0

Enter your keyword

அழைப்பதில் வேண்டாமே அன்னிய மொழி!

அழைப்பதில் வேண்டாமே அன்னிய மொழி!

அழைப்பதில் வேண்டாமே அன்னிய மொழி!

இங்கு நடக்கும் பல வலதுசாரி கூட்டங்களில், மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பாரத மாதா கி ஜே , வந்தேமாதரம் என்று குரல் எழுப்பப்படுகிறது. அவ்வளவு ஏன் இன்று பல இளைஞர்கள், இளைஞிகள் ‘ஜி’ என்று அடைமொழியாகச் சேர்த்து பேசுவதை நாம் காணமுடிகிறது. எதற்கெடுத்தாலும் ஜி! எங்கு பார்த்தாலும் ‘ஜி’. அதை மரியாதை நிமித்தமாகக் கூறுகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் வடமொழிச் சொல்லான ‘ஜி’ நமக்கெதற்கு?

இப்படி விவகாரத்திற்கு இடமான பேச்சுகளைப் பற்றியும், கடவுள் சம்பந்தப்பட்ட காட்சிகளை இங்கே எழுதக்கூடாது என்று நான் நினைத்து வந்தேன். ஆனால் வலதுசாரி தோழர்கள் நம்மை எழுத வைக்கிறார்கள். பாரத மாதாவை வாழவைத்து  ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்றாகிவிட்டது. நமது பாரத மக்களை எப்படி வாழ வைப்பது என்பதைப் பற்றிச் சிந்திக்காமல் இன்னமும் வெறும் பாரத மாதா கி ஜெய் என்று கூறிக்கொண்டு வலதுசாரி அமைப்புகள் நம்மையும் குறிப்பாக வட நாட்டு மக்களையும் ஏமாற்றி வருகிறார்கள். பாரதமாதா வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் அதில் உள்ள மாதாவின் பிள்ளைகளான நாம் தான் வாழ கடினப்பட்டு கொண்டிருக்கிறோம்.

இந்தி எதிர்ப்பின் போதே இந்த சொற்றொடர்களை அந்நிய மொழி என்று இங்கு மொழிப்பற்று உள்ள எந்தத் தமிழனும் பயன்படுத்தக் கூடாது, அதை மீறி பயன்படுத்திய காங்கிரஸ்காரர்களையும் ஆட்சேபித்துத் தடுத்து தமிழர்களின் அந்த கோரிக்கைக்கு செவிசாய்த்த ஆளும் காங்கிரசு அச்சொற்களைத் தவிர்த்தது. திராவிட ஆட்சி அமைந்த பின் அச்சொற்கள் கிட்டத்தட்ட வழக்கொழிந்து போயின.

இந்த பத்து வருடங்களாக வலதுசாரி அமைப்புகளும் அதன் தோழமை அமைப்புகளும் தான் இந்த சொற்றொடர்களைத் தமிழகத்தில் பரப்பி வருகின்றனர்.

பாரத மாதா கி ஜே என்பது வடமொழிச் சொல் என்று தெரிந்தும் அதற்குத் ஈடான தமிழில் சொற்கள் இருந்தும் வலதுசாரி சிந்தனையாளர்களாக இருந்தாலும், தமிழர்களான இவர்கள் அந்தச் சொல்லைப்  எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்பது நமக்கு இன்று வரை புரியவில்லை. அவர்களுக்கு புரியுமா என்றால் அதற்கு பதில் இல்லை. மீறி கேள்வி கேட்டால் நம்மை “Anti-Indian” என்றுதான் கூறுவார்கள்.

இப்படி அவர்களுக்கு தெரியாமல் பல வடமொழிச் சொற்களை வெகு இலகுவாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல நாமும் தான்.”பாரத அன்னை வாழ்க!”  என்று அழகு தமிழில் இருக்கும் பொழுது எதற்கு வடமொழி இந்தியில் இருக்கும் வார்த்தை  நாம் சொல்வானேன்?  ஆரியர்களுக்குச் செல்லுமிடமெல்லாம் அவர்கள் ஊர், பார்ப்பனியம் தனது கரங்களை வெகுவாக மற்ற மொழிகளின் மேல் சமஸ்கிருதத்தை திணித்து பயன்படுத்தி வருகிறது. அவர்களின் மொழியான சமஸ்கிருதம் விட்டுத் தராமல் மற்ற மொழிகளில் திணித்து அவர்கள் பயன்படுத்தி இருக்கும் அந்தப் பற்று தமிழர்களாகிய நமக்கு இருக்க வேண்டாமா?  சிந்தனைகள் வேறு வேறாக இருக்கலாம் கருத்து மோதல்கள் இருக்கலாம் ஆனால் இனம், பிறப்பு, வளர்ப்பு, மொழியில் தமிழன் என்பது ஒற்றை அடையாளமாக இருக்கும் போது தமிழை பயன்படுத்துவதே சாலச் சிறந்தது. இதை வலதுசாரி தோழர்கள் சிந்திக்க வேண்டும். இந்த கோஷத்தை பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஆரியர்கள். அதை ஏதுமறியாத இந்த இடைநிலை வகுப்பைச் சேர்ந்தவர்களை ஏமாற்றி நம்ப வைத்து இந்து என்ற மாயையில் தங்களை அறியாமல் அவர்கள் வாயாலேயே சமஸ்கிருதம் மற்றும் இந்தி சொற்களால் கோஷம் போட வைத்து நாட்டுப்பற்று என்ற போலி பிம்பத்தைக் கட்டமைத்து அவர்களை மடை மாற்றி விடுகிறார்கள்.

இப்பொழுதெல்லாம் சென்னையில் மட்டும் என்று இல்லாமல் பல ஊர்களிலும் மாமன், மச்சான், தோழர், நண்பா, மாப்பிள என்று அழைப்பதை  விட்டுவிட்டு “ஜி” என்று அழைக்கிறார்கள்.

எந்த ஜீ யும் நமக்கு வேண்டாம் என்று அன்றே அண்ணா சொன்னார். அதைப் பின்பற்றி நமது இளைஞர்களும் வரும் தலைமுறையினரும் இந்த வடமொழி சொல்லாடல்களை விட்டொழித்து தமிழ் சொற்களைப் பயன்படுத்துவது தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும், திராவிடத்திற்கும்  நல்லது.

திராவிடம் பேசுவோம்! திராவிடம் பழகுவோம்!

தமிழ் வாழ்க! தமிழ் வெல்லும்!

திராவிடன்

No Comments

Post a Comment

Your email address will not be published.