0

Enter your keyword

பெரியாரும் தமிழும் !!!

பெரியாரும் தமிழும் !!!

பெரியாரும் தமிழும் !!!

பகுத்தறிவு பகலவனின் மொழி சீர்திருத்தம்

தமிழ் மொழியை எப்படி பார்த்தார் பெரியார்? தமிழ் மொழியையும் அவர் அறிவியல் கண்ணோட்டத்துடன்தான் பார்த்தார்.

தமிழ் ஒரு பழமையான மொழி என்பதற்காகவோ சிறந்த இலக்கண செழுமை நிறைந்தது என்பதற்காகவோ  அவர் அதைப் பாராட்டவில்லை, அதில் உள்ள பாட்டு இலக்கியங்கள், கதை இலக்கியங்கள் மற்றும் அதிலுள்ள சில கருத்துகளையும் கூறுகளையும் மக்கள் மன நலன் மற்றும் அறிவு நலன் பயன்தரும் வகையில் இருப்பதை ஆராய்ந்து அறிந்ததால் பாராட்டினார்.

அதற்காக அவற்றில் உள்ள மூட நம்பிக்கையையும் மக்களுக்கு உதவாத பழமை கருத்துக்களையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் அம்மொழியைப் பொதுமக்கள் எளிமையாகப் பயன்படுத்த முடியாமல் இலக்கண நடையில் இருப்பதை எண்ணி வருந்தினார்.

மேலும்

“தமிழ்மொழியே தான் திராவிட மொழிகளாக விளங்குகின்றது என்பதும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் தனித்தனி மொழிகளாக அல்லாமல், தமிழிலிருந்து பிரிந்த மூன்று மொழிகளாகவும் அல்லாமல், தமிழ்தான் நான்கு இடங்களிலும் நான்கு வகையாகப் பேசப்பட்டு வருகிறது”

என்ற கருத்தும் கொண்டிருந்தார்.

ஆனால் பெரியாரின் தாய்மொழி கன்னடம்.   அவருக்குத் தமிழைப் பற்றி என்ன தெரியும் கூற என்று சில அறிவுஜீவிகள் கேட்கலாம். அவர் கூறிய கருத்துக்கள் எல்லாம் தமிழைப் பற்றி ஏதும் தெரியாமல் கூறியதில்லை.

தமிழ் மொழியில் மிகப் பழமையான இலக்கண நூலாகிய தொல்காப்பியம் முதல் திருக்குறள், கம்பராமாயணம், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், கந்தபுராணம், புறநானூறு, நாலடியார், வில்லிபாரதம் முதல் அறநெறி நூல்கள் கதை இலக்கியங்கள் வரை அவர் கற்றுத் தேர்ந்து இருந்தார்.

இதற்குச் சான்று கம்பராமாயணத்தை வடமொழி வால்மீகி ராமாயணம், பௌத்த ராமாயணம், துளசி ராமாயணம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து பல கட்டுரைகளை எழுதி இருக்கிறார். அவரை குறை சொல்லும் சில தமிழ்தேசிய குழு மக்கள் இதையெல்லாம் படித்துக் கற்றறிந்த அறிஞர் ஆன பின்னர் பேசலாம் என்பது என் கருத்து .

தமக்குள்ள தமிழ்ப் பற்றைப் பற்றி அவரே 1939 ஆம் ஆண்டில் கோவை மாணவர் மன்றத்தில் பேசிய சொற்பொழிவில் கீழ்வருமாறு விளக்கியிருக்கிறார்.

“தாய்மொழி என்பதற்காகவோ, நாட்டு மொழி என்பதற்காகவோ எனக்குத் தமிழ்மொழியிடம் எவ்வகைப் பற்றும் இல்லை. அல்லது தனிமொழி என்பதற்காகவோ, மிகப் பழைய மொழி என்பதற்காகவோ எனக்கு அதில் பற்றில்லை. பொருளுக்காக என்று எனக்கு எந்த ஒன்றின்மீதும் பற்றுக் கிடையாது. அது மூடப்பற்றாகும். குணத்தினாலும், அக்குணத்தினால் ஏற்படும் நற்பயனுக்காக மட்டுமே நான் எதனிடத்திலும் பற்று வைக்கிறேன்.

