0

Enter your keyword

ஆத்திகமும் வளர்த்த திராவிடம்!

ஆத்திகமும் வளர்த்த திராவிடம்!

ஆத்திகமும் வளர்த்த திராவிடம்!

கபாலீஸ்வரர் கோயில் குளம் தூர்வாரும் பணி

அதான் ஆத்திகம் என்றாலே பிடிக்காது, கடுமையாக விமர்சனம் செய்யும் திராவிடம் ஆயிற்றே? பின் எதற்கு ஆத்திகம் வளர்க்க வேண்டும் என்று கேள்வி வருமே? இயக்கமாக விமர்சனம், பகுத்தறிவு பரப்புதல் போன்றவற்றை இன்றளவும் செய்து கொண்டு தான் வருகிறது. ஆனால் தேர்தல் அரசியல் என்பது அனைவரையும் உள்ளடக்கியது. அனைத்து விருப்பு வெறுப்புகளையும் தாண்டி தான் ஆட்சி செய்யவேண்டும் என்பதை இந்த நாட்டிற்குத் தெளிவாக எடுத்துக் காட்டியது திராவிடமும், திராவிட சித்தாந்தம் கொண்ட  அரசியல் கட்சிகளின் ஆட்சியும் தான்.

ஒரு சார்பாகவும், மதத்தின் பெயரால் ஆட்சி  நடக்கும் மாநிலங்களின் வளர்ச்சியைப் பற்றி நாம் கூற வேண்டிய தேவை இல்லை.

திராவிட சித்தாந்தம் உள்ள கட்சி ஒன்று ஆட்சிக்கு வந்துவிட்டது, கடவுள் இல்லை என்று சொல்லுபவரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டது,  இனி கோவில்கள் எல்லாம் இடிக்கப்படும் என்று வதந்தி பரப்பப்பட்டது!

முதன் முதலில் திராவிட கட்சி ஒன்று தமிழகத்தின் ஆட்சியில் அமர்ந்ததும் அண்ணா, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறினார். அவர் அப்படிச்செய்ய மாட்டார் என்றனர் ஒரு தரப்பினர். இல்லை அவரும் இந்து மதம் எதிர்ப்பாளர்  தான் கண்டிப்பாக எதிர்வினை ஆற்றுவார் என்றனர் ஒரு தரப்பினர். ஆட்சிக்கு வந்தவுடன் என்ன செய்தார்?

திராவிடம் என்றும் உருவாக்கச் சொல்லி கொடுக்குமே தவிர அழிக்கச் சொல்லிக் கொடுப்பது இல்லை. தேர்தல் அரசியலில் ஈடுபட்ட திராவிடத்தைப் பின்பற்றிய அரசியல் கட்சிகளும் அதையே செய்தன.

யார் கோவில்களை இடித்து தள்ளி இந்து மதத்திற்கு எதிராக வினையாற்றுவார்கள் என்று கூறப்பட்டதோ அவர்கள் தான் இந்தியாவிலேயே அதிக கோவில்களுக்கு  திருப்பணிகளைச் செய்தனர். இந்து மத கோவில்கள்,  அதில் பணிபுரியும் அர்ச்சகர்கள் என்று அனைத்து தரப்பு மக்களையும் மனதில் வைத்து சட்டங்கள் இயற்றி, திட்டங்கள் தீட்டி, கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு, ஆலயங்களை மராமத்து செய்து சீரமைத்துத் தந்தனர். அழிவின் விளிம்பிலிருந்த கோவில்களைத் தேடித்தேடிக் கண்டுபிடித்து காத்தது திராவிட ஆட்சியே! கோட்டையாக இருந்தாலும் கோவிலாக இருந்தாலும் தமிழனின் முன்னேற்றத்துக்கு பயன்பட வேண்டும். தமிழைப் புறக்கணிப்பதாக இருக்கக் கூடாது! என்பதில் தெளிவாக இருந்தது, இருந்து வருகிறது இன்று வரை ஆண்டு வரும் திராவிட கட்சிகளின் ஆட்சி.

இத்தனை ஆண்டுகள் திராவிட கருத்தைப் பின்பற்றிய ஆட்சிகளில் அப்படி என்னென்ன பணிகள் கோவில்களில் நடைபெற்றது என்பதை https://tnhrce.gov.in/hrcehome/index.php  இந்த இணையப்பக்கத்தில் சென்று பார்க்கலாம். ஏனென்றால் அந்த பட்டியல் மிகவும் நீண்டது.

1967 ஆம் ஆண்டு அறநிலையத்துறைக்குக் கட்டுப்படாமல் பல்லாயிரக்கணக்கான கோவில்களும் அவற்றுக்குச் சொந்தமான பல இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களும் தனியார் வசம் இருந்தன. ஒரு தனி அலுவலரை நியமித்து  அவர் நடத்திய ஆய்வில்தான் தமிழகத்தில்  41,306 அறநிலையங்களும், அவைகளுக்குச் சொந்தமாக 201,343 ஏக்கர் நிலமும் தனியார் வசம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவைகளில் சுமார் 25,000 அறநிலையங்களும், 65,000 ஏக்கர் நிலமும் 1967-75 காலகட்டத்தில் மீட்கப்பட்டது. 1967 க்கு முன்னால் தமிழ்நாட்டுக் கோவில்களின் ஆண்டு வருமானம் மொத்தம் ரூ. 3 கோடி அளவுக்குத்தான் இருந்தது. 1975-76 நிதியாண்டில் ஆண்டு வருமானம் ரூ. 12 கோடி ஆனது.

