0

Enter your keyword

எப்படி நடந்தது தமிழர் திருமணம்?

எப்படி நடந்தது தமிழர் திருமணம்?

எப்படி நடந்தது தமிழர் திருமணம்?

திருமணம் என்பது தமிழர்கள் வாழ்வில் மிக முக்கியமான அங்கமாக இருக்கிறது. பல காலங்களில் மருவி மருவி ஆரியத்தின் பிடியில் சிக்கி இன்று நமக்கு ஒப்பாத நமது முன்னோர்கள் செய்யாத பல சடங்குகளையும் செய்து வருகிறார்கள். ஆனால் பண்டைய காலத்தில் தமிழர்கள் திருமணம் அப்படி நடைபெறவில்லை, குறிப்பாக வேள்வி வளர்த்து ஒரு புரோகிதர் மந்திரம் சொல்லவே இல்லை. அது எப்படி நீங்கள் இவ்வளவு தீர்க்கமாக கூறுகிறீர்கள் என்று கேட்கலாம் நமது சங்க இலக்கிய பாடல்களில் திருமண முறையை விவரமாக விவரித்துள்ளனர். என்ன நாம் அதை தேடி படிப்பதில்லை யாரோ ஒருவர் கூறுவதை கேட்டுகொண்டு இதுதான் நமது சடங்கு இதுதான் நமது சம்பிரதாயம் என்று நாமே முடிவு செய்துகொண்டு அதை காலம் காலமாக வழிவழியாக பின்பற்றி வருகிறோம்.

பின் எப்படி நடந்தது தமிழர் திருமணம்?

முதலில் அதை விளக்கும் நல்லாவூர் கிழார் எழுதிய புறநானூற்றுப் பாடலைப் பார்த்து விடுவோம்.சங்க இலக்கியத்தில் தமிழர்களின் திருமணங்கள் எப்படி பல ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்தது என்பதற்கு சான்றாக இரண்டு முக்கிய பாடல்கள்  அகநானூறு 86 வது பாடல் மற்றும் 136 வது பாடல். ஒரு கூகுள் செய்தாலே நமக்கு தெரிந்துவிடும். ஒரு சினிமா நடிகர் அசைவம் சாப்பிட்டு விட்டால் அவரின் ஜாதியை தேடும் இவர்கள் தங்களின் தமிழரின் பெருமைகள் தேடி படிப்பதில்லை.

பாடல் -86
உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை
பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால்
தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி
மனை விளக்குறுத்து, மாலை தொடரி,
கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;

கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,
உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்,
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர,
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி,
‘கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!’ என,
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,
வதுவை நல் மணம் கழிந்த பின்றை,
கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து,
‘பேர் இற்கிழத்தி ஆக’ எனத் தமர் தர,
ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல்,

திருமணம் நடத்தப்பெறும் இல்லத்தின் முன்பே தென்னங்கீற்றாலான பந்தல் போடப்படும். மணப்பந்தலைச் சுற்றிலும் பல்வேறு வகையான மலர் மாலைகள், மணி மாலைகளையும் ஆங்காங்கே தொங்க விடுவார்கள்.
பருப்பைச் சேர்த்து சமைக்கப்பட்ட பொங்கலை விருந்தினர்கள்உண்ண அளிப்பார்கள்.

மணமேடையில் நடுவே புதுமணல் பரப்பப்பட்ட  இடத்தில் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும்.
அதிகாலையில் இல்வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள பெண்கள் சிலர் ஆற்றுக்குச் சென்று ஆற்றுநீரை குடங்களில் நிரப்பிக் கொண்டு வந்து மணப்பந்தலின் முன்னே வைப்பர். அக்குடத்தில் உள்ள நீரை நான்கு பெண்கள் எடுத்து மணப்பெண்ணிற்கு நீராட்டுவர்.

“கற்பொழுக்கத்தில் கொஞ்சமும் பிறழாமல், பதினாறு பேறுகளையும் பெற்று உன் கணவன் மகிழும்படி நாளும் நடப்பாயாக!”

என்று அனைவரும் வாழ்த்துவர். அதன்பின் அவளுக்கு புத்தாடை அணிவித்து மணற்பரப்பில் அமர்த்துவர்.  பின் அனைவரும் வாழ்த்துக்கூறி மணமகனிடம் அவளை ஒப்படைப்பர்.
ஆனால் தமிழர்கள் ஏற்படுத்திய திருமண முறையில் எவ்வித சடங்கும் கிடையாது. புரோகிதர் இல்லை,தாலி இல்லை. ஆனால் நாள் பார்த்து சுற்றத்தார் சூழ திருமணம் நடந்ததாகக் கூறப்பட்டிருக்கின்றது.
எரிவளர்த்தல், பொருள் புரியாத வட மொழி மந்திரங்கள் இல்லை,  அம்மி மிதித்தல் இல்லை, அருந்ததி காட்டல் இல்லை, கோத்திரம் கூறல் முதலியன இல்லை என்பதை உணர்ந்து தமிழர் திருமணம் எந்த மூடப் பழக்கத்திற்கும் ஆட்பட்டு இருக்கவில்லை என்பதே உண்மை.

ஆரியர்களின் வருகைக்குப் பின்னரே எதெல்லாம் இல்லையோ அதெல்லாம் புகுத்தப்பட்டது. புகுத்தப்பட்ட சடங்குகளுக்கு பொருளாக பெற்றுக்கொண்டார்கள் ஆரியர்கள். அவர்கள் பொருளீட்ட திருமண முறைகளை மாற்றி பல சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் உள்ளே புகுத்தி நமது தமிழர் பண்பாடு சீர்ழித்தனர் என்பதே உண்மை .

அதுவரை பெண் எடுக்கும் பொழுது பொருள் கொடுத்து பெண்ணை அழைத்து வரும் முறையை வைத்திருந்த தமிழர்களிடம் பெண் தான் பொருள் தர வேண்டும் என்ற முறையை மாற்றி அமைத்தது ஆரிய வருகைக்குப் பின்னரே. ஆரியம் இதுமட்டுமில்லாமல் தெய்வ வழிபாடு மற்றும் தமிழரின் அனைத்து பண்பாட்டு நிகழ்வுகளையும் ஊடுருவி மாற்றி அமைத்து வைத்திருக்கிறது.

இதற்கு தான் பெரியார் சொன்னார் சுயமரியாதை திருமணம் செய்யுங்கள் என்று. ஏன் செய்ய வேண்டும் சுயமரியாதைத் திருமணம் என்பதை இன்னொரு பதிவில் பார்ப்போம்.

திராவிடத்தால் இணைவோம்! திராவிடம் அறிவோம்!

தமிழ் வாழ்க! தமிழ் வெல்லும்!

திராவிடன்

No Comments

Post a Comment

Your email address will not be published.