தமிழ் மொழிபெயர்ப்புகளின் ராணி வைதேகி ஹெர்பர்ட்!

வைதேகி ஹெர்பர்ட்!!
இந்தப் பெயர் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நூற்றில் 99 பெயருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை! ஏனென்றால் இவர் சினிமாவில், மாடலிங் துறையில் அல்லது அரசியலில் இல்லை.
இவர் அப்படி என்ன செய்தார் இவரை தெரிந்து வைத்துக் கொள்வதற்கு? நமது சங்க இலக்கிய நூல்கள் 18-ஐ மொழிபெயர்த்து வழங்கி இருக்கிறார். மொழிபெயர்ப்புதானே செய்தார், இலக்கியங்களை எழுதிவிடவில்லையே என்று சில அதிமேதாவிகள் கேட்கலாம். ஆனால் சங்க இலக்கியமே தமிழின் அடிப்படை இலக்கியம் அதில் இன்றைக்கு புழக்கத்தில் இல்லாத பல சொற்கள் இருப்பதால் அதன் மொழிபெயர்ப்பு மற்ற இலக்கிய மொழிபெயர்ப்புகளை விட மிகவும் சிக்கலும் சிரமமுமான ஒன்று.
சங்க இலக்கியங்களை புரிந்துகொண்டு ஆங்கிலத்தில் உலக அளவில் அனைவருக்கும் புரியும் அளவிற்கு அதை மொழிபெயர்த்து கொடுத்துள்ளார் அவர் மொழிபெயர்த்த பல தமிழறிஞர்கள் அங்கீகரித்துள்ளனர்.
தூத்துக்குடியில் பிறந்த இவர் இப்போது வசிப்பது ஹவாய் தீவில், ஒரு முறை சங்க இலக்கியங்களில் ஒரு பாடலின் அழகும் புலமையும் தமிழின் செம்மையும் அவரை ஈர்த்தது அதை பார்த்து படித்து தமிழின் சுவையை ருசித்த அவர் இது மற்ற மொழியினருக்கும் போய் சேரவேண்டும் என்ற ஆசையில் தன் வாழ்நாளை சங்க இலக்கியங்களை மொழி பெயர்க்க அர்ப்பணித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதை செய்யவும் ஆரம்பித்து விட்டார். அதன் விளைவாக 18 சங்க இலக்கியங்களில் 12-ஐ மொழிபெயர்த்து வெளியிட்டும் விட்டார்.
ராணிமேரி கல்லூரி பேராசிரியர் முனைவர் ருக்மணி ராமச்சந்திரனிடம் அவர்களிடம் முல்லைப்பாட்டு கற்றுக் கொண்டவர். பின்பு அசராமல் இத்தனை பணிகளையும் தனது சொந்த செலவில் யாருடைய துணையும் இல்லாமல் தனியாக மொழிபெயர்த்து இத்தனை நூல்களையும் வெளியிட்டுள்ளார். இதுவரையிலும் அறிஞர்களின் ஆராய்ச்சிக்கூடத்தில் மட்டுமே முடங்கிகிடந்த சங்க இலக்கிய நூல்களை, அனைத்து தமிழர்களும் படித்து, நம் முன்னோர்கள் வாழ்ந்த அன்றைய சிறந்த வாழ்க்கையை அறிந்து கொள்ளவேண்டும்.
அமெரிக்க வாழ் தமிழறிஞர் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டும், பதிற்றுப்பத்தை டோக்கியோ பல்கலைகழகப் பேராசிரியர் டாக்கநோபு டாக்காஹாஷியும் மேற்பார்வை செய்து இவருடைய முல்லைப்பாட்டு மற்றும் நெடுநெல்வாடை ஆகிய இரு நூல்களின் மொழிபெயர்ப்புக்கு சான்று வழங்கியுள்ளார்கள்.
அவர் மொழிபெயர்த்த அனைத்து சங்க இலக்கியப் பாடல்களையும் அவர் இணைய முகவரியில் சென்று படிக்கலாம். அல்லது புத்தக வடிவில் வேண்டுமென்றால் கொன்றை பதிப்பகம் இவை அனைத்தையும் பதித்து வெளியிட்டுள்ளனர். அமேசானிலும் இந்த புத்தகங்கள் கிடைக்கின்றன.
சங்க இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதற்காக வைதேகி ஹெர்பர்ட் அவர்களுக்கு கனடாவின் டொரண்டோ பல்கலைகழகமும், தமிழ் இலக்கியத் தோட்டமும் (2012 ஆம் ஆண்டில்) விருது ஒன்றை வழங்கி கௌரவித்துள்ளன.
தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் வைக்காது இருப்பது வருந்தத்தக்கது என்று நினைத்தவர்
தனது தமிழ்ப்பணியின் மற்றொரு பகுதியாக குழந்தைகளுக்குச் சூட்ட சங்கத் தமிழ்ப் பெயர்களையும் திரட்டி அதற்காக ஒரு வலைத்தளமும் உருவாக்கியுள்ளார்.
இப்பேர்பட்ட தமிழர்களை அறிந்து கொள்வதே நமக்கு பெருமை. அதுமட்டுமில்லாமல் இவர்களைப்பற்றி அடுத்தவர்களுக்கு எடுத்து கூறுவதும் நமது கடமையாகும்.
தமிழ் வாழ்க! தமிழ் வெல்லும்!
—
திராவிடன்
No Comments