0

Enter your keyword

பதில் உண்டா தமிழ்தேசியவாதிகளே?

பதில் உண்டா தமிழ்தேசியவாதிகளே?

பதில் உண்டா தமிழ்தேசியவாதிகளே?

திராவிடத்தை எதிர்க்கும் தமிழ்தேசியவாதிகளே! எங்கள் கேள்விகளுக்கு உங்களிடம் பதில்கள் உண்டா?

பல கருத்துகளையும், கட்டுரைகளையும், புத்தகங்களையும் நாம் படிக்கும் பொழுதும், பல காணொளிகளை காணும்பொழுதும் இயல்பாக மனதில் சில கேள்விகள் எழும். அவ்வாறு  மனதில் எழும்  கேள்விகளை ஒரு சிறு தொகுப்பாக கீழே தொகுத்துள்ளேன். அதற்கு நம் திராவிட எதிர்ப்பு தமிழ்தேசிய நண்பர்கள் பதிலளிப்பர் என்று நம்புகிறோம்.

கேள்விகளை பார்ப்போமா?

1. பெரியார் தனித்தமிழ்நாடு கோரிய போதும் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவுடன் மாணவர்கள் இந்தி திணிப்பை எதிர்த்து நடத்திய போராட்டங்களில் தமிழ்தேசியர்களின் பங்கு என்ன?

2. 1956 -இல் பட்டினிப் போர் நடத்தி உயிர் நீத்த சங்கரலிங்கனாருக்கு முன்னரே அந்தக் கோரிக்கையை முன் வைத்தவர் தந்தை பெரியார் என்பதைத் தெரிந்தும் அதைச் சொல்ல மறுப்பதேன் ?

3. அறிஞர் தேவநேயப் பாவணருக்கு 1957ல் சேலம் தமிழ்ப் பேரவையினரால் ‘திராவிட மொழி நூல் ஞாயிறு’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. அதை மறைத்து பாவணரை ‘மொழிஞாயிறு ‘என்று மட்டுமே உங்கள் தமிழ்தேசியவாதிகள் குறிப்பிடும் மர்மம் என்ன? பதில் உண்டா?

4. ஆங்கிலத்தை இணை ஆட்சி மொழியாக வைத்த காரணத்தினால் தான் தமிழுக்கு உரிய இடம் பெற்றுத் தரவில்லை திராவிட கட்சியான திமுக என்று குறை சொல்லும் தமிழ்தேசியர்கள் திமுக தலைவர் அண்ணாதுரை 1962-66 ல் பேசிய உரையின் பதிவேட்டில் அப்படி ஏதும் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு கூறிய குற்றச்சாட்டை திரும்ப பெறுவீரா?

5. ‘தமிழ்நாடு தமிழருக்கே என்று 1938ஆம் ஆண்டு முன்வைத்த தந்தை பெரியார் அவர்களை தமிழ்தேசிய தந்தை என்று தோழர் மணியரசன் அழைத்தது ஏன்? இன்று அவர் தமிழ்தேசியத்தை தூக்கிப் பிடிப்பதால் இக்கேள்விக்குப் பதில் அளிக்கும் பொறுப்புக்கு நீங்கள் ஆளாகிறீர்கள்.

6. ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடம் என அறிவித்த தமிழக அரசை எதிர்த்து கன்னியாகுமரி மலையாளிகள் சங்கம் நீதிமன்றம் சென்றது; அன்று தமிழ்தேசிய அமைப்பு எதுவும் ஆதரவு தரவில்லை. ஏன் என்று சொல்வீர்களா?

7. திராவிடக் கட்சிகள் ஆங்கிலத்தை ஆதரித்தது என்று கூறும் தமிழ்தேசியவாதிகள் மறைமலையடிகளார் இறுதிவரை தன் நாட்குறிப்பில் ஆங்கிலத்தில் தான் எழுதினார் என்பதையும் அவர் நூல்கள் அனைத்திற்கும் ஆங்கிலத்தில்தான் முன்னுரையை எழுதினார் என்பதையும் வசதியாக மறந்து கேள்வி எழுப்பாதது ஏனோ? ஒருவேளை தமிழ்தேசியவாதிகள் என்றால் விலக்கு உண்டோ? இருந்தால் அதையும் கூறிவிடுங்கள் பதிலாக.

