறம் கொடுத்துத்  திருவள்ளுவரை அபகரிக்க நினைக்கிறது. எதிலும் விழிப்புடன் இருக்கும் திராவிடம் இந்தப்படம் விடயத்திலும் விழிப்புடன் இருந்ததால் அரசுடைமை ஆக்கப்பட்டு கம்பீரமாக இருக்கின்றது திருவள்ளுவரின் படம்.

அதுமட்டுமில்லாமல் தமிழ்த்தாய், அறிஞர் அண்ணா, முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத் போன்றோர்களது அரிய படங்களையும் வரைந்தது இவரேயாகும்.

அது சரி, இவருக்கும், கலைஞருக்கும் என்ன சம்பந்தம்?  ஏன் கலைஞருடன் சேர்த்துக் குறிப்பிடுகிறேன்? பார்ப்போம்!

ஏறக்குறைய 30 ஆண்டுகள் திருவள்ளுவரைப் பற்றி ஆராய்ச்சி செய்து 1959ல் நிறைவு பெற்ற திருவள்ளுவர் திருவோவியத்தைக் காண அன்றைய அத்துணை அறிஞர் பெருமக்களும் கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் சென்னை இல்லத்துக்கு வந்தார்கள்.

கலைஞரும் வந்தார். அங்கு அவர் அந்த ஓவியத்தைக் கண்டு வியந்து பேசியதிலிருந்து ஒரு சிறு பகுதி.

“இதுகாறும் தமிழ்நாட்டில் அழிக்க முடியாத விஷயங்களாகத் திருக்குறள், மற்றொன்று திருவள்ளுவர் என இருந்தது. தற்போது மூன்றாவதாக வேணுகோபாலரும் அதில் இணைந்துவிட்டார். ஆம், இந்தத் தமிழகம் உள்ளவகையில் திருக்குறள், திருவள்ளுவர், திரு.வேணுகோபால் சர்மா என்று இந்த மூன்றும் நிலைபெற்றுவிட்டன. தமிழகம் வேணுகோபாலருக்குக் காலமெல்லாம் நன்றிக்கடன் பட்டுவிட்டது!”

அவ்வாறு சொன்னதோடு நில்லாமல், பல்லாண்டுகளுக்குப் பிறகு அப்படியே செய்தும் காட்டினார். அதனால்தான் அவர் கலைஞர்!

பின்பு உடல் நலிவுற்று வறுமையில் இருந்த நேரத்தில் “திருவள்ளுவரை நமக்குத் தந்தவரின் இன்றைய நிலை நன்றாக இல்லை” என்று சிறிய செய்தியாகக் குமுதத்தில் போட்டுவிட்டார் ஒரு நிருபர். எப்பொழுதும் படித்துக் கொண்டே இருக்கும் கலைஞர் கண்ணில் இது படாமல் இருக்குமா என்ன?  இதைப் படித்ததும் கவலை கொண்ட கலைஞர், தனது குறளோவியம் வெளியீட்டு விழாவில் அதன் முதல் வரவுத் தொகையான ரூபாய் பத்தாயிரத்தை அவருக்கு வழங்கி…

இது பணமுடிப்பு என்று யாரும் கருதிவிடக் கூடாது. திருவள்ளுவரை வரைந்த ஓவிய மேதைக்கு என்னுடைய காணிக்கை” என்றார். முரசொலியில் இரண்டு பக்கங்களுக்கு அந்தச் செய்தி வந்தது.

சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

என்ற குறளுக்கு ஏற்ப நடந்து கொண்டவர் கலைஞர்.  1959ல் வேணுகோபாலருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம் என்று சொன்னதை, 1987இல் குறளோவிய விழாவில் “காணிக்கை” என்று சொல்லிய வண்ணம் செயல்படுத்தி முடித்தார்!

தான் ஒருவர் மீது அன்பு வைத்து விட்டால் அது கடைசிவரை மாறாது என்ற அக்கறையும் அனுபவம் கொண்டவர் கலைஞர் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்று இது.

