கவுண்டமணி எனும் ஆத்திக பகுத்தறிவாளன்!

எம் ஆர் ராதாவுக்குப் பின் பகுத்தறிவுக் கருத்துக்களை நகைச்சுவையில் கலந்து தமிழ்ப் படங்களில் கூறியவர் கவுண்டமணி அவர்கள். அவர் வசனங்கள் கேட்டாலே சில அடிப்படைவாத, பார்ப்பனிய, ஜாதி வெறி கூட்டங்களுக்கு எரிச்சலாக இருக்கும் என்பதே உண்மையாகும். நடிகவேள் போல வெளிப்படையாகச் சாடாமல் கவுண்டமணி நகைச்சுவை வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போலிருக்கும்.
இன்று சமூக ஊடகங்களில் பெரும்பாலும் வலது சாரி மட்டும் பார்ப்பனிய (ஆதிக்க சிந்தனை உடையவர்கள் அனைவரும்) அனுதாபிகளை பகடி செய்ய இவரின் (counter) வசனங்களைத் தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். இவரைப் போன்ற ஒரு அரிதான கலைஞரை மற்ற மொழி திரைப்படங்களில் காண்பது மிகவும் அரிது.
பெயரிலேயே கவுண்டர் என்று ஜாதி பெயர் இருக்குதே? இவர் பகுத்தறிவு பேசலாமா? அல்லது அவர் பேசியதை தான் நீங்கள் மேற்கோள் காட்டலாமா? என்று வலதுசாரிகள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.
முதல் விடயம் அவர் அந்த சமூகத்தை சேர்ந்தவரும் அல்ல, அது ஜாதியைக் குறிப்பிடும் பெயரும் அல்ல. திரைத்துறைக்கு முன் நாடகங்களில் அவர் நடித்து பெரிதும் புகழப்பட்ட கதாபாத்திரம் கவுண்டர் கதாபாத்திரம். அது மட்டும் இல்லாமல் எல்லாவற்றிற்கும் counter கொடுக்கும் பழக்கம் உள்ளதால் உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம் “சுப்பிரமணி”யான அவரை counterமணி என்று தான் அழைப்பார்கள்.
அவர் நகைச்சுவையில் பகுத்தறிவு, சமூக நீதி , ஜாதி எதிர்ப்பு (குறிப்பாக ஆண்ட ஜாதி பெருமை) போன்ற திராவிட சித்தாந்தம் அதிகமாக இருக்கும். அவ்வளவு ஏன் தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர், அவர் ஆனால் அவர் படங்களில் போலி சாமியார்களை (இன்று இருப்பதில் பெரும்பாலும் போலிகளே) பயங்கரமாகக் கிண்டல் செய்வார், மனிதனாகப் பிறந்தவர்களைத் தெய்வமாகச் சித்தரிப்பது ஏமாற்றுவேலை’, நமக்கும் கடவுளுக்கும் சாமியார்கள் என்ன மத்தியஸ்தரா என நறுக்கு தெறிப்பது போலக் கேட்பார். பெரும்பாலும் மூட நம்பிக்கையை அறவே எதிர்ப்பார். பகுத்தறிவு வேறு, மூட நம்பிக்கை வேறு. இறை பக்தி வேறு என்று புரிந்து கொள்கிறவர்களுக்கு மட்டும் இவரின் அருமை புரியும்.
தமிழ்ச்சினிமாவின் பல மரபுகளை கவிழ்த்துப்போட்டவர். வெளி மரபுகளை மட்டுமல்லாது, திரைத்துறை உள்மரபுகளையும் நொறுக்கியவர்.
மிகவும் பண்புமிக்கவர். அவரை காண அவரது அலுவலகத்திற்கு போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்த பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்!
இன்று ஒரு படம் நடித்தாலே பட்டம் போட்டுக் கொள்ளும் நடிகர்கள் மத்தியில் பல ஆண்டுகள் கோலோச்சிய பிறகும் எந்த பட்டமும் வேண்டாம் என்று மறுக்கும் அளவிற்கு மிகவும் பணிவானவர். நாம என்ன, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை செய்துவிட்டோம், அவருக்கே பட்டம் கிடையாது! நமக்கு எதற்கு என்பார்?’
பல திரை நடிகர்கள் ஏற்க விரும்பாத பல அடித்தட்டுமக்களின் வேடங்களை ஏற்றவர். இந்த வகையில் சிவாஜியை விட அதிக வேடங்களை ஏற்று நடித்தவர் என்ற பெருமை கவுண்டமணிக்கு உண்டு.
