0

Enter your keyword

லுங்கி!

லுங்கி!

லுங்கி!

என்னடா லுங்கி என்று தலைப்பு வைத்துள்ளனர், அப்படி என்ன எழுதி இருப்பார் என்று பார்க்கிறீர்களா? கைலி என்பதே அதன் தமிழ் சொல்லாகும் ஆனால் மக்களுக்கு மிகவும் பயன்பாட்டில் உள்ள சொல்லை கூறினால் தானே மனதில் பதியும். இனி கைலி என்றே பதிவிடுகிறேன், கைலி பற்றி தான் எழுத போறேன் ஆனா கைலியின் வரலாற்றைப் பற்றியல்ல. கைலி அணிவதால் பல இடங்களில் ஒதுக்கப்படும் ஒடுக்குமுறை பற்றியும் கைலியை இரண்டாம் தர ஆடையாக மாற்றிய மேல்தட்டு மற்றும் பார்ப்பனிய மனப்பான்மையைப் பற்றியும் தான் பேசப் போகிறேன்.

கைலியை    லுங்கி அல்லது சாரம் என்று அழைப்பார்கள், இவ்வகையான ஆடைகள் மிகவும் வெப்பமான நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது ஏனென்றால் கால்சட்டையை விட இவை மிகவும் காற்றோட்டமாக இருப்பதே அதன் காரணம் ஆகும்.

தெற்காசிய, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் ஏமன், ஓமன் போன்ற அரபு நாடுகளிலும்  சோமாலியா, எத்தியோப்பியா போன்ற நாடுகளிலுமுள்ள ஆண்கள் இடுப்பில் அணிந்து கொள்ளும் ஆடை ஆகும்.  பர்மா போன்ற நாடுகளில் பெண்களும் அணிவதுண்டு. எத்தியோப்பியா நாட்டில் அபார் எனும் பகுதியை சேர்ந்த ஆண்கள் பெரும்பாலும் இவ்வகை ஆடைகளை அணிகிறார்கள்.

அவ்வளவு ஏன்! தென்னிந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்தில் பலரும் கைலியை பயன்படுத்துகின்றனர். இன்று வேண்டுமானால் பல கண்கவர் விளம்பரங்கள் காணொளியில் பார்க்க முடியும். ஆனால் அவை வணிக நோக்கில் செய்யப்படுபவையே தவிர இன்றும் கைலியை ஒரு கீழ்தட்டு மக்கள் உடுக்கும் உடையாகவும், ஒதுக்கப்படும்  ஒரு ஆடையாகவே பார்ப்பனிய மனப்பான்மை கொண்டவர்களும் பல மேல்தட்டு வர்கத்தினரும் பார்க்கின்றனர்.

அப்படி என்ன ஒடுக்குமுறைக்கு ஆளாகிறது கைலி என்று நீங்கள் கேட்கலாம்! ஒரு ஆடையை அணிந்து கொண்டு வரும்பொழுது அந்த ஆடையை மேற்கோள்காட்டி உள்ளே அனுமதி கிடையாது என்று கூறுவது ஒடுக்குமுறை அல்லவா?

இந்த ஆடைகளை ஒருவர், இந்த இடங்களுக்கு உள்ளே அணிந்து செல்ல கூடாது என்று கூறுவது பார்ப்பனிய மனப்பான்மை அல்லவா? ஏதோ ஒரு சாஸ்திர காரணம் சொல்லி  இதை செய்யக்கூடாது நீ இதை தொடக்கூடாது என்று சொல்வதுதானே பார்ப்பனியம்! அப்போது ஒரு ஆடையை காரணம் காட்டி உள்ளே வராதே! என்று அல்லது அனுமதி இல்லை! என்று கூறினால் அதுவும் பார்ப்பனிய மனப்பான்மை தானே?

ஒரு காலத்தில் வேட்டி அணிந்து சென்றவர்களுக்கும் இந்த நிலை இருந்தது ஆனால் இப்பொழுது அதை ஒரு மேல்தட்டு உடையாக ஏற்றுக்கொண்டனர். இளைஞர்கள் அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்தாலும் நிறைய பணம் படைத்தவர்கள் அதை ஏற்றுக்கொண்டு அணிய ஆரம்பித்தாலும் அதை வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டனர். ஆனால் அதே போல் உள்ள கைலியை ஏற்க மறுப்பது பார்ப்பனிய இந்துத்துவ மனப்பான்மையை சேர்ந்தே உள்ளது.