8. மொழி சார்ந்த உணர்வுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்துவிட்டுச் சாதி ஒழிப்பு, மத ஆதிக்க எதிர்ப்பு, பெண் விடுதலை, சமூக நீதி, இட ஒதுக்கீடு, இந்தி சமஸ்கிருத திணிப்பு, மூடநம்பிக்கைகள் போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் தராமல் இருப்பது ஏன்?

9. இன்று தமிழ்தேசியர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ம.பொ.சி சமஸ்கிருதத்தை ஆதரித்து வந்தார் என்பதை அறிவீர்களா? அப்பொழுது ஆங்கிலத்தை ஆதரித்த திராவிடத்தை எதிர்ப்போர் சமஸ்கிருதத்தை ஆதரிக்கும் ம.பொ.சி யை தூக்கிப் பிடிக்கலாமா?
பின் குறிப்பு : அதற்குச் சான்று அவர் எழுதிய “தமிழும் சமஸ்கிருதமும்” என்ற நூலிலேயே உள்ளது

10. தமிழர்களுக்காக திராவிட இயக்கம் மார்வரி எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த போது அதை தமிழ்தேசிய ம.பொ.சி கடுமையாக எதிர்த்தார். அப்பொழுது அவர் யாருக்கு ஆதரவானவர் என்று தெரிந்தும் நீங்கள் அவரை கொண்டாடுகிறீர்களா?

11. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் இந்தி எழுத்துக்களை தார் கொண்டு அழித்ததை மண்ணெண்ணெய் கொண்டு தாரை அழித்தவர் ம.பொ.சி. அப்பேர்ப்பட்ட அவருக்கு மலர் வணக்கம், நினைவு நாள் எல்லாம் நடத்தும் தமிழ்தேசியர்களின்  கொள்கை, கோட்பாடு தான் என்ன?

12. குலக்கல்வி திட்டத்தை ஆதரித்த, சுயமரியாதை திருமணத்தையும் எதிர்த்த ம.பொ.சி. யை நீங்கள் கொண்டாடுவது ஏன்?

13. திராவிடக் கட்சிகளான திமுகவிடமும், அதிமுகவிடமும் பல பதவிகளை வாங்கி அனுபவித்த ம.பொ.சி யை தலையில் வைத்துக் கொண்டாடுவது ஏன்? நீங்கள் கூறும் குற்றச்சாட்டுகளில் அவருக்கும் பங்கு இல்லையா?

14. தங்களின் உயிருக்கு உயிரான பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகளின் தமிழீழப் போராட்டத்தை கடுமையாக எதிர்த்தவர் ம.பொ.சி என்பது உங்களுக்கு தெரியுமா?

இப்படி இந்த கேள்விகளுக்கெல்லாம் யாராவது ஒரு தமிழ்தேசிய தோழர் பதில் கூறினால் நன்று. அல்லது பல தோழர்கள் சேர்ந்து குழுமி கலந்துரையாடி இக்கேள்விகளுக்கு பதில் அளித்தாலும் மிக நன்றாக இருக்கும்.

எவ்வளவுதான் தமிழ்தேசியம் எனும் போர்வையில் பார்ப்பனியத்தின் கொள்கைகளை திராவிடத்திற்கு எதிராக பரப்பி அதை ஒழித்துவிட வேண்டும் என்று நினைத்தாலும் திராவிடம் வேர்விட்டு வளரும் கம்பீரமான ஆலமரம் போல் தழைத்து நிற்கும். வந்தார்கள் வென்றார்கள் போலவே திராவிடத்தை அழிப்போம் ஒழிப்போம் என்று சொன்னவர்களும் வருவார்கள் போவார்கள் அவ்வளவே!

வாழ்க தமிழ்! தமிழ் வெல்லும்.


திராவிடன்

No Comments

Post a Comment

Your email address will not be published.