1989 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கின்றது. நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் அரியணை ஏறியிருக்கும் தன் நண்பரை வாழ்த்த விரும்பினார் வேணுகோபால் அவர்கள். ஆனால், எங்கும் நகர முடியாதபடிக்குப் படுத்த படுக்கையாய் அவரது உடல்நிலை.

படித்துக்கொண்டிருந்த சிறுவனான மகனை அழைத்து,

“ஒரு சந்தன மாலையை வாங்கிக்கொண்டு சென்று கலைஞருக்கு என் சார்பில் மரியாதை செலுத்தி வா…”

என்றார்.

ஒருவழியாக கோபாலபுரம் வீடுவரை சென்றவர் தன் தந்தையார் பெயரை எழுதி உள்ளே அனுப்பிய சில நிமிடங்களில் என்ன ஆச்சரியம்! உடனடியாக ஒரு பாதுகாப்பு அதிகாரி  வந்து அச்சிறுவனை அழைத்துக்கொண்டு போய் கலைஞரின் உதவியாளர் திரு.சண்முகநாதன் அவர்கள் முன் நிறுத்தினார். வேறெங்கும் காண முடியாத, கலைஞர் வீட்டுக்கே உண்டான தனிப்பண்பு அது.

சிறுவனை கண்டதும் பளீரென்று சிரித்தபடியே அருகில் அழைத்தார் கலைஞர் பரிவுடன் அவர் கேட்ட முதல் கேள்வி,

கலைஞர் : “சீட்டு ஏதும் கொண்டாந்தியா…?”

சிறுவன் : “இல்லீங்களே…!”

கலைஞர் : புருவம் உயர்த்தி அழுத்திக் கேட்டார்…

“அப்பா, ஏதும் சொல்லிவிட்டாரா…?”

சிறுவன் : “இல்லீங்களே, ஐயா..!”

சற்றே முகம் மாறி… இரண்டொரு நொடிகள் வழக்கம்போலத் தன் உதட்டில் விரல்களை வைத்து அழுத்தியவர்…

கலைஞர் : “சரி, நீ போய் அப்பா கிட்டக் கேட்டு, என்ன தேவை என்பதை எழுதி வாங்கி வா…புரிகிறதா…?”

என்றார் சற்று கனக் குரலில்…

சிறுவன் வேகமாகத் தலையை ஆட்டி வைத்தான்.

அத்தனை பரபரப்புக்கிடையிலும், முடியாமல் படுத்திருக்கும் தன் நண்பருக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டும் என்று முனைந்து முனைந்து கேட்ட கலைஞரின் மாண்பு வியகத்தக்கதே! அத்துடன் நின்றாரா? இல்லை மற்றவர்கள் போல மறந்து போனாரா? இல்லை, ஆறு மாதத்திலேயே திருவள்ளுவர் ஓவியத்தை அரசுடைமையாக்கினார் கலைஞர்.

“எழுத்தாளர் சாவியும் ஓவியப் பெருந்தகையும் எனது இரு கண்கள்”

என்று பலமுறை குறிப்பிட்டுப் பேசி இருக்கிறார் கலைஞர்!

தனது சட்டமன்றப் பொன்விழா பேச்சிலும் தன் கெழுதகை நண்பராம் ஓவியப் பெருந்தகையைக் குறிப்பிட மறக்கவில்லை அவர். ஆம்! ஒருவர் மீது அன்பு வைத்தால் அவரைக்  கடைசி வரை மறவாது அவரைப் போற்றிப் பேசுவது தனது தனிச்சிறப்பாக வைத்திருந்ததால் கலைஞர் அங்கு தனித்து நிற்கிறார். பெரியாரிடத்திலும், அண்ணாவிடமும் படித்த பாடம் அவர் கடைசிக்  காலம் வரை கடைப்பிடித்தார் என்று சொன்னால் மிகையாகாது.

தமிழ் வெல்லும்! தமிழ் வாழ்க!

திராவிடன்

No Comments

Post a Comment

Your email address will not be published.