0

Enter your keyword

இதழாசிரியர் கலைஞர்!

இதழாசிரியர் கலைஞர்!

இதழாசிரியர் கலைஞர்!

தமிழ் எழுத்து என்பது அவர் மூச்சு, கலைஞர் எங்கிருந்து அந்த பயணத்தை ஆரம்பித்தார் என்பது அனைவரும் அறிந்ததே! மாணவநேசன் என்னும் கையெழுத்து இதழை முதன்முதலில் வெளியிட்டு இளைஞர்களைத் திரட்டினார். அவருக்கும் பத்திரிகை துறைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. அவர் ஆரம்பித்ததே பத்திரிகையில் தான். பெரியாரின் அறிமுகமும் கிடைத்தது பத்திரிகையால் தான் பேரறிஞர் அண்ணாவை சந்தித்ததும் அப்படித்தான்.

இதோ கலைஞர் இப்படித்தான் சந்தித்தார் தன் இதய மன்னன் அண்ணாவை. 1942ஆம் ஆண்டு அண்ணா நடத்திய ‘திராவிட நாடு’ இதழுக்குக் கலைஞர் ‘இளமைப்பலி’ என்னும் கட்டுரையை எழுதி அனுப்பினார். இக்கட்டுரை
‘திராவிட நாடு’ மூன்றாவது இதழில் வெளிவந்தது. திருவாரூரில் நடைபெற்ற நபிகள் நாயகம் விழாவுக்கு வருகை தந்த அண்ணா அவர்கள் ‘இளமைப்பலி’ கட்டுரை எழுதிய கலைஞரைச் சந்திக்க விரும்பி அவரை அழைத்து வரச்செய்து நேரில் சந்தித்தார். அதற்குப் பிறகு நடந்தது எல்லாம் வரலாறு.

1942ல் ‘முரசொலி வெளியீட்டுக் கழகம்’ என்ற பெயரில் நிறுவனம்
ஒன்று தொடங்கி மாத இதழாக ‘முரசொலி’ இதழை வெளியிட்டார் கலைஞர். அதில் ‘சேரன்’ என்ற புனைபெயரில் கனல் தெறிக்கும் கட்டுரைகளை எழுதினார்.

முரசொலி, முத்தாரம், மறவன் மடல் இவற்றின் ஆசிரியராக இருந்த
கலைஞர், குடியரசு துணையாசிரியராகவும், நம்நாடு, வாரஇதழ், மாலைமணி நாளிதழின் ஆசிரியராகவும் இருந்தவர். இன்று நமக்கு தலைவர் கலைஞராக அவர் கிடைக்கப் பெற அனைத்துக்கும் வழிவகை செய்தது அந்த பத்திரிகை தான்.

திமுக தொண்டர்களிடம் ஏற்பட்ட பிணைப்பும் இந்த பத்திரிகையால்தான்! அவர் உடன்பிறப்புகளுக்கு எழுதும் எழுத்தை படிக்கவே அவருக்கென்று ஒரு கூட்டம் கூடியது என்றால் அது மிகையல்ல. ஒரு பத்திரிகையாளராக வாசகர்களை மதித்தவர் கலைஞர் கருணாநிதி. தனது கருத்துகள் வாசகர்களிடம் சரியாகச் சென்று சேர வேண்டும் என்று அக்கறை கொண்டவர். அதே சமயம், வாசகனுக்குப் புரிய வேண்டும் என்பதற்காகத் தன்னுடையது என்று உருவாக்கி வைத்திருக்கும் நிலையிலிருந்து கீழிறங்கிச் செல்ல விரும்பாதவர். ‘முரசொலியில் அவர் எழுதும் கடிதங்களும் கேள்வி-
பதில்களும் அதற்கு உதாரணங்கள். சாமானியத் தொண்டர்களைப் பெரும்பான்மை வாசகர்களாகக் கொண்ட பத்திரிகை அது என்றாலும், சிக்கலான விஷயங்களை அணுக அவர் தயங்குவதில்லை. வாசகரிடம் கீழிறங்கிச் செல்வதல்ல; மேலே உயர்த்துவதுதான் பத்திரிகையாளரின்
வேலை என்று அதை பல ஆண்டுகள் செய்தும் காண்பித்தார்.

