வேண்டாமே மதம்!

இன்று மதம் என்ற ஒன்றுதான் உலகத்தில் பல பிரச்சினைக்குக் காரணமாக இருக்கிறது. மத்திய கிழக்கிலும் சரி, ஆப்பிரிக்காவிலும் சரி, சீனாவிலும் சரி, ஐரோப்பியாவில் சரி, தென் கிழக்கிலும் சரி சமீபமாக நியூசிலாந்து ஆஸ்திரேலியாவிலும் மதவெறியும் இனவெறியும் தலைவிரித்தாடுகிறது. அந்த இன வெறிக்கு அடிகோலியது மதவெறி .
மனிதன் நிம்மதியாக வாழவே மதங்களை உருவாக்கினார்கள். ஆனால் இப்பொழுது அப்படியா இருக்கிறது?
எந்த மதமும் ஏற்றுக் கொள்ளத் தக்கவையல்ல. மதம் என்பது அது தோன்றிய காலச் சூழ்நிலைக்கு ஏற்ப கருத்து கூறுபவையாக அமைந்திருந்தன. அவை கூறும் கருத்துக்கள் எக்காலத்துக்கும் பொருந்தக் கூடியவை அல்ல. நூறு வருடம் முன் மதங்கள் கூறியது இப்பொழுது அறிவியல் வளர்ந்த காலகட்டத்தில் பொருந்தாது.
மனிதனுடைய சிந்தனைகளும் நாளுக்கு நாள் மாறிக் கொண்டே வருகின்றன. உலக அமைப்பும், தொடர்புகளும் காலத்திற்குக் காலம் மாறிவருகிறது.அதுவும் விஞ்ஞானம் வளர்ந்த இந்த நூற்றாண்டில் மிக வேகமாக மாறி வருகிறது. மனிதனின் வாழ்க்கை முறையும், வசதி வாய்ப்பும் காலத்திற்குக் காலம் மாறிக் கொண்டே இருக்கிறது.
மாற்றத்தில் ஏற்றங்கண்டு கொண்டிருக்கும் மனித இனம் என்றோ தோன்றிய ஒரு மதத்தின் கோட்பாடுகளை என்றென்றைக்கும் பின்பற்றி நடக்க வேண்டும் என்பது சரியான முடிவாகுமா? இல்லை. நடைமுறைக்குத் தான் ஒப்பாகுமா?
உலகத்தில் ஏற்படும் மாற்றங்களும் அதை ஒட்டி ஏற்படும் விஞ்ஞான வளர்ச்சிகளுக்கும் ஏற்றவாறு ஒருவன் தன் வாழ்வை மாற்றிக்கொண்டு சிறப்பாக வாழ வேண்டும். அப்படி செய்து கொண்டு வாழ்வதே சிறப்பான முடிவாகும். அதை விடுத்து மதம் சொல்லுகின்றது என்று இக்காலத்திலும் அறிவுக்கு ஒவ்வாதவற்றை செய்வது சரியா? சமீபத்தில் படித்த இரு ஆசிரியர் தம்பதியினர் தன் மகள்களை மூடநம்பிக்கையால் கொலை செய்து இன்று தங்கள் வாழ்க்கையும் நரகமாக்கிக் கொண்டுள்ளனர்! ஏன்? மதம் சொல்லும் மூடநம்பிக்கைகளை நம்பியதால்.
ஒரு பிரிவினர் கடல் தாண்டி செல்லக்கூடாது என்று இந்து மதம் சொல்கிறது. ஆனால் அப்பிரிவினர்தான் அதிகம் கடல் கடந்து செல்கின்றனர் என்பது தான் நிதர்சனமான உண்மை. நால்வர்ணப்படி சூத்திரன் (மனு சாஸ்திரப்படி ) படிக்ககூடாது என்று மதம் கூறுகிறது. மதம் சொல்கிறபடி அவர்களெல்லாம் படிக்காமல் இருக்க முடியுமா? இல்லை அதைத் தடுக்கத்தான் முடியுமா?
