0

Enter your keyword

இலங்கை தமிழர்களுக்கு எதுவுமே செய்யவில்லையா திராவிடம்?

இலங்கை தமிழர்களுக்கு எதுவுமே செய்யவில்லையா திராவிடம்?

இலங்கை தமிழர்களுக்கு எதுவுமே செய்யவில்லையா திராவிடம்?

இலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படாததைக் கண்டித்து கலைஞர் உண்ணாவிரதம்.

இன்று சமூக வலைத்தளங்களில்  ‘நாம் தமிழர்’ தம்பிகள் திராவிட கட்சிகளை, ஈழ தமிழர்களுக்காக எதுவுமே செய்யவில்லை என்று கூக்குரலிடுகின்றார்கள். திராவிடக் கட்சிகளின் துரோகத்தால் தான் இன்று ஈழமே வீழ்ந்தது என்பதை போன்றதொரு தோற்றத்தையும் ஏற்படுத்தி வரலாறு தெரியாத இன்றைய இளம் தலைமுறையினரின் மனதில் திராவிட எதிர்ப்பை ஆழமாக விதைத்து வருகின்றனர்.

‘நாம் தமிழர்’ தம்பிகள் கூறுவது போல இவ்வளவு ஆண்டுகள் திராவிட கட்சிகள் ஈழத்தமிழர்களுக்காக ஒன்றுமே செய்ததில்லையா?

50 வருடங்களாக அக்கட்சிகளின் ஆட்சியே தமிழகத்தில் நடைபெறுவதால் இத்தகைய குற்றச்சாட்டுகள் வைப்பது வாடிக்கை என்றாலும், ஈழ தமிழக தலைவர்களும், போராளி குழுக்களும் தமிழ்நாட்டில் தங்கி, பொருள் மற்றும் பண உதவிகள் பெற்று போராட்டங்கள் நடத்தியதும் இங்கு உள்ள திராவிட கட்சிகளின் உதவியோடுதான்.

அது மட்டுமல்லாமல் பல வித அறவழி போராட்டங்கள் தமிழகத்தில் பல முறை நடத்தி இக்கட்சிகள் அதில் வெற்றியும் பெற்று இருக்கின்றன.

இலங்கை தமிழர்களுக்காக ஒன்றுமே செய்ததில்லையா திராவிட கட்சிகள்?

செய்தன. திமுகவும், அதிமுகவும் நிறைய பணம் மற்றும் பொருள் உதவி செய்தாலும், எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றி படுக்கையில் முடங்கிய பிறகு அதிமுக அவ்வளவாக ஈழ தமிழர் பிரச்சினைகளை கண்டுகொள்ளவில்லை. ஆனால் தொடக்கம் முதல் இன்று வரை தமிழ்நாட்டில் இருந்து ஈழத்தமிழர் பெற்ற நன்மைகளில் திராவிட முன்னேற்ற கழகத்தின் பங்கு தான் அதிகம் என்று சொன்னால் மிகையாகாது. ஆளும் கட்சியாக இருந்தபோதும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சரி; குறிப்பாக ஈழப்பிரச்சினையில் அதிகபட்ச இழப்பை சந்தித்தது திமுகவும் அதன் தொண்டர்களும் தான்.

ராஜீவ்காந்தி படுகொலையை அடுத்து வந்த தேர்தலில் திமுக ஆட்சியை இழந்தது, விடுதலைப்புலிகள் ஆதரவு என்கின்ற குற்றச்சாட்டால்தான்.

கட்சி அலுவலகம் முதல் பல திமுகவினரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு நடுத்தெருவுக்கு குடும்பம் குடும்பமாக வந்ததும் விடுதலை புலிகள் ஆதரவு என்பதால் தான் .

ஒன்றிய அரசு திமுகவின் ஆட்சியை கலைத்ததும் இலங்கை தமிழர் ஆதரவு நிலைப்பாட்டால்தான்.

சரி திமுக களத்தில் செய்தவற்றை தேதி வாரியாக பார்ப்போமா?

1956-ல் சிதம்பரத்தில் நடைபெற்ற திமுக மாநாட்டில், “இலங்கையில் தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ  வழிவகை செய்யவேண்டும்” என்று வலியுறுத்தும் தீர்மானத்தை முன்மொழிந்தவர் கலைஞர் கருணாநிதி

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, 1970-களில் இலங்கைத் தமிழர் தொடர்பான  கலைஞர் கருணாநிதியின் அணுகுமுறையில் போர்க்குணம் மிளிரத் தொடங்கியது. போராளிகளுக்கு நேரடியாக ஆதரவுக்கரம் நீட்டியது திமுக.