அதனால் தான் என்னவோ இன்று ஊடகங்களை சந்திக்க பயப்படும் ஒரு பிரதமர் இருக்கும் இதே நாட்டில் ஊடகங்களை தேடித் தேடிச் சென்று பேட்டி கொடுத்த ஒரே தலைவர் இவர்தான். கடைசி இரண்டு ஆண்டுகளாக அவர் அரசியலில் ஈடுபடாமல் இருக்கும்பொழுது நமக்கு எப்படி வருத்தமாக இருந்ததோ அதற்கு ஈடாக வருத்தப்பட்டவர்கள் இதழாளர்கள்.

கலைஞர் முடிந்தவரை எல்லா பத்திரிகைகளையும் படித்து விடுவார் அவருக்கு ஒவ்வாத பத்திரிகைகள் ஆக இருந்தாலும் சரி. ஓர் இதழாளனுக்குத் தேவையான எல்லாவற்றையும் பற்றிய பொது அறிவு. பத்திரிகையில் இடம்பெறும் சின்னச் சின்னச் செய்திகளும் கவனத்துக்குரியவை. அவையும் முக்கியமானவையே என்ற
பார்வை அவரிடம் இருந்தது.

இதற்கு உதாரணம் இந்த சம்பவம்:

தமிழன் நாளிதழில் வார ராசி பலன்கள் பகுதி உண்டு. ஜோதிடரிடமிருந்து அந்த வார பலன் வரவில்லை. அச்சுக்குப் போக வேண்டும். எனவே, முந்தைய வார ராசிபலன் பகுதியில் மேஷ ராசிக்கான பலனை விருச்சிக ராசிக்கும் துலாம் ராசிக்கானதைக் கும்ப ராசிக்குமாக மாற்றி பக்கத்தை அனுப்பி அச்சுக்கு அனுப்பிவிட்டார்கள்.

மறுநாள் கலைஞர் அவர்களை
அழைத்தார். ‘ஏன்யா, விருச்சிக ராசிக்கான பலன்ல சித்திரை
நட்சத்திரம் எப்படி வரும்? அது துலாம் ராசியிலதான வரும்? என்னா
ஜோசியமோ! என்று கடிந்துகொண்டார்.
பத்திரிகையின் ஒவ்வொரு எழுத்தையும் அவர் வாசிக்கிறார்
என்பது மட்டும் அல்ல: தனக்குக் கொஞ்சமும் உடன்பாடில்லாத ஜோதிடத்தையும் கூட அவர்
விட்டுவைக்கவில்லை என்பதை என்னவென்று சொல்ல? அதான் கலைஞர்!

இன்றைய கணினி யுகத்தில் எவ்வளவு கவனமாகப் பார்த்துக்கொண்டாலும் பத்திரிகைகளில் அச்சுப் பிழை
குடியேறுவதைத் தவிர்க்க இயலவில்லை. ஆனால், கலைஞர் கருணாநிதி பிழை பொறுக்க மாட்டார். அந்த வகையில் அவர் ஒரு முழுமைவாதி. அவரது ஆக்கங்கள் கைப்பட எழுதப்படுபவை. அதில் அடித்தல் திருத்தல்களைக் காண முடியாது. காரணம் பிழையோ அடித்தலோ வந்தால், எழுதிய பிரதியை அப்படியே வீசிவிட்டு மீண்டும் எழுதுவார். அவ்வளவு கச்சிதம் இன்று இருக்கும் பல பத்திரிகைகளின் ஆசிரியர்குழுவில் பலருக்குக் கிடையாது என்ப தே நிதர்சனமான உண்மை.

பத்திரிகையாளர் சந்திப்புகளில் சில சமயம் காரியார்த்தமாகவும் சில சமயம் தோழமையாகவும் அவர் சொல்வார்: ‘நானும் பத்திரிகைக்காரன்! அது மிகையோ தற்புகழ்ச்சியோ அல்ல, தொட்டு உணர்ந்த உண்மை! ஏனென்றால் அவர் முதல்வராக இருந்தாலும் ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவராக இருந்தாலும் அவர் தன்னை ஒரு இதழாளர்களாகத்தான் அவர்கள் நடுவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

தமிழ் வெல்லும்! தமிழ் வாழ்க!

திராவிடன்

No Comments

Post a Comment

Your email address will not be published.