அதில் குறிப்பாக சமூக அநீதிகளைச் சாடுவார் எடுத்துக்காட்டிற்கு :
வெட்டியானாக தன் பிள்ளையைப் பள்ளிக்கூடம் அழைத்துச் செல்வார்.
ஆப்போ புரோகிதர் ஒருவர் எங்கடா பையான அழைச்சிட்டு போற என்பார்?
பள்ளிக்கூடத்திற்கு சாமி என்பார் ?
அதற்கு அவர் நீங்க எல்லாம் படிக்க போய்ட்டா யார் வெட்டியான் வேலை பார்ப்பது என்று கேட்பார்?
இவர் அதற்கு நீயும் உன் புள்ளையும் கொஞ்ச நாள் செய்யுங்கள் என்பார்.
என்னதான் இயக்குனர் இந்த காட்சியை வைத்து இருந்தாலும் அதில் நடிப்பதற்கு ஒரு துணிவு வேண்டும் அல்லவா? அதில் கைதேர்ந்தவர் கவுண்டமணி அவர்கள். இப்படிப் போகிற போக்கில் பல வசனங்களை அவர் படங்களில் பேசி இருப்பார்.
“வேட்டியை கிழித்தால் துண்டு. அந்த துண்டையே இரண்டா கிழித்து தலையில் கட்டிகிட்டா பரிவட்டம். ஏண்டா அதுக்கு நாயா பேயா அடிச்சுகிறீங்க? இந்தா ஆளுக்கொரு பரிவட்டத்தை கட்டிக்கொண்டு கிளம்புங்கடா!” என்பார். ஊருக்கு ஊர் நடக்கும் கோவில் முதல் மரியாதை சண்டைகளை இதைவிட நேரடியாகக் கிழித்து தொங்க விடுகிற துணிச்சல் கவுண்டமணியை விட வேறு எவருக்கும் வந்ததில்லை.
உனக்கு ஏன் இப்படி வேர்க்கிறது இன்று சத்யராஜ் கேட்பார்?
அதற்கு கவுண்டமணி:
பூசாரி மணி அடித்தால் பெண்களுக்கு சாமி வருவதில்லையா?
ஏழை விவசாயிகள் ஏர் பூட்டினா பண்ணையாளர்களுக்குத் தொந்தி வருவது இல்லையா?
தொழிலாளிகள் கஷ்டப்பட்டு வேலை செய்தால் முதலாளிகள் பென்ஸ் வாகனத்தில் போவதில்லையா?
யாரோ ஓட்டுப் போட்டால் யாரோ சொத்து சுகம் வாங்குவது இல்லையா?
அது மாதிரிதான் இதுவும்? இன்று அவர் கூற பக்கத்தில் இருப்பவர் என்ன கம்யூனிசமா இன்று வினவுவார். அதற்கு கவுண்டமணி ஆமா கம்யூனிசம் தான்டா, இதுதான் பலபேர் மேடை ஏறி அடுக்கு மொழியில் பேசுகிறார்கள், சிலபேர் ஏரோபிளேன்ல டெல்லிக்குப் போய் ஜனநாயக சோசியலிசம் என்று பேசுகிறார்கள். சினிமா கதாநாயகர்களும் நெஞ்சைத் தட்டி கையை உயர்த்தி பாடுகிறார்கள் ஒரு உண்மை என்றால் இதில் யாருமே ஏழைகள் கிடையாது என்று சர்வ சாதாரணமாகத் தான் வேலை பார்க்கும் திரைத்துறையைச் சாடுவார்.
இப்படி நடித்து விட்டு பொருள் சேர்த்துக்கொண்டு மட்டும் போகாமல், சமூக அநீதிகளை தட்டி கேட்கவேண்டும் என்று எத்தனை நடிகர்களுக்கு தோணும்? கருத்து கூறுகிறேன் என்று பகுத்தறிவு என்னும் பெயரில் இடைநிலைச்சாதிப் பார்ப்பனீயத்தைக் கடைப்பிடிக்கும் இன்றைய நடிகர்கள் மத்தியில் என்றும் கவுண்டமணி அவர்கள் ஒரு ஆத்திக பகுத்தறிவாளன் தான்.
திராவிடம் பேசுபவர்களை உலகிற்கு எடுத்துக் காட்டுவோம்!
தமிழ் வாழ்க! தமிழ் வெல்லும்!
—
திராவிடன்
No Comments