0

Enter your keyword

எது பார்ப்பனியம்?

எது பார்ப்பனியம்?

எது பார்ப்பனியம்?

இங்கு பார்ப்பனியம் என்று கூறிய உடனே பல பேர் அது ஒரு பிரிவு மக்களான பார்ப்பனர்களை குறிக்கிறது என்று நினைத்துக் கொள்கிறார்கள். அப்படி அல்ல!

இந்த சொல்லாடல் ஒரு பிரிவு மக்களையோ ஒரு குறிப்பிட்ட ஜாதி மக்களை குறிப்பிடும் சொல் அல்ல. இது ஒடுக்குமுறை மனப்பான்மையை கொண்டு அடுத்தவரை ஜாதி,மதம், இனம், மொழியால் ஒடுக்கி, தாழ்த்தி பேசி, அவர்கள் உழைப்பில் குளிர்காய நினைக்கும் எண்ணம் கொண்ட ஒவ்வொரு மனிதனையும் குறிக்கும் சொல். பார்ப்பனியம் என்பது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த உருவாக்கிக்கொண்ட தந்திரம். சமத்துவத்திற்கு எதிரான சூழ்ச்சி. ஒரு கூட்டத்தால் கட்டமைக்கப்பட்ட, ஆரிய மேலாதிக்கத்தை நிலை நிறுத்த உருவாக்கப்பட்டதுதான் பார்ப்பனியம்.

பின் எதற்கு அதற்கு பார்ப்பனியம் என்று பெயர் வைத்தீர்கள்? அவர்கள் மட்டும்தான் இப்படி நடந்து கொண்டார்களா? மற்றவர்கள் நடந்து கொள்ள வில்லையா?

ஏதாவது ஒரு பிரிவினர் பெயரை சேர்த்து வேற சொல் வைத்திருக்கலாமே அல்லது பொதுவாக ஒரு சொல் வைத்திருக்கலாமே என்று உங்கள் மனதில் தோன்றும் கேள்வி எனக்கு புரிகிறது!

ஏன் பார்ப்பனியம் என்று வைத்தார்கள் என்றால் அன்று ஒரு சமூகம் மற்ற சமூகத்தை சனாதான கொள்கைகளையும், மனு சாஸ்திரப்படி நால்வர்ணத்தையும் மேற்கோள்காட்டி மேல் சொன்ன அனைத்து காரணங்களையும் சுட்டிக்காட்டி ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள் என அனைத்தையும் ஒரு சாராருக்கு மட்டுமே வாய்க்கப் பெறச் செய்ததற்கும், இப்பேர்பட்ட மனப்பான்மையை மற்றவர்களிடம் ஏற்படுத்தும் விதமாக ஒரு காலத்தில் நடந்து கொண்டமைக்கும், இப்போது இருக்கும் ஜாதி பிரிவினைகளை தோற்றுவித்து ஊக்குவித்ததற்கும் அன்று அப்பிரிவில் பெரும்பான்மை மக்கள் இதைக் கடைப்பிடித்தால் அதைத் தழுவி பார்ப்பனியம் என்று சொல்லப்பட்டது!

பார்ப்பனியம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட மக்களால் எதிர்க்கப்பட்டு வரும் சித்தாந்தம். சமூக சீர்திருத்தவாதிகளால், சமூக நீதிக்காகப் போராடுகிறவர்களால், பொதுவுடமைக்காரர்களால், பகுத்தறிவுவாதிகளால் தொடர்ந்து எதிர்ப்புகளைச் சந்தித்துவருவது.

சரி, இவர்கள் மட்டும்தான் பார்ப்பனியத்தை எதிர்த்தார்கள் என்றால் இல்லை.

சமயச்சான்றோர்களான திருமூலர், வள்ளலார், நாராயண குரு, அய்யா வைகுண்டர் போன்றவர்களாலும் பார்ப்பனியம் எதிர்க்கப்பட்டு வந்தது.

ஜாதியால் ஒருவரை ஒதுக்குவது பார்ப்பனியமே!

நான் மேல்; மற்றவர்கள் எல்லாம் எனக்கு கீழே! என்று ஏற்படும் மன நிலையும் பார்ப்பனியமே

ஒருவர் இன்னொருவரை ஒடுக்க வேண்டும் என்று நினைத்தால் அதுவும் பார்ப்பனியமே

அவ்வளவு ஏன் நான் ஆண்; எனக்கு கீழே தான் பெண்! என்று நினைத்தால் அதுவும் பார்ப்பனியமே.

யாரையும் சமமாக நடத்த வேண்டும் அப்படி சமமாக நடத்தாமல் ஏதோ ஒரு நிலையில் நான்தான் என்ற ஒரு வித உயர்வு மனப்பான்மை கொண்டால் அதுவே பார்ப்பனியம்!

