0

Enter your keyword

பிரிவினைவாத பிரபுக்கள்!

பிரிவினைவாத பிரபுக்கள்!

பிரிவினைவாத பிரபுக்கள்!

பிரிவினைவாதம் இவர்களின் முதல் மற்றும் கடைசி ஆயுதம்! எப்பொழுதெல்லாம் தேர்தல் நெருங்குகிறதோ அல்லது கருத்து அரசியல் பேச முடியாமல் பின்தங்கும் நிலையில் இருக்கும்போதோ ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அரசியல் பிரிவான பாஜக கையில் எடுக்கும் ஆயுதம் தான் பிரிவினைவாதம்!

இன்று பிரிவினைவாதம் பேசி அமைதியை குலைப்பார்கள் அல்லது பிரிவினைவாதம் பேசுவதை எதிர்ப்பது போல் அரசியல் செய்வார்கள். ஆனால் அவர்களின் ஒரே குறிக்கோள் மக்களை திசை திருப்பி அவர்களின் பார்ப்பனிய தந்திரத்தை நிலை நிறுத்துவதே ஆகும்.

திராவிட ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் அமைதியைக் குலைக்க இப்பொழுது அவர்கள் கையில் எடுத்திருக்கும் பிரிவினைவாத போக்கே “கொங்குநாடு” முழக்கம். தமிழகத்தின் வரலாற்றை சரியாக உணராமல் அவர்கள் எடுத்திருக்கும் இருமுனை கூர் கத்தியே இந்த கொங்கு நாடு முழக்கம் என்பது அக்கட்சியில் இருப்பவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் இங்கிருக்கும் பெரியாரிய, திராவிட இயக்க தோழர்களுக்கு நன்கு தெரியும் இது எங்கு கொண்டு போய் விடும் என்று.

இந்த முழக்கம் தனது பல வருட ஆதரவாளரான பார்ப்பனிய பத்திரிகையான தினமலர் மூலமாக வெளியிட்டு தமிழக மக்களின் மனநிலை என்ன என்று ஆழம் பார்த்து இருக்கிறார்கள் சங்கிகள். குறிப்பாக தினமலர் இத்தகைய பொறுப்பற்ற மக்களிடம் கொதிப்பை ஏற்படுத்தக்கூடிய செய்தியை வெளியிட்டதற்கு வேறு சில காரணங்களும் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் காலங்காலமாக திராவிட எதிர்ப்பையே குறிக்கோளாகக் கொண்ட இத்தகைய பத்திரிகையில் இப்படி ஒரு செய்தி வருவது வியப்பல்ல என்றாலும், தற்போது தமிழக பாஜகவில் நடந்து வரும் பாலியல் தொல்லைகள் தொடர்பாக கமிட்டி அமைக்க வேண்டும் என்று அவர்கள் போட்ட செய்தியால் கொதிப்படைந்த பாஜகவைக் குளிர்விக்கவே இப்போலிச் செய்திக்கு கடுமையான எதிர்வினை என்று தெரிந்தும்  வெளியிட்டுள்ளார்கள் போல?

சரி என்ன ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுக்குக் கொங்குநாடு மீது திடீர் பாசம்? அம்மக்களின் உயர்வுக்காக திடீரென்று பேசுகிறார்களா? அவர்கள் ஆண்டு கொண்டிருக்கும் அல்லது ஏற்கனவே ஆண்ட மாநிலங்களில் இதே போல தனி மாநிலங்களுக்கான பல கோரிக்கைகள் ஏற்கப்படாமல் இருக்கின்றன.  அவையும் மக்கள் கோரிக்கைதான். அதுவும் இவர்களுக்கு வாக்களித்து பதவியில் அமரச் செய்த மக்களின் கோரிக்கைகள்தான். ஆனால் அதைக் கருத்தில்கொள்ளக்கூட இவர்களுக்கு நேரம் இருந்த மாதிரி தெரியவில்லை. சரி பிற மாநிலங்களில் அவர்களின் இரட்டை முகத்தைக் காண்போம் வாருங்கள்.

கூர்க்காலாந்து வேண்டும் என்று சமீபத்தில் பாஜகவின் எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர். இது அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று என்பதையும் மறக்க வேண்டாம். இப்பொழுதுதான் பிஜேபி மேற்கு வங்கத்தில் காலூன்றி வருகிறது. இவர்கள் காலூன்ற மேற்கு வங்க கம்யூனிஸ்ட்டுகளும் ஒரு காரணம் என்பது வேறு கதை, இப்பொழுது அதேதான் தமிழகத்திலும் அதிமுகவிற்கு நடக்கிறது.