திரு. செல்வநாயகத்துக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் இடையே ஆழமான நட்பும் அரசியல் உரையாடலும் இருந்தன. 1977-ல் தவறிக் கீழே விழுந்து தலையில் அடிபட்டு நினைவிழந்த 79 வயது செல்வநாயகத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்புடன், தமிழகத்தின் தலைசிறந்த நரம்பியல் மருத்துவரை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைத்தார் கலைஞர் கருணாநிதி. ஆனாலும் செல்வநாயகத்தை காப்பாற்ற முடியவில்லை.

திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு 15.2.1976-ல் சென்னை கடற்கரைக் கூட்டத்தில் பேசிய அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, இலங்கையுடனான இந்தியாவின் நட்புறவு கெடுவதற்கு கருணாநிதி காரணமாக இருக்கிறார் என்றார். “திமுகவின் ஆட்சி கலைக்கப்பட அதுதான் காரணம் என்றால், அதைவிட பெருமையான ஒன்று திமுகவிற்கு இருக்க முடியாது” என்று இந்திராவுக்குப் பதிலடி கொடுத்தார் கலைஞர் கருணாநிதி.

1977 ஆகஸ்ட் 8 அன்று இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பல லட்சம்பேர் திரண்ட பிரம்மாண்டமான பேரணி கலைஞர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.

15.9.1981 அன்று இலங்கைத் தமிழர் விவகாரத்திற்காக எம்ஜிஆர் அரசால் கருணாநிதி கைதுசெய்யப்பட தமிழகம் முழுவதும் தொண்டர்கள் சிலர் தீக்குளிக்கும் அளவிற்க்கு அச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

1983ல் கொழும்பு சிறையில் குட்டிமணி, ஜகன் உள்ளிட்ட 35 தமிழர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு , சிங்கள வெறியாட்டம் உச்சகட்டத்தை அடைந்தபோது, சில மணி நேரங்களிலேயே சென்னையில் திமுக சார்பில் 8 லட்சம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

1983-க்குப் பிறகு இலங்கையிலிருந்து அகதிகளாகவும் உதவிகள் கோரியும் தமிழகக் கிராமப்புறங்களில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்களுக்கு, திமுக தொண்டர்கள் நேரடியாக ஆங்காங்கே மக்களை ஒருங்கிணைத்து உதவினர்.

05.08.1985 அன்று தமிழர்களுக்கு எதிராக இனவெறி கட்டவிழ்த்துவிடப்பட்டது. இலங்கையில்  தமிழர்களுக்கு எதிராக அரங்கேறிய இப்படுகொலைக்கு மத்திய அரசு அழுத்தமான கண்டனத்தைத் தெரிவிக்காததையும், இலங்கை சென்றிருந்த வெளியுறவுத் துறை அமைச்சர் நரசிம்மராவ் தமிழர் தலைவர்களைச் சந்திக்காமல் வந்ததையும் சுட்டிக்காட்டி 10.08.1985 அன்று கலைஞர் கருணாநிதியும், க.அன்பழகனும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்யும் அறிவிப்பை வெளியிட்டார்கள்.

23.08.1985-ல் சந்திரஹாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த மத்திய அரசு உத்தரவிட்டதை கண்டித்து, சென்னையில் திமுக பேரணி நடத்தியதை அடுத்து அவர்களை நாடுகடத்தும் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

1985ல் டெசோ அமைப்பு உருவாக்கபட்டது. அதே வருடம் இலங்கை தமிழர் பாதுகாப்பு மாநாடு நடத்தப்பட்டது.

03.06.1986ல் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் விழா ரத்து செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் உண்டியல் குலுக்கி ரூ.2.75 லட்சத்தைப் போராளி இயக்கங்களுக்கு கருணாநிதி பகிர்ந்தளித்தார்.

15.10.1987-ல்’ சென்னையில் அறிவகத்தில் தொடங்கி, பெரியார் சிலையருகில் நிறைவுற்ற ஐந்து லட்சம் மக்கள் கலந்துகொண்ட பேரணியில் கலைஞர் கருணாநிதி உரையாற்றினார்.

15.03.1989-ல் டெல்லியில் பிரதமர் ராஜீவ் காந்தியை இரண்டு முறை சந்தித்து ஈழத்தமிழர் பிரச்சினைக்காக முதலமைச்சர் கருணாநிதி விரிவாக விவாதித்தார்

30.03.1990-ல் சட்ட மன்றத்தில், “இந்திய அமைதிப்படை தமிழகம் வந்தபோது, தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி ஏன் வரவேற்க செல்லவில்லை?” என்று கேள்வி கேட்டார்கள். பிரபாகரன் எழுதிய கடிதத்தைப் படித்துக்காட்டிய கருணாநிதி, “இந்திய ராணுவம் தமிழர்களையே தாக்கி நசுக்கிட முயற்சித்ததால்தான் வரவேற்கச் செல்லவில்லை” என்று பதிலளித்தார். இந்திய வரலாற்றில் தன் இன மக்களுக்காக இப்படிப் பேசிய ஒரு முதல்வர் இல்லவே இல்லை.

