புலவர் இரா. இளங்குமரனார்

பாவலர், சொற்பொழிவாளர், சொல்லாய்வறிஞர், எழுத்தாளர், தமிழாய்வாளர், தமிழிய வரலாற்று வரைவாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழியக்கச் செயற்பாட்டாளர், தமிழ்நெறி பரப்புநர் எனப் பன்முகங்கொண்டவர் இளங்குமரனார். இன்று (25-07-2021) முதுமை காரணமாக மரணம் அவரை நம்மிடமிருந்து பிரித்து சென்றது!
அரசு மரியாதையுடன் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மாநில அரசு ஒருவருக்கு அரசு மரியாதை கொடுக்கிறது என்றால் ஒன்று அவர் அரசு பதவியில் இருக்க வேண்டும் அல்லது அந்த நாட்டிற்கு ஏதாவது மிகவும் சிறபபாக தொண்டாற்றி இருக்க வேண்டும். இவர் ஆற்றிய தமிழ்த் தொண்டு தான் இன்று அவருக்கு இந்த மதிப்பை பெற்றுத் தந்துள்ளது.
தமிழக முதல்வர் முதல் பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் அறிஞர்கள் இன்று அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அத்தகைய புகழுக்கு சொந்தக்காரர்.
திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் கிராமத்தில் படிக்கராமர், வாழவந்தம்மையார் தம்பதிகளுக்கு 1927ஆம் ஆண்டு பிறந்த இளங்குமரனார், திருநகரில் உள்ள அரசுப் பள்ளியில் 1946ஆம் ஆண்டு தமிழ் ஆசிரியராக தமது தமிழ் பணியை தொடங்கினார். சென்னை பல்கலைக்கழகத்தில் 1951ஆம் ஆண்டு புலவா் தேர்வில் முதல் வகுப்பில் தோச்சி பெற்றார். யாருடைய உதவியும் இல்லாமல் அவர் தேர்ச்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியராக, மேல்நிலைப்பள்ளி பொறுப்புத் தலைமையாசிரியராக, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வறிஞராக, தமிழ்ச் சொற்பிறப்பு அகரமுதலித் திட்டத்தில் மொழியறிஞராகச் சிறக்கப்பணியாற்றிய இவர் தமிழ் மீதும் திருக்குறள் மீதும் கொண்ட அன்பினால்
தமிழ்க்காப்புக் கழகச்செயலாளர், மதுரை மாவட்டத் தமிழாசிரியர் கழகச்செயலாளர், தேர்வுக்குழு அமைப்பாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துத்துள்ளார்.
திருவள்ளுவர் மீது கொண்ட ஈடுபாட்டை அல்லூர் என்னும் ஊரில் திருவள்ளுவர் தவச்சாலை, பாவாணர் நூலகம் ஆகியவற்றை அமைத்தன் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதை இத்தனை காலமும் வெற்றிகரமாக நடத்தி வந்தார்.
தன் வாழ்நாளில் தமிழ்வழிக் கல்விக்காகவும் குறளியக் கருத்துக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். தமிழகம் முழுவதும் திருக்குறள் உரைப்பொழிவுகள் வழங்கியும் திருமணங்களைத் தமிழ்வழியில் நடத்தியவர் ஆவார். திருமணங்கள் மட்டுமல்ல பல நல்ல நிகழ்ச்சிகளை திருக்குறள் உரைகளை கூறியே நடத்திவந்தார்.
தமிழ் எழுத்துச் சமூகத்திற்கும், தமிழறிஞர் பெருமக்களுக்கும் இவரின் இறப்பு ஒரு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. திராவிடன் குழு சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ் வாழ்க!
தமிழ் வெல்லும்!
—
திராவிடன்
No Comments