கைலி அணிந்து கொண்டு சென்றால் கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள்! வாருங்கள் இந்துக்களே! என்று அழைக்கும் கூட்டம் கூட இதை ஆதரிக்குமா? அதேபோல் கைலி அணிந்து கொண்டு மால்களில் உள்ளே செல்ல முடியாது.

பல வணிக கட்டிடங்கள் கைலி அணிந்து வருபவரை உள்ளே விடுவதில்லை. ஏனென்றால் அதை கட்டுபவர்கள் மிகவும் சாமானியர்கள் அடித்தட்டு மக்கள் ஏழை மக்கள். அதுமட்டுமில்லாமல் ஒரு குறிப்பிட்ட சமூகம் அந்த ஆடை அணிவதால் இந்துத்துவ பார்ப்பனிய சக்திகள் அதை ஒரு விரும்பத்தகாத ஆடையாக கட்டமைத்து இப்படி ஒரு மனநிலையை மக்களின் மனதில் பதிய வைத்து அந்த ஆடையை ஒரு ஒதுக்கப்பட்ட ஆடையாக இவ்விடங்களில் அந்த ஆடைக்கு அனுமதி இல்லை என்று இன்றளவும் எழுதப்படாத சட்டமாக அதை வைத்துள்ளனர்.

நால்வர்ணப்படி கோவிலுக்குள் உனக்கு அனுமதி இல்லை என்று சொன்னதும் கைலி அணிந்து கொண்டு வந்தால் கோவிலுக்குள் அனுமதி இல்லை என்று சொல்வதும் கிட்டத்தட்ட ஒன்றுதானே?

எப்படி இன்றளவும் சேரிகளை ஊருடன் சேர்க்காமல் வைத்திருப்பது ஒடுக்குமுறையோ அப்படிதான் கைலி அணிந்து வருபவர்களை சில இடங்களில் உள்ளே அனுமதிக்காமல் இருப்பதும் ஒடுக்குமுறை தான்.

இதை ஒழிக்க வேண்டும் என்றுதான் சமத்துவபுரங்களை திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின் நிறைவேற்ற நினைத்தனர். அதற்காக பல சமத்துவபுரங்கள் கட்டப்பட்டு மக்கள் குடியேற்றப்பட்டனர். ஆனால் இன்று அந்த திட்டங்களை கிடப்பில் போட காரணமும் பார்ப்பனியமே! எல்லோரும் சமத்துவமாக வாழ்ந்து விட்டால் அக்ரகாரம் இருக்காது, சேரி இருக்காது அல்லவா?

எதற்காக இந்த சின்ன விடயத்தை பெரிதாக  எழுதுகிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம் என் நினைவுக்கு தெரிந்து என் வீடுகளிலும் என் சுற்றத்திலும் ஏதாவது ஒரு விழா நாட்களில் மட்டுமே வேட்டி அணிவார்கள். பிற நாட்களில் கைலியை தான் அணிவார்கள். பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் ஒரு ஆடையை தீண்டத்தகாத ஆடை போல மாற்றியது எது? நாம் தினமும் அணியும் ஒரு ஆடையை நாமே பல இடங்களுக்கு அணிந்து செல்லாத அளவிற்கு நமது மனதில் இந்தத் தாழ்வு எண்ணத்தை பதிய வைத்தது எது?

எப்படி சுற்றி சுற்றி சிந்தித்தாலும் அது பார்ப்பனியத்தை சுற்றிதான் வந்து நிற்கும். மேல் சட்டை போடாதே என்று ஒரு வர்க்கத்தினரை உசுப்பேற்றி விட்டதும் பார்ப்பனியம் தான். இப்பொழுது அதே பார்ப்பனியம் தான் கைலி அணிந்து வருபவனை உள்ளே விடாதே என்று சொல்கிறது. வேறு சில உருவங்களில்.

இதை நாம் எடுத்து சொல்ல வேண்டாமா?

நமது அடுத்த தலைமுறைக்கு இதைக் கூற வேண்டாமா?

இது நமது கடமை அல்லவா?

ஆரியம் பார்ப்பனியம் எனும் சித்தாந்தத்தை மறைமுகமாக எந்தெந்த வகையில் நமது மனதில் புகுத்தி உள்ளது என்பதை திராவிடம் தான் எடுத்துச் சொல்ல வேண்டும் அதற்கு மக்கள் திராவிடத்தை அறிய வேண்டும் படிக்க வேண்டும் சித்தாந்தத்தை உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.

திராவிடம் பேசுவோம்! பார்ப்பனியத்தை வீழ்த்துவோம்!

தமிழ் வாழ்க! தமிழ் வெல்லும்!

திராவிடன்

No Comments

Post a Comment

Your email address will not be published.