பீகாரில் ஜனதா தளத்திற்கு நடந்து கொண்டிருக்கிறது.  ஆனால் அதே பிஜேபி மகாராஷ்டிராவின் விதர்பா தனி மாநிலம் கோரிக்கையை காதில் வாங்கிக் கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் அங்கு ஆட்சியிலிருந்தார்கள். இதில் என்ன முரண் என்றால் 1997ல் இதற்கு ஆதரவு தெரிவித்து புவனேஸ்வர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியது பாஜக, பின்பு 2014 ல் ஆட்சியைப் பிடித்த பிறகு அதைப் பரணில் போட்டு விட்டார்கள். இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் பாஜகவின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே தவிர மக்கள் நலமும் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதும் அல்ல.

2011இல் மாயாவதி முதல்வராக இருந்தபொழுது உத்தரப் பிரதேசத்தை பூர்வாஞ்சல், அவாத், பக்ஷ்சிம், பந்தெல்கண்ட் என நான்காக பிரிக்கலாம் பிரித்து வளர்ச்சியும் நல்ல நிர்வாகத்தையும் செய்யலாம் என்று கூறினார். அதை இப்போது செய்திருக்கலாம். ஏனென்றால் ஆட்சியில் இருப்பது இவர்கள் தானே?

ஹரித் பிரதேஷ் என்று உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரிவு கேட்டும் ஒரு கோரிக்கை உள்ளது. போடோலேண்ட் கேட்டு வெகு நாட்களாகப் மக்கள் போராடி வருகிறார்கள்.

அவ்வளவு ஏன் பத்து வருடங்களுக்கு மேலாக மோடி முதல்வராக இருந்த  குஜராத்தில் சௌராஷ்டிரா மக்கள் தங்களுக்கு என தனி மாநிலம் கேட்கிறார்கள்.

இவையெல்லாம் பல காலங்களாக மக்கள் கேட்கும் தனிமாநில கோரிக்கைகள். பெரும்பாலான இடங்களில் பிஜேபி ஆட்சி செய்தும் ஆட்சி செய்து கொண்டும் இருக்கின்றன. அம்மாநிலங்களில் இதையெல்லாம் நிறைவேற்றாமல் தமிழ்நாட்டு மக்கள் யாருமே கேட்காமலேயே ஒரு புது கோரிக்கையை வைத்து அதை பேசுபொருள் ஆக்குவது எதற்கு?

தமிழ்நாட்டில் கடந்த 50 வருடங்களுக்கு மேல் நடந்து வந்த திராவிட ஆட்சி நடுவில் சில காரணங்களுக்காக மடை மாறினாலும் மறுபடியும் ஒரு வலுவான திராவிட ஆட்சி அமைந்தது அவர்கள் கண்ணை உறுத்துகிறது. ஒருபோதும் கொங்குப் பகுதி மக்கள் இப்படி ஒரு கோரிக்கை வைக்கவில்லை.

சில ஆயிரம் ஓட்டுகளைப் மட்டுமே பெற்று கூட்டணிக் கட்சிகளின் தயவால் 2 எம்எல்ஏ சீட்டை ஜெயித்த பாஜகதான் இந்த பிரிவினைவாத பேச்சை ஆரம்பித்து இருக்கிறது.

பார்ப்பனியத்தை உள்ளே விட்டால் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இறுதியில்  சமூக வலைத்தளங்களில் மக்களின் கடும் எதிர்ப்பால் பாஜக தலைமை “இப்படி ஒரு எண்ணம் எங்களுக்கு இல்லை மற்றும் பொறுப்பில் இருப்பவர்கள் யாரும் கட்சியின் குரலாக பதிவிட வேண்டாம்” என்று நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஏனென்றால் திராவிடர்களின் வரலாறு திராவிடக் கட்சிகளின் வரலாறு ஆகியவற்றை பாஜகவின் தேசிய தலைமை நன்கு அறிந்து வைத்துள்ளதாகத் தெரிகிறது. கொங்கு பகுதியில் தான் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் அதிகமாகக் கொழுந்து விட்டு எரிந்தது என்பதை வரலாறு தெரிந்தவர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

வளர்ச்சி என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தமிழ்நாடு நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் பிரிவினைவாதம் பேசி தமிழகத்தையும், தமிழர்களையும் பின்னோக்கி இழுத்துச் செல்ல இவர்கள் போட்டிருக்கும் திட்டமே இந்த பிரிவினைவாதப் பேச்சு! இது போன்ற  பிரிவினைவாதப் பேச்சுக்களை அறவே அனுமதிக்கக் கூடாது! திராவிடர்கள் ஆகிய நாம் அனைவரும் கடுமையாக கண்டிக்க வேண்டும்.

வாழ்க திராவிடம்! வாழ்க தமிழ்!

திராவிடன்

No Comments

Post a Comment

Your email address will not be published.