பெண்கள் முக்காடு போட்டுக் கொள்ள வேண்டும், முகத்தை மறைக்க வேண்டும் என்று இஸ்லாம் மதம் சொல்கிறது. இதற்கு ஆயிரம் காரணங்கள் அவர்கள் கூறினாலும் ஆண்களைப் போலவே பெண்களும் பல துறைகளிலும் பணியாற்றுகின்ற இக்காலத்திற்கு இக்கருத்து பொருந்துமா? முகத்தைப் பார்த்து பேசாமல் மூடிமறைத்து வேலைதான் செய்ய முடியுமா?
இவ்வுலகத்தில் உள்ள அத்தனை பேர்களும் பாவிகள் என்கிறது கிறிஸ்துவ மதம், அதை மற்றவர்கள் ஒத்துக் கொள்ள முடியுமா? இன்னும் பல அறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களைச் சொல்கின்றது பைபிளின் பழைய ஏற்பாடு (ஓல்டு டஸ்டமெண்ட்) அதனால்தான் அதை விட்டுவிட்டு இப்பொழுது புதிய ஏற்பாடு (நியூ டஸ்டமெண்ட்) எனவே, மதம் எதுவும் நமக்கு வேண்டாம்.
இந்து, கிறித்துவ, இஸ்லாம் பற்றி பேசினீர்கள் மற்றதை விட்டு விட்டீர்களே என்றால் நம் நாட்டில் பெரும்பான்மையாக பின்பற்றப்படும் மதம் இவைகளே! உலகப் பொதுமறையான திருக்குறளில் சில கருத்துக்கள் மாறுபடுவதால் அதையே விவாதித்து மாற்ற வேண்டும் என்று சில கருத்துக்கள் இருக்கின்றது என்கின்றபோது நாம் ஏன் மதங்களை தேடி அலைய வேண்டும்?
உலகையும், உலக மக்களையும் ஆராய்ந்து, காலத்துடன் ஒன்றி சிந்திப்பதை விட்டுவிட்டு மதங்கள் கூறும் சிந்தனைகளை இரவல் வாங்கவா அலைவது? வெளியே போ பலர் கூறுவதைக் கேள், பலவற்றையும் பார், நமக்கு உரியதை நாமே தேர்ந்தெடுத்து நடந்தால் அது நம்மையும் நமது சுற்றத்தாரையும் உயர்த்தும். எவன் ஒருவன் கருத்தையும் அப்படியேஏற்றுக் கொள்ளாதே! ஏதுவாக இருந்தாலும் பகுத்தறிந்து சுயமாக சிந்தித்து . எப்படி வாழ வேண்டும் என்பது ஒருவனின் சூழ்நிலையைப் பொருத்து அமையுமே தவிர அவனது பிறப்பை பொறுத்தோ மதத்தைப் பொறுத்தோ ஜாதியைப் பொறுத்தோ அமையாது.
வேறு ஒருவன் ஏதோ ஒரு நூற்றாண்டில் எழுதி வைத்ததை வைத்து நமது வாழ்வைத் தீர்மானிக்க முடியாது. நமது வாழ்வை நடத்த உகந்த வழிகளை நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். சில,பொதுவான கருத்துக்களை வேண்டுமானால் சிலர் கூற முடியும்.
ஆனால் அக்கருத்துக்களையும் கூர்ந்து கவனித்து சிந்தித்து ஆராய்ந்து பகுத்தறிந்து தற்கால வாழ்விற்கு ஒப்பிட்டுப் பார்த்து ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆகவே நண்பர்களே! வேண்டாமே மதம் நமக்கு! யாதும் ஊரே; யாவரும் கேளிர்! என்று கூறிய தமிழினம் பல்வேறு மதத்தினராகப் பிரிந்து வாழாமல் எல்லோரையும் அரவணைத்து ஒரே இனமாக வாழ்வோம்.
தமிழ் வாழ்க! தமிழ் வெல்லும்!
—
திராவிடன்
No Comments