0

Enter your keyword

ஏன் இலவசம்?

ஏன் இலவசம்?

ஏன் இலவசம்?

இலவசம் என்றவுடன் முதலில் நமது நினைவுக்கு வருவது அரசியல் கட்சிகள் தாங்கள் ஆட்சி அமைத்தவுடன் மக்களுக்கு இதெல்லாம் இலவசமாக தருவோம் என்று கூறுவதைத்தான். இன்னும் சில அறிவுஜீவிகள் இப்படி இலவசத்தைக் கொடுத்துக் கொடுத்து நாட்டை குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறார்கள் என்று கூட அங்கலாய்ப்பு செய்வது உண்டு. உண்மையில் இந்த இலவசங்களால் தான் நாடு சீர்கெடுகிறதா? இது மக்களை சோம்பேறிகளாக்கும் முயற்சியா? அல்லது தங்கள் ஓட்டுக்காக மக்களை இப்படி பயன்படுத்திக் கொள்கிறார்களா? இல்லை மக்கள்தான் இலவசங்களுக்காக அடிமையாகி அரசியல் கட்சிகளுக்கு ஓட்டு அளித்து வெற்றி பெற வைக்கிறார்களா? அது ஏன் இலவசம் என்றவுடன் ஏழை மக்களுக்கு கொடுக்கப்படும் டிவி, மிக்சி, கிரைண்டர், சைக்கிள் மட்டும் நினைவுக்கு வருகிறது என்ற கேள்வி என்னுள் சில காலமாக எழுவதுண்டு? ஏன் மற்ற இலவசங்களை பற்றி மக்கள் பேசுவதும் இல்லை அதைப் பற்றி நினைப்பதும் இல்லை அது எங்கும் சுட்டிக் காட்டுவதும் இல்லை?

இலவசம் என்றால் இவை மட்டும்தான் இலவசங்களா பொருளாகக் கொடுத்தால் மட்டும்தான் இலவசமா சலுகைகளாக கொடுத்தாலும் அது இலவசம் தானே? பின்பு ஏன் அந்த சலுகைகள் பற்றி இலவசங்களை பற்றி எல்லோரும் பேச மறுக்கிறார்கள்? ஒருவேளை இவர்களுக்கு வந்தால் ரத்தம் அவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி போலும்?

கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கும் கோடிக்கணக்கான வரிச்சலுகைகள் ஏன் இலவசமாய் தெரிவதில்லை? – திரு. சுரேஷ் சம்மந்தம் அவர்கள் (CEO- Kissflow) (காணொளி கீழே)

2019 மத்திய நிதியமைச்சர் கார்ப்பரேட்டுகள் ஊக்கம் அளிக்கும் ( stimulus) வகையில் ஒரு லட்சத்து நாற்பத்து ஐந்து ஆயிரம் கோடி ரூபாய் ( ₹145000 x 107) வரிச் சலுகை கொடுத்தார், அதுமட்டுமில்லாமல் ஐந்தரை ஆண்டு கால ஆட்சியில் கிட்டத்தட்ட ஐந்து லட்சத்து முப்பதாயிரம் கோடி ரூபாய் (₹530000 x107) அளவில் சலுகைகள் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கியது இந்த அரசு இவையெல்லாம் இலவசங்களில் வராதா? இதைப் பெற்றவர்கள் எல்லாம் பிச்சைக்காரர்கள் அளவிற்கு பாவித்து எழுத மனமும் இவர்களுக்கு வராதா? ஏழை சொல் அம்பலம் ஏறாது என்று கூறுவார்கள், ஆனால் இங்கு பணக்காரர்கள் பெறும் சலுகைகள் இலவசங்கள் அம்பலம் ஏறாது போல?

பணக்காரர்கள் மட்டுமல்ல பலருக்கும் பல சலுகைகள் அரசுகளால் கொடுக்கப்படுகின்றன , பல அரசு அதிகாரிகளுக்கு குறிப்பாக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஏகப்பட்ட சலுகைகள் கொடுக்கப்படுகின்றன இதனை எல்லாம் இலவசங்களில் சேர்க்க இந்த அறிவுஜீவிகளுக்கு மனம் வரவில்லையா?

உதவி ஆட்சித்தலைவர் அல்லது அதற்கு மேல் இருப்பவர்களுக்கு தனிப் பயன்பாட்டுக்காக அரசு செலவில் ஒரு வாகனம் வழங்கப்படும் அதன் அனைத்து செலவுகளும் அரசே ஏற்கும் இது அவருக்கு அளிக்கப்படும் அரசு வாகனம் அல்லாமல் இன்னொரு வாகனம் ஆகும் இவையெல்லாம் சலுகைகள் தானே?