03.01.1991 விடுதலைப்புலிகளுக்கு நாட்டின் ரகசியங்கள் தெரிவிப்பதாக கூறி திமுகவின் ஆட்சி கலைக்கப்பட்டது.

23.04.2008ல் சட்ட மன்றத்தில் இலங்கையில் அமைதி ஏற்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை கலைஞர் கருணாநிதி முன்மொழிந்து நிறைவேற்றினார். பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து திமுகவைச் சார்ந்த மத்திய அமைச்சர்கள் பேசினர்.

06.10.2008-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு இனப்படுகொலையை  உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி கேட்டுக்கொண்டார்.

சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இலங்கைத் தமிழர் பிரச்சினையில்  பல்வேறு  கட்சிகளின் தலைவர்களும் தமிழ் மக்களும் ஒரே உணர்வில் நின்று இந்த ஆபத்துக்கு விடை காண்போம் என்று கலைஞர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.

14.10.2008-ல் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக்கூட்டி கருத்தறிந்தார்.

24.10.2008-ல் சென்னையில் திமுக சார்பில் பிரம்மாண்டமான மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது

12.11.2008ல் இலங்கை தமிழர்களுக்காகச் சட்டமன்றத்தில் தீர்மானத்தை கலைஞர் கருணாநிதி முன்மொழிந்து நிறைவேற்றினார்.

04.12.2008 தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக்கொண்டு, கருணாநிதி
டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பக் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, 21.02.2009-ல் சென்னையிலும், மாவட்டத் தலைநகர்களிலும் திமுக இளைஞர் அணி சார்பில் பிரம்மாண்டமான இளைஞர் சங்கிலி நடத்தப்பட்டது.

09.04.2009-ல் சென்னையில் மாபெரும் பேரணிநடைபெற்றது.

24.04.2009-ல் கருணாநிதி வேண்டுகோளை ஏற்று தமிழகம் முழுதும் வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது.

28.04.2009 ல் இலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படாததைக் கண்டித்து, கலைஞர் கருணாநிதி அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் தொடங்கினார். இலங்கை அரசிடம் பேசிவிட்டதாகவும் பேரழிவு தரும் ஆயுதங்கள் ஒருபோதும் பயன்படுத்தப்படாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே உறுதியளித்திருப்பதாக இந்திய அரசு உறுதியளித்ததின் விளைவாக உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.

கடைசி கட்டமாக   ராஜினாமா செய்யவும் தயாராக இருந்தார், அப்படிச் செய்தால், இந்திய அரசை வற்புறுத்த உள்ள வாய்ப்பும் பறிப்போகும் என்று பலரும் சொல்லவே கைவிட்டார்.
இதற்குப் பின் தமிழினத் துரோகியாக  கலைஞரையும், திமுகவையும் கட்டமைத்து தேர்தலில் திமுகவுக்கு எதிரான மிகப் பெரிய ஆயுதமாக அதிமுகவுக்கு அது பயன்பட்டது. இலங்கைத்தமிழர் நலம் சார்ந்து, வேறு எந்தக் கட்சிகளையும்விட திமுக பன்னெடுங்காலப் போராட்டத்தைத் தன்னுணர்வோடு நடத்திவந்துள்ளது என்பதே வரலாறு சொல்லும் உண்மை.
உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் நலன்களுக்கான உரிமைக் குரலை அது என்றும் எதிரொலித்திருக்கிறது. தாய்த் தமிழ் நிலத்திலிருந்து உதவிகளை எதிர்பார்க்கும் தமிழர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் எந்த அளவுக்கு ஒருங்கிணைந்து செயல்படுகிறோம் என்பதில்தான் நம்முடைய வெற்றி – தோல்வி இருக்கிறது என்பதையே கடந்த கால அனுபவங்கள் சொல்கின்றன.

அவ்வாறாக இன்று பொறுப்பில் உள்ள திமுக அரசு, அத்தமிழர்களுக்கு புதுவாழ்வு அளிக்கவும் ஏதுவாக எடுத்துவரும் சமீபத்திய முயற்சிகள் நம்பிக்கை தருகின்றன.


திராவிடன்

No Comments

Post a Comment

Your email address will not be published.