ஆரியம் எனும் மெதுவாக செயல்படும் நஞ்சு

ஆரியத்தின் படையெடுப்பினால் திராவிட மக்களின் பண்பாடு, விழாக்கள் என்று பல விடயங்கள் இன்று ஆரிய மயமாகிப் போய் இருப்பதை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். ஏற்கனவே வடமொழிச் சொற்களின் கலப்பு ஆரியத்தின் பண்பாட்டு படையெடுப்பினால் எப்படி தமிழைப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது என்பதைக் கடந்த கட்டுரையில் கண்டோம். இதேபோல் ஆரியம் நமக்கே தெரியாமல் எவ்வாறு திராவிட மக்களின் அனைத்து விடயங்களிலும் இரண்டறக் கலந்து விட்டது என்று பார்ப்போம்.
வடக்கே இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதங்களையும், கடவுள்களையும் நமது மனதில் பதியவைக்கவும், காலம்காலமாக அவைகளைக் கொண்டாட வைக்கவும், பண்டிகைகள் (திருவிழா என்னும் நம் தமிழ்ச் சொல்லை நாம் மறந்து பண்டிகை என்று சொல்லும் அளவிற்கு அதை நம் மனதில் பதிய வைத்துள்ளது ஆரியம்) உருவாக்கப்பட்டு நமது மனதில் விதைக்கப்படுகிறது.
ஆரியம் வடமொழிச் சொற்கள் நமது மொழியில் மட்டும் கலக்கவில்லை நமது ஊர்களின் பெயர்கள், கடவுளின் பெயர்கள், விழாக்களின் பெயர்களில், புத்தாண்டில், நமது குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்கள் என்று எல்லாவற்றிலும் ஒரு புற்று நோயைப் போல மெல்ல மெல்லக் கலந்து நமது மொழியையும் நமது தனித்தன்மையையும் ஆரியம் அழித்துக் கொண்டிருக்கிறது.
நாம் ‘விழா’ என்று கொண்டாடத் தகுதி உடையது அறுவடைத் திருவிழாவான ‘பொங்கல் விழா’ மட்டுமே! மற்றவையெல்லாம் வடக்கே இருந்து இறக்குமதிச் செய்யப்பட்டவை தான். தீபாவளி, ஸ்ரீராம நவமி, விநாயகர் சதுர்த்தி, ஸ்கந்தர் சஷ்டி, கோகுல அஷ்டமி, மகாமகம். இவை போதாது என்று, புதிதாகப் புஷ்கரணி, ஹனுமான் ஜெயந்தி என மேலும் பட்டியல் நீளும். புத்தாண்டையும் சித்திரை 1 என்று ஆரியம் மாற்றி வைத்து, வாயில் நுழையாத வார்த்தைகளில் 60 ஆண்டுகளுக்குப் பெயரை வைத்து அதற்கு ஒரு கேவலமான கதையையும் சோடித்து அதைக் கொண்டாடவும் வைத்து இருக்கிறது ஆரியம்.
இன்று பலர் தமது வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் வைப்பது கிடையாது. வடமொழி சமஸ்கிருதத்தில் எளிதில் வாயில் நுழையாத பெயர்களை வைக்க ஆர்வம் காட்டுகின்றனர். புதுமை என்ற போதையில் பல பெற்றோர் இதற்குச் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றனர்.
ஆரியம் நமக்குக் கொடுத்திருக்கும் விழாக்கள் அனைத்தும் மதங்களையும் புராணங்களையும் அடிப்படையாகக் கொண்டவை. எதுவும் சமத்துவத்தை முன்னிறுத்துவது இல்லை. உதவும் மனப்பான்மையை முன் நிறுத்த வில்லை. யாரேனும் ஒருவரின் மரணத்தைக் கொண்டாட வைக்கிறது. இதுதான் நமது பண்பாடா? தமிழர் என்றுமே ஒருவர் மரணத்தைக் கொண்டாடியது இல்லை. ஆனால் தீபாவளி என்ற பெயரில் (தீப ஒளி என்று கூட நாம் அழைப்பதில்லை இதில் பல இளைஞர்கள் ‘Diwali’ என்று வடமொழியிலேயே வாழ்த்துக்கள் கூட அனுப்புகின்றனர்)
விழாக்கள் மட்டுமில்லாமல் ஜோசியம், வாஸ்து சாஸ்திரம், மகாமகம் என்று நூறு ஆண்டுகளுக்கு முன் நாம் எதுவுமே கொண்டாடாத, பின்பற்றாத பல பழக்கங்கள் எல்லாம் இன்று புதிதாகப் புகுத்தப்பட்டு இருக்கிறது.
இன்று எனக்குத் தெரிந்த பல ஊர்களின் பெயர்கள் சமஸ்கிருதத்தில் தான் உள்ளது. அவைகளின் மிக அழகான தமிழ்ப் பெயர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு ஆரியத்தால் மாற்றப்பட்டுள்ளது. உதாரணமாக
மயிலாடுதுறை – மாயவரம்
குடமூக்கு _ கும்பகோணம்
மறைக்காடு _ வேதாரண்யம்
முதுகுன்றம் _ விருத்தாசலம்
முகவை – ராமநாதபுரம்
புன்னைக்காயல் – ராமேஸ்வரம்
விற்குடி- தனுஷ்கோடி
முதற்கொம்பு – அக்ரமேசி
இப்படி எண்ணற்ற ஊர்கள், கிராமங்கள் ராமா புரம், நரசிங்க புரம், நாராயணக்குப்பம் என வடநாட்டு இறக்குமதி கடவுள்களின் பெயர்கள் சாமர்த்தியமாகப் புகுத்தப்பட்டு இன்று தமிழ்ப் பெயர்களாகத் தோன்றும் அளவிற்கு நம்மை மடைமாற்றி வைத்து இருக்கிறார்கள்.
இத்தனை ஆண்டுகள் இந்த சதியில் விழுந்து நாம் பலவற்றிற்கும் பழக்கப்பட்டு விட்டோம் ஆனால் இனியும் விழித்துக்கொண்டு செயல்படாவிட்டால் நமது பெயர் முதல் நாம் கொண்டாடும் விழாக்கள் வரை அனைத்தையும் வெறும் வரலாற்றில் மட்டுமே படிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
உடனடியாக விழித்துக் கொள்ளாவிட்டால் இன்னும் அரை நூற்றாண்டில் நாம் வரலாறாக மட்டுமே இருப்போம். நமது அடையாளங்களை தொலைத்துவிட்டு நிர்க்கதியாய் நின்று இருப்போம். எனவே அரிய சூழ்ச்சிகளை உணர்ந்து உடனே விழித்துக்கொள் திராவிடனே.
தமிழ் வாழ்க! தமிழ் வெல்லும்!
—
திராவிடன்
No Comments