ரயில்வே அதிகாரிகளில் பெரும்பாலானவர்கள் தங்கள் குழந்தைகளின் படிப்பு செலவைக் கூட திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் இதுவும் அரசு கொடுக்கும் சலுகைகள் தான் இதைப்பற்றி எல்லாம் ஏன் பேசவில்லை?

அவ்வளவு ஏன் நாம் எந்த ஒரு பொருள் வாங்கினாலும் அதை வருமான வரியில் கழித்துச் செலுத்த முடியாது ஆனால் கம்பெனி வைத்திருப்போர் எந்தப் பொருள் வாங்கினாலும் அதை வருமான வரியில் கழித்துச் செலுத்தலாம் , மின்சார கட்டணம் முதல், காப்பீடு, சந்தாதாரர் கட்டணம், பராமரிப்பு கட்டணம் போன்ற அனைத்தையும் கழித்துக் கொள்ளலாம். இந்த மாத சம்பளக்காரர்களால் அது முடியுமா? அப்பொழுது இந்த சலுகை எல்லாம் இலவசங்களில் வராதா???

மத்திய அரசு ஊழியர்களுக்கும் மாநில அரசு ஊழியர்களுக்கும் பல சலுகைகள் கொடுக்கப்படுகிறது இந்த சலுகைகளும் இலவசங்களில் வராதா? அதிகார வர்க்கமும், பணக்கார கார்பொரேட்களும் பெறும் சலுகைகள் எல்லாம் இலவசங்களில் வராத பொழுது ஏழை மக்களுக்குக் கொடுக்கும் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் இலவசங்களில் வருகிறது எப்படி? அதை வேதனைப்படுத்தி படங்களும் திரைப்படங்களும் வருவது எப்படி? இதுதான் ஏழைகளும் விளிம்புநிலை மனிதர்களும் பெரும் உதவிகளை கொச்சைப்படுத்தும் மனநிலை. அதாவது நான் மிகவும் முன்னேறி மேல்நிலையில் இருக்கிறேன் நீங்கள் எல்லாம் சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்ற ஒரு ஆதிக்க ஆணவ மனநிலை இருப்பதாலேயே இப்படி ஏழைகள் மற்றும் இயலாதோர் பெரும் சலுகைகளை கொச்சைப்படுத்தி பேச வைத்து விடுகிறது.

அந்த சலுகைகளை இலவசங்களை பெறுபவர்களுக்குத் தான் தெரியும் அதன் பின்னால் இருக்கும் வலியும் வேதனையும்.

இலவச டிவி பெறுபவருக்குத் தான் தெரியும் இன்னொருவர் வீட்டில் நின்று திரைப்படத்தையோ ஒளியும் ஒலியும் பார்த்த பொழுது ஏற்பட்ட வலி.

இலவச கேஸ் அடுப்பு பெரும் ஏழைத் தாய்மார்களுக்குத் தான் தெரியும் புகையில் வெந்து சமைக்கும் கொடுமை.

இலவச அரிசி வாங்கும் பெற்றோர்களுக்குத் தான் தெரியும் தன் பிள்ளைகளின் பசிக்கொடுமை.

ஒரு வீட்டில் இந்த மின்சாதன பொருட்கள் இருந்தே ஆக வேண்டும் என்று இருக்கும் இன்றைய சூழ்நிலையில் அதை வாங்க முடியாமல் தவிக்கும் கணவருக்கு தான் தெரியும் இலவச மிக்சி கிரைண்டரின் பயன்.

மேலும் தெளிவடைய பொருளாதார ஆய்வாளர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்கள் அரசின் இலவசங்களை பற்றி பேசிய காணொளி கீழே.

நாட்டில் கொடுக்கப்படும் இலவசங்கள் எல்லாம் வீண் அல்ல, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு, விளிம்புநிலை மக்கள் இவையெல்லாம் பெறுவதற்கு செலவிடும் நேரத்தைக் குறைத்து அதைமற்ற பயனுள்ள விடயங்களில் செலவிட வழி வகுப்பதே இந்த இலவசங்களை மக்களுக்கு கொடுக்கும் நோக்கமாகும். முடிந்தால் அதைப் பற்றி பெருமையாகப் பேசுங்கள் அல்லது அந்த நோக்கத்தை அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் அதை விடுத்து கொச்சைப்படுத்தி பேசாமல் இருப்பதே அந்த மக்களுக்கு நீங்கள் செய்யும் உதவியாகும்.

தமிழ் வாழ்க! தமிழ் வெல்லும்!

திராவிடன்

No Comments

Post a Comment

Your email address will not be published.