பார்ப்பனியம் என்பது வர்ண அடுக்கு முறையை ஏற்றுக் கொள்வதாகும்.

பார்ப்பனியம் என்பது வர்ணத்தின் மேல் அடுக்கில் உள்ள பிராமணர்களை அழைத்து சுப, அசுப காரியங்களைச் செய்வதை ஏற்றுக் கொள்வதாகும்.

பார்ப்பனியம் என்பது கோவில் கருவறைக்குள் பிற வர்ணத்தாரை அனுமதிக்க மறுப்பதும், பிறப்பால் பிராமணர்களை அனுமதிப்பதுமாகும்.

பார்ப்பனியம் என்பது தனது மேலாதிக்கத்திற்காக உருவாக்கப்பட்ட சமஸ்கிருதத்தை உயர்த்திப்பிடித்தலும் தான். இந்த நடைமுறையும் கோவில்களில் ஒலிக்கப்படும் மந்திரங்கள் மூலம் நிலைநிறுத்தப்பட்டுக் கொண்டுதானே வருகிறது.

இன்றளவும் தமிழ் மந்திரங்கள் கோவில்களில் பாட மறுக்கப்படுவதும் பார்ப்பனியமே.

இட ஒதுக்கீடு வேண்டாம் என்று கூறும் மனநிலையும் ஒருவித பார்ப்பனியமே

முன்பெல்லாம் ஒரு பிரிவினரால் மட்டுமே வளர்க்கப்பட்ட பார்ப்பனியம் இன்று எல்லா பிரிவுக்காரர்களாலும் வளர்க்கப்படுகிறது. பார்ப்பனியம் வீரியமாக வளர்ந்து நிற்கிறது. தனக்கு மேல் எவர் இருந்தாலும் பரவாயில்லை ஆனால் எனக்கு கீழ் ஒருவர் இருக்க வேண்டும் என்ற மனப்பான்மையை வளர விட்டதின் நீட்சி இது.

பக்தியாலும், சடங்குகளாலும், புராண இதிகாசங்களாலும் இன்றும் பார்ப்பனியம் வேர்விட்டு நிற்கிறது.

எதையெல்லாம் திராவிடம் எதிர்த்ததோ அதுவே பார்ப்பனியம்!

இதை எப்படித்தான் ஒழிப்பது?

கோவில் கருவறைகளுக்குள் அனைவரும் நுழைய வேண்டும்.

உலக மொழியான ஆங்கிலம் நமது வேலைவாய்ப்புக்கு தேவை என்றாலும் நமது தாய்மொழியான தமிழை ஒரு போதும் விட்டுவிடாமல் அதைப் படித்துக் கற்றறிந்து அதை காப்போம்.

எவ்வளவு மெத்தப் படித்தாலும் ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்த ஒரு சிறு பங்கை விவசாயத்துக்கு அர்ப்பணித்து விவசாயம் போற்றுவோம்.

குறிப்பாக புரோகிதர்களை தவிர்த்து சாதி மறுப்பு திருமணங்கள் செய்வோம். ஏனென்றால் அங்கேயே ஜாதி சம்பிரதாயம் என்ற இருபெரும் விலங்கு உடைக்கப்படும்.

சமஸ்கிருதம் மறுப்போம். ஏன் இன்னொரு மொழியை மறுக்க சொல்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்? சமஸ்கிருதமே தேவபாஷை தமிழ் நீசபாஷை என்று இன்றுவரை கோவில்களில் பாட அனுமதிக்காமல் இருக்கும் பார்ப்பனியத்தை எதிர்க்கவே மறுக்க சொல்கிறோம்.

கடவுளின் பெயரால் பின்னப்பட்ட அறிவியலுக்கு ஒப்பில்லாத மூடப் பழக்கங்கள் எதிர்ப்போம்.

அதுவரை இடஒதுக்கீட்டைத் தொடருவோம். தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்று குரல் கொடுப்போம், ஏனென்றால் இன்று பெரும்பாலான அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்பதால் இட ஒதுக்கீடு இல்லாமல் செய்ய பல சதிகள் நடக்கின்றது.

பார்ப்பனியம் என்ற நச்சுப் பாம்பு கடித்த நஞ்சு நம்முள் ஏறிவிடாமல் பாதுகாத்துக் கொள்ள திராவிடம் எனும் மாற்று மருந்தை இளைஞர்கள் மட்டும் மக்களின் மனதில் ஏற்றுவோம்!

பார்ப்பனிய நஞ்சை முறிப்போம்!

தமிழ் வெல்லும்! தமிழ் வாழ்க!


திராவிடன்

No Comments

Post a Comment

Your email address will not be published.