என் தமிழ்ப்பற்றும் அதுபோல்தான். தமிழிடத்தில் நான் அன்பு வைத்திருக்கின்றேன் என்றால், அதன்மூலம், நான் எதிர்பார்க்கும் தன்மையும், அது மறைய நேர்ந்தால் அதனால் இழப்பிற்படும் அளவையும் எண்ணி மதிப்பிட்டே நான் தமிழ்மொழியிடம் அன்பு செலுத்துகின்றேன்”.

தந்தை பெரியாருடைய இந்தக் கருத்து எவ்வளவு ஆழமானது, அறிவுப் பூர்வமானது என்று தமிழர் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பெரியார் நினைத்த கருத்தைப் பேசுவதற்கென்று அவர் கையாண்ட சொற்கள் படிக்காத மக்களுக்கும் நன்கு புரியக் கூடியவை. அவர் தமிழ்மொழியை மிகமிக எளிமையாகவும் இனிமையாகவும் பொதுமக்களிடம் கையாண்டார்.   அவர் தமிழ் மொழியை மிக இயல்பான முறையில், இன்னும் சொன்னால் கொச்சையாகக் கூட கையாள்வார். ஆனால் அதில் இனிமை இருக்கும். சுவையிருக்கும். கேட்போரை ஈர்க்கக் கூடிய கவர்ச்சியிருக்கும்.

தமிழ்மொழிக்கு ஊறுநேரும்படி பிற மொழிகளைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்ற நிலை வந்த போது, வேறு மொழியைக் கல்வி மொழியாக்குவதால், தமிழ்மொழியின் வளர்ச்சி குன்றும், தமிழ் மக்களின் முன்னேற்றமும் தடைப்படும் என்று அதனை துணிவுடன் எதிர்த்தவரும் பெரியார்தான்.

நமது தாய்த்தமிழ் மொழி இந்நாட்டு மக்களுக்கு எல்லா துறைகளிலும் முன்னேற்றம் அளிக்கக் கூடியதும், உரிமை அளிக்கக் கூடியதும்,  மானத்துடனும் பகுத்தறிவுடன் வாழத்தக்க வாழ்க்கை அளிக்கக் கூடியது.

“ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றேயாகும். மொழிப்பற்று இல்லாதவரிடம் நாட்டுப்பற்றும் இருக்காதென்பது உறுதி. நாடு என்பது மொழியை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது. தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு, தமிழர்களுக்குத் தமிழ்ப்பற்று கட்டாயம் தேவை  என்று சொல்கிறேன். தாய்மொழியில் பற்றுச் செலுத்தாதிருக்கும்வரை தமிழர்கள் முன்னேற்றமடைய மாட்டார்கள்”

இன்று திருக்குறள் பொதுமக்களிடமும் அறிஞர்களிடமும் பிரபலமாக வழங்கப்படுவதற்கும்  பெருமையுறுவதிற்கும் ஒருவகையில் பெரியார்தான் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. திருக்குறளுக்காக மாநாடுகளை நடத்திய முதல் பேரறிஞர் அவர். தமிழ் விழாவான பொங்கல் விழாவைப் பொதுமக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடும்படி செய்தவரும் பெரியார்தாம்.

இன்று அரசு கொண்டுவந்துள்ள தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திற்கு முதன்முதல் வழிவகுத்துக் கொடுத்தவரும் அதை நடைமுறைப் படுத்தியவரும், தந்தை பெரியார்தாம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

தமிழினத்திற்காக மட்டுமல்லாமல் தமிழ்மொழிக்கும் தொண்டு செய்த பேரறிஞர் பெரியார். உலகிற்கே பயன்படுகின்ற வகையில் அரிய கருத்துக்களை வெளிப்படுத்தியவரும், மக்கள் தொண்டாற்றியவருமாகிய பெரியார், தமிழ் மொழியில்தான் பேசினார். தமிழ்நாட்டில் தான் பிறந்து வாழ்ந்தார் என்பது நமக்கெல்லாம் பெருமை! வாழ்க பெரியார்!

தமிழ் வாழ்க! தமிழ் வெல்லும்!

திராவிடன்

No Comments

Post a Comment

Your email address will not be published.