0

Enter your keyword

பகுதி நேர நாத்திகர்கள்!

பகுதி நேர நாத்திகர்கள்!

பகுதி நேர நாத்திகர்கள்!

கடவுளை முழுமையாக நம்பி அவரிடம் சரணாகதி அடைந்து நம்பிக்கை வைத்திருப்பவர்கள் ஆத்திகர்கள்!

அதற்கு நேர்மாறாக கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் நாத்திகர்கள் என்று எல்லோரும் அறிந்ததே!
ஆனா அது என்னங்க பகுதி நேர நாத்திகர்கள்?

தன்னையறியாமலேயே கடவுளை மறந்து பகுத்தறிந்து தன் சுய அறிவுக்கு எட்டி சில பல செயல்களை செய்பவர்களே பகுதிநேர நாத்திகர்கள்.

ஆனால் இதைக் கூறினால் அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். கடவுள் என்று ஒன்று இருக்கிறது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றோம் என்று தங்களைத் தானே தேற்றிக் கொள்வார்கள்.

நீங்கள் செய்வது தான் சரி! அதுதான் நிகழ்கால உண்மை! நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை காப்பாற்றாது என்று கூறினாலும் நம்முடன் விதண்டாவாதம் பேசுவார்கள். ஆனால் அவர்கள் செய்யும் செயல் எல்லாமே அவர்கள் அறிவுக்கு எட்டி  சுய நலமாக இருந்தாலும் அந்த நிமிடம் அறிவியலையும் நடைமுறைக்கும் ஒத்து வருவதையும்தான் செய்வார்கள்.

அப்படி அவர்கள் செய்யும் சில செயல்களை பார்ப்போமா?

திருடர்களோ, சமூக விரோதிகளோ வீட்டிற்குள்ளோ அல்லது அவர்களது பகுதியிலோ நுழைந்து விட்டால் யாரும் கடவுளை அழைப்பதில்லை. மாறாக போலீசை தான் அழைக்கிறார்கள்!

நெருப்புப் பிடித்து விட்டாலோ அல்லது யாரையாவது காப்பாற்ற வேண்டும் என்றாலோ தீயணைப்புத்துறையை தான் அழைக்கிறார்கள்.

ஒருவருக்கு உடல் நலம் சரியில்லை என்றால் மருத்துவ உதவியையும், மருத்துவரையும்தான்  அழைக்கிறார்கள்.

என்னென்ன பிரச்சனை வருகிறதோ அதற்கு ஏற்றால் போல் எலெக்ட்ரீஷியன், பிளம்பர், மின் துறை, சுகாதாரத்துறை, மாநகராட்சி என்று பிரச்சனைக்கு ஏற்றவாறு அவர்களை தான் அழைக்கிறார்களே தவிர யாரும் “கடவுளே! வந்து சரி செய்து கொடு!” என்று அழைப்பதில்லை.

அவர்களை அறியாமல் பகுத்தறிவு வேலை செய்து ஒருபோதும் கடவுள் வரப்போவதில்லை என்று தெரிந்து இதையெல்லாம் மனிதர்கள்தான் வந்து செய்ய வேண்டும் என்று தங்கள் அறிவுக்கு எட்டி அவர்கள் அந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்கிறார்கள்.

ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் பிரச்சனை முடிந்த பிறகு மொத்த பெருமையையும் இவர்கள் அந்த அந்த நொடி இந்த பிரச்சனைக்காக கூட வேண்டாத கடவுளுக்கு கொடுத்துவிடுவார்கள்.

இதை நாம் சுட்டிக் காட்டி, “ஒரு பிரச்சனை என்றால், இவர்களைத்தானே அழைத்தாய்! கடவுளை அல்லவே! அப்பொழுது நீங்களும் நாத்திகர்கள்தானே!” என்று கூறினால் “இல்லை, எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” என்று நமக்கு பதில் சொல்வார்கள். சரி அந்த நேரம் அந்த நொடி கடவுளை மறந்து விட்டீர்கள் பகுத்தறிவும் சுயசிந்தனையும் தான் வேலை செய்தது அரை நாத்திகர்கள் என்றாவது ஒத்துககொள்ளுங்கள் என்றால் அதையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அப்படி அவர்களை அறியாமலேயே பகுதி நேர நாத்திகர்களாக இவர்கள் வலம் வருகிறார்கள்.

ஆனால் என்றோ ஒருநாள் ஆரியத்தின் பிடியில் சிக்கி தன் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் வேளையில் அதை புரிந்து கொண்டு இவர்கள் முழுநேர நாத்திகத்தை ஏற்று கொள்வார்கள் என்று நம்புவோமாக!

ஏன் ஆத்திகத்தை தழுவி இருப்பதால் உங்களுக்கு என்ன பிரச்சனை ஏன் எல்லோரையும் நாத்திகம் தழுவ வேண்டும் என்று கூறுகிறீர்கள் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். கடவுளை மற மனிதனை நினை என்றுதான் சொல்கிறோமே தவிர யாரையும் தாழ்த்தவில்லை. ஆத்திகத்தை தழுவத் தழுவ சனாதனத்தை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். ஏனென்றால் நமது தமிழர் பண்பாட்டில் வலுக்கட்டாயமாக நுழைக்கப்பட்டது இந்து மதம். புகுத்தியது ஆரியப் பார்ப்பனியம்.

எவன் ஒருவன் இந்து மதத்தை ஏற்றுக் கொள்கிறானோ அவன் சனாதன தர்மத்தை ஏற்றுக் கொள்கிறான் என்று அன்றே சொன்னார் அண்ணா. ஆகவே திராவிடர் மானத்தோடு இருக்க வேண்டும் என்றால் பார்ப்பனியம் புகுத்திய அனைத்து பொருட்களையும் உடைக்கவேண்டும். நம் மேல் திணித்த அனைத்து பார்ப்பனிய வழிபாடுகளையும் புறக்கணிக்க வேண்டும். அதற்கு இதுவரை பார்ப்பனியம் புகுத்தி வைத்திருக்கின்ற ஆத்திகத்தை நாம் விட்டொழிக்க வேண்டும்.

ஏனென்றால் பார்ப்பனியம் புகுத்திய ஆத்திகம் நம்மை சிந்திக்க விடாது. சுயமரியாதை இழக்க வைக்கும். அறிவுக்கு ஒவ்வாத செயல்களைச் செய்ய வைக்கும். குறிப்பாக நமது நேரத்தை நிறைய விரயம் ஆக்கும்.

ஆகவே திராவிடர்களே! சிந்தியுங்கள்! தேடிப் படியுங்கள்! தமிழர்கள் வழிபாடு முறை என்னவென்று. நாம் இயற்கையை வணங்கினோமே  தவிர பார்ப்பனியம் புகுத்திய உருவ வழிபாட்டை அல்ல என்பதை புரிந்து கொண்டு எது ஆத்திகம் என்றாவது தெரிந்து கொண்டு அதைப்  பின்பற்றுங்கள்.

வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!

திராவிடன்

No Comments

Post a Comment

Your email address will not be published.