அதனை எல்லாம் மீட்டது திராவிடம். இத்தனை ஆண்டு காலம் ஆத்திக சிந்தனை உள்ள ஆட்சியே நடைபெற்றாலும் அப்படி எதுவும் மீட்கப்படவோ அல்லது அதை பற்றி சிந்திக்கவோ இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

அது மட்டுமா கோவில் மூலமாகவும் நன்மைகள் செய்யலாம் என்று, அதைச் செய்து காட்டியது சாமானிய மக்களுக்கான இயக்கமான திராவிட இயக்கம். கோவில்களின் மூலமாக ஏழை பக்தர்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்களைத் தீட்டியது  திராவிடம். செய்தவை சிலவற்றின் பட்டியல்.

1. மிகக் குறைந்த செலவில் திருமணங்கள் நடத்திக்கொள்ள 1967 – 75 ஆகிய காலகட்டத்தில் மட்டும் 80 திருமண மண்டபங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டன. 120 மண்டபங்கள் கட்டித் திறக்கப்பட்டன

2. அனாதைக் குழந்தைகளுக்காக அரசு உதவி செய்து கோவில்கள் சார்பில் கருணை இல்லங்கள்  திறக்கப்பட்டன.

3. பூசாரிகளுக்கு ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

4. கோவில்களில் செயல்படும் கருணை இல்லங்களுக்கு 50 சதவிகிதம் அரசு மானியம் வழங்கப்பட்டது.

5. திருக்கோவில் தொடர்பான ஆகம விதிகள் வடமொழியில் உள்ளதைத் தமிழில் மொழி பெயர்த்து, வெளியிட முயற்சிகள் செய்யப்பட்டன.

6. திருக்கோவில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்கள், பூசாரிகள், பட்டாச்சாரியார்கள் ஆகியோர்களுக்கு ஓராண்டு காலப்புத்தொளிப்பயிற்சி அளிக்க 20 சைவத் திருமுறை ஆகம பயிற்சி மையங்களும், 7 வைணவ திவ்ய பிரபந்த பயிற்சி மையங்களும் அமைக்கப்பட்டன. ஒரு கால வழிபாடு மட்டுமே நடக்கும் அளவுக்கு நிதி வசதியற்ற கிராமப்புற கோவில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு இலவசமாக மிதிவண்டி வழங்கப்பட்டது.

7. 114 கோவில்களில் நூலகங்கள் அமைக்கப்பட்டன. இதுவரை கோவில்களில் நூலகம் என்று இந்தியாவில் வேறு எதாவது மாநிலத்தில் கேள்விப்பட்டுள்ளோமா?

8. ஆண்டவன் முன்னால் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் முக்கிய பிரமுகர்களுக்குப் பரிவட்டம் கட்டுவது நிறுத்தப்பட்டது.

9. தமிழில் வழிபாடு நடத்த உத்தரவிடப்பட்டது. தமிழில் மிகச் சிறப்பாக வழிபாடு செய்பவர்க்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

10. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகச் சட்டம் போடப்பட்டது.

ஆனால் காலம் காலமாக திராவிடர்களை எதிர்க்கும் சனாதான சக்திகள் இன்றும் சட்டத்தில் வாயிலாக இடையூறு கொடுத்துக் கொண்டே வருகின்றனர்.

“பகுத்தறிவுப் பிரச்சாரத்தை தொடருவோம். அதேநேரத்தில் பக்திப் பிரச்சாரத்தைத் தடுக்கமாட்டோம்  கடவுளை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் அவரவர்  விருப்பத்தை பொறுத்ததாகும்”.

‘கோயிலைச் சார்ந்த மக்கள், மக்களைச் சார்ந்த கோயில்கள்’ என்று சொன்னார் குன்றக்குடி அடிகளார். இதை நடைமுறையில் செய்து காட்டியது திராவிட கருத்துக்களை உடைய திராவிட கட்சிகளின் ஆட்சி. இப்படிச் செய்து தருவதால் தனது கொள்கையிலிருந்து நழுவிவிட்டதாக நினைக்கத் தேவை இல்லை. ஏனென்றால் கொள்கையிலிருந்து விலகி இருந்தாலே இன்று உத்திர பிரதேசம் போல அல்லவா மாறி இருக்கும் தமிழகம்?

அத்தகைய விருப்பு வெறுப்பற்ற  ஆட்சிதான் திராவிட ஆட்சி.

ஆத்திகரும், நாத்திகரும் விரும்பும் ஆட்சியாக, அனைத்து மதத்தைச்சேர்ந்தவர்களும் ஏற்றுக் கொள்ளும் ஆட்சியாகத் தான் திராவிட அரசுகள் இருந்தன, இனியும் இருக்கும்.

தமிழ் வாழ்க! தமிழ் வெல்லும்!


திராவிடன்

No Comments

Post a Comment

